'அடுத்தடுத்து மூன்று டோஸ் போட்டனர்'.. மகா. பெண் பகீர் புகார்.. நடந்தது என்ன?.. விசாரணைக்கு உத்தரவு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு பெண் தனக்கு ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று டோஸ் போடப்பட்டதாக குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இறுதிகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் கொரோனாவை தடுப்பதில் தடுப்பூசிகளே மிகப்பெரிய ஆயுதமாக இருந்துள்ளது.
நாடு முழுவதும் முதலில் தடுப்பூசி போடுவதில் மிகுந்த தயக்கம் காட்டிய மக்கள் தற்போது மிக ஆர்வமாக தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

அடுத்தடுத்து மூன்று டோஸ்
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஒரு பெண், கடந்த 25-ம் தேதி அருகில் உள்ள தடுப்பூசி மையத்துக்கு சென்றார். அப்போது தனக்கு அடுத்தடுத்து மூன்று டோஸ் போடப்பட்டதாக அந்த பெண் குற்றம்சாட்டி உள்ளார். ஆனால் தானே குடியுரிமை அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

கடும் காய்ச்சல்
அந்தப் பெண் இதுபோன்ற எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர், அதே வேளையில் அந்த பெண்ணின் கணவர் வைபவ், முதல் டோஸுக்குப் பிறகு யாரும் தனது மனைவியை எழுந்திருக்கச் சொல்லவில்லை. எனவே அவர் தொடர்ந்து மூன்று முறை தடுப்பூசி போடப்பட்டதாக கூறினார். மனைவிக்கு மாலையில் காய்ச்சல் வந்தது. குடும்ப மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்து எடுத்துக் கொண்டார்' என்று கூறியுள்ளார்.

பெண் நன்றாக இருக்கிறார்
இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் குஷ்பூ தவ்ரி ஒரு குழுவுடன் பெண்ணின் வீட்டுக்கு சென்று சோதனை செய்தார். அப்போது அந்த பெண் நன்றாக இருக்கிறார் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக சுகாதார அதிகாரி டாக்டர் குஷ்பூ தவ்ரி கூறியதாவது:- நாங்கள் செய்தி கிடைத்த உடனேயே அங்கு சென்று அந்த பெண்ணை இரண்டு முறை கவனமாக பரிசோதித்தோம். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை கண்டுபிடித்தோம். அவருக்கு இரத்த அழுத்தம் மற்றும் துடிப்பு வீதமும் சாதாரணமாக இருந்தது. தடுப்பூசி மையத்தில் உள்ள செவிலியர்களிடம் கூட நாங்கள் கேள்வி எழுப்பினோம், விசாரணைக்கு ஒரு குழுவை அமைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

விசாரணைக்கு உத்தரவு
இதன் பின்னர் அந்த பெண்ணின் கணவர் ''அதிகாரிகள் எங்களுக்கு நிறைய உதவி சசெய்துள்ளனர். எனது மனைவி நலமாக இருக்கிறார். எனவே இது தொடர்பாகவழக்குத் தாக்கல் செய்ய விரும்பவில்லை' என்று கூறினார். இந்த சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவ துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications