மும்பையில் 85% கொரோனா படுக்கைகள் காலி.. சாதித்துக் காட்டிய மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே
மும்பை: மகாராஷ்டிர முதல் உத்தவ் தாக்கரேவின் துணிச்சலான நடவடிக்கைகள் காரணமாக அங்கு கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. தலைநகர் மும்பையில் சுமார் 85% படுக்கைகள் காலியாக உள்ளன.
இந்தியாவில் கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை என இரண்டிலும் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு மாநிலம் என்றால் அது மகாராஷ்டிரா தான். கடந்த ஏப்ரல்- மே காலகட்டத்தில் அங்கு கொரோனா உச்சமடைந்தது.
தினசரி வைரஸ் பாதிப்பு சுமார் 60 ஆயிரம் வரை கூட சென்றது. இதையடுத்து அங்கு ஊரடங்கிற்கு இணையான 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொரோனா 2ஆம் அலை
இந்தியாவிலேயே கொரோனா 2ஆம் அலை காரணமாக ஊரடங்கை முதலில் அறிவித்த மாநிலம் என்றால் அது மகாராஷ்டிரா தான். அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் இந்த முடிவுக்கு முதலில் கூட்டணி கட்சியினரே ஆதரவாக இல்லை, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இருப்பினும் 2ஆம் அலையை ஊரடங்கு மூலமே கட்டுப்படுத்த முடியும் என உத்தவ் தாக்கரே நம்பினார்.

85% படுக்கைகள் காலி
உத்தவ் தாக்கரே எடுத்த துணிச்சலான நடவடிக்கைகள் காரணமாக இப்போது அங்கு வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. தலைநகர் மும்பையில் மொத்தம் 23,270 கொரோனா படுக்கைகள் உள்ளன. அதில் 85%, அதாவது 19,411 படுக்கைகள் காலியாக உள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. 55 ஐசியு படுக்கைகளும், வென்டிலேட்டர் வசதி கொண்ட 47% படுக்கைகளும் தற்போது காலியாக உள்ளன.

உயிரிழப்புகள் இல்லை
அங்குள்ள பல மருத்துவமனைகளில் தினசரி கொரோனா உயிரிழப்புகள் கடந்த சில நாட்களாகப் பூஜ்ஜியமாக உள்ளது. இது குறித்து KEM மருத்துவமனை டீன் ஹேமந்த் தேஷ்முக் கூறுகையில், "கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துவிட்டது. இதனால் மற்ற சிகிச்சைகளை நாங்கள் தொடங்கியுள்ளோம். கொரோனா பாதிப்பு இல்லாமல் இதர நோய்களால் பாதிக்கப்பட்ட 500 நோயாளிகளுக்கு இப்போது நாங்கள் சிகிச்சை அளித்து வருகிறோம்" என்றார்.

அறுவை சிகிச்சை
மகாராஷ்டிராவில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்ட சமயத்தில் மருத்துவமனைகளில் கட்டாயம் செய்ய அறுவை சிகிச்சைகளை தவிர, மற்ற அறுவை சிகிச்சைகள் ஒத்தி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இப்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அறுவை சிகிச்சைகளும் மீண்டும் நடத்தப்படுகிறது.

நகராட்சி தொழிலாளர்கள்
அதேபோல கொரோனா பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நகராட்சி பணியாளர்களை இதர பணிகளுக்கு விடுவிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளதாக மும்பை கூடுதல் முனிசிபல் கமிஷனர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதம் மும்பையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் 112% வரை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications