ஆப்ரேஷன் "கமல்"! எம்எல்ஏக்கள் கடத்தல்! ரவுடி தாக்கியதில் ஒரு எம்எல்ஏ-வுக்கு மாரடைப்பு! சிவசேனா பகீர்
மும்பை: மகாராஷ்டிராவில் இப்போது பெரிய அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் சில அதிர்ச்சி தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட அதே நிலை இப்போது மகாராஷ்டிராவிலும் ஏற்பட்டுள்ளது. சுமார் 3 ஆண்டுகள் எவ்வித குழப்பமும் இல்லாமல் சென்று கொண்டிருந்த மகாராஷ்டிராவில் இப்போது சிக்கல் எழுந்துள்ளது.
முதலில் ராஜ்யசபா தேர்தலிலும், அடுத்து மகாராஷ்டிரா மேல் சபை தேர்தலிலும் சிவசேனா எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்ததே இந்தச் சிக்கலுக்குத் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

மகாராஷ்டிரா
இந்தச் சூழலில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேற்றைய தினம் திடீரென மாயமானார். சிவசேனா தரப்பால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. முதலில் அவருடன் சேர்ந்து சுமார் 13 சிவசேனா கட்சி எம்.எல்.ஏக்கள் மாயமானதாக கூறப்பட்டது. இதற்கிடையே நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய ஷிண்டே, தனக்குக் கட்சியை உடைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தன்னிடம் 40 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளதாகவும் கூறி பரபரப்பைக் கிளப்பினார். ஏனென்றால் சிவசேனாவிடம் மொத்தம் இருப்பதே 56 எம்எல்ஏக்கள் தான்!

அழுத்தம்
மகாராஷ்டிர அரசியலில் இப்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சூழல் உருவாகி உள்ளது. அடுத்த சில நாட்கள் மகாராஷ்டிர அரசியலில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் சிவசேனா மூத்த தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவத் பாஜகவை மறைமுகமாகச் சாடி உள்ளார். அரசுக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்பதற்காக ஏக்நாத் ஷிண்டேவுக்கு அழுத்தம் தரப்பட்டதாகவும் சூரத்தில் இருக்கும் குறைந்தது இரண்டு எம்எல்ஏக்கள் காவல்துறையால் தாக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

ஆப்ரேஷன் கமல்
மேலும், "ஆபரேஷன் கமல்" திட்டத்தின் கீழ் சில எம்எல்ஏக்கள் தவறாக வழிநடத்தப்பட்டு குஜராத்திற்கு கடத்திச் செல்லப்பட்டதாகவும் அவர் சாடினார். இது குறித்து அவர் கூறுகையில், "நிதின் தேஷ்முக் உட்பட ஷின்டே உடன் இருக்கும் இரு எம்எல்ஏக்கள் நேற்றிரவு தாக்கப்பட்டனர். தேஷ்முக் தப்பி ஓட முயன்றார், ஆனால் அவர் 'ஆபரேஷன் கமலின்' கீழ் போலீஸ் மற்றும் குண்டர்களால் தாக்கப்பட்டார் இதன் காரணமாக அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டது. சிலருக்கு எம்.எல்.ஏ.க்கள் தவறாக வழிநடத்தப்பட்டு குஜராத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக எங்களிடம் சொன்னார்கள்.

நிர்ப்பந்தம்
சிவ சேனாவின் சில எம்.எல்.ஏக்களுடன் ஷிண்டே சூரத்தில் முகாமிட்டுள்ளார். மத்திய அரசின் அமைப்புகள் ஷிண்டேவுக்கு அழுத்தம் கொடுத்தது. வேறு வழியின்றி, நிர்ப்பந்தங்கள் காரணமாகவே ஷிண்டே இதுபோன்ற நடந்து கொண்டு இருக்கலாம். இப்போது சூரத்தில் இருக்கும் எம்எல்ஏக்கள் பலரும் தங்களைத் தவறாக வழிநடத்திக் கூட்டிச் சென்றதாக எங்களிடம் போன் செய்து கூறினர். எனவே, அங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் எல்லாம் இல்லை.

ஏமாற்றி
தானேவில் (திங்கட்கிழமை) இரவு உணவிற்கு அழைக்கப்பட்டதாகவும், பின்னர் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர். மாயமாகி உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள். தங்கள் கணவர்கள் மற்றும் தந்தைகள் காணாமல் போனது குறித்து போலீசிலும் புகார் அளித்துள்ளனர். அமலாக்க இயக்குநரகத்திலிருந்து எனக்கும் தான் நோட்டீஸ் வந்துள்ளது.

சரியாகும்
ஆனால் நான் எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணியவில்லை. ஆனால், எனது தாயைப் போன்ற சிவசேனாவில் இருந்து நான் ஒருபோதும் விலகமாட்டேன். ஷிண்டேவின் நிர்ப்பந்தங்களை நான் அறிவேன்! அவருடன் 14 அல்லது 15 எம்எல்ஏக்கள் சென்றுள்ளனர். இது கட்சிக்கு எதிரான நடவடிக்கை என்பதால் சட்டசபையில் சிவ சேனாவின் குழுத் தலைவர் பதவியில் இருந்து ஷிண்டே நீக்கப்பட்டார். நிலைமை விரைவில் சரியாகும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications