அமித் ஷாவிற்கே ஆட்டம் காட்டும் வித்தை.. பால் தாக்கரேவின் செல்ல பிள்ளை சஞ்சய் ராவத்.. யார் பாஸ் இவரு?
Recommended Video
மும்பை: மஹாராஷ்டிராவில் பாஜக கட்சியின் சிம்ம சொப்பனமாக சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் உருவெடுத்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் இன்னும் ஆட்சி அமைக்க முடியாமல் பாஜக திணறி வருகிறது. அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது.
மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது. சிவசேனா ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது.

யார் இவர்
மஹாராஷ்டிராவில் பாஜகவை ஆட்சி அமைக்க விடாமல் தடுத்து வரும் தலைவர்களில் முக்கியமானவர் என்றால், அது சிவசேனா கட்சியின் ராஜ்ய சபா எம்பி சஞ்சய் ராவத்தான். இவர்தான் சிவசேனா எம்எல்ஏக்களை பாதுகாத்து வருகிறார். பாஜகவிற்கு எதிராக தேர்தல் முடிவு வந்த நாளில் இருந்தே மிக கடுமையாக இவர்தான் காய் நகர்த்தி வருகிறார்.

அரசியல் பயணம்
சிவசேனா கட்சியில்தான் இவர் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். 2004ல் இவர் பால் தாக்கரேவின் ஆதரவை பெற்று கட்சியில் மூத்த உறுப்பினர் என்ற நிலையை அடைந்தார். அதோடு ராஜ்யசபா எம்பியாக தேர்வானார். அந்த நாளில் இருந்தே இவருக்கு கட்சியில் பெரிய மரியாதை இருக்கிறது.

சஞ்சய் ராவத்
பால் தாக்கரே, சஞ்சய் ராவத்தை தன்னுடைய இன்னொரு மகனாக பார்த்தார் என்றும் கூறுவார்கள். அதற்கு ஏற்றப்படியே சஞ்சய் ராவத் கட்சிக்கு மிகவும் கட்டுப்பட்டு விசுவாசமாக இருந்தார். பால் தாக்கரே மரணத்திற்கு பின் சிவசேனா கட்சியில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இடையில் சண்டை வந்தது.

நின்றார்
அப்போது உத்தவ் தாக்கரே பக்கம் நின்றவர் சஞ்சய் ராவத். இப்போது சிவசேனா வலிமையாக இருக்க சஞ்சய் ராவத் மிக முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சஞ்சய் ராவத் பல முறை மிக மோசமாக சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். பால் தாக்கரேவை விமர்சித்த பெண்களை கைது செய்தது சரிதான் என்று இவர் பேட்டி அளித்தார்.

இஸ்லாமியர்கள் எப்படி
அதேபோல் இஸ்லாமியர்களை எல்லோரும் வாக்கு வங்கியாக பயன்படுத்துகிறார்கள். அதனால் இஸ்லாமியர்களின் வாக்கை தடை செய்ய வேண்டும். அவர்களுக்கு வாக்குரிமை அளிக்க கூடாது என்றும் சஞ்சய் ராவத் பேசியது சர்ச்சையானது.

சிவசேனா பத்திரிக்கை
அதேபோல் சிவசேனாவின் பத்திரிக்கைகளில் ஒன்றான சாமனாவில் இவர் எடிட்டராக இருக்கிறார். இதில் பல சர்ச்சைக்குரிய கட்டுரைகளை எழுதி இருக்கிறார் சஞ்சய் ராவத். பால் தாக்கரே வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான தாக்கரே படத்தின் திரைக்கதை இவர் எழுதியதுதான்.

பின்புலம்தான்
இவ்வளவு பின்புலத்தை கொண்டு இருப்பதால்தான் சிவசேனா கட்சியினர் இவர் சொல்வதை எல்லாம் தட்டாமல் கேட்கிறார்கள். அமித் ஷா அதனால்தான் இவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகிறார். உத்தவ் தாக்கரேவும் சஞ்சய் ராவத் சொல்வதை எல்லாம் அப்படியே கேட்பதற்கும், அதை பின்பற்றி நடப்பதற்கும் இதுதான் காரணம் என்றும் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications