திடீரென பயமுறுத்தும் XE வகை கொரோனா! இது வேற மாதிரி ரகம்! எவ்வளவு ஆபத்தானது? அறிகுறிகள் என்ன?
மும்பை: இந்தியாவில் முதல் நபருக்கு XE வகை கொரோனா இருப்பதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆனால் இதை இந்திய ஜீனோம் கூட்டமைப்பு தரப்பு மறுத்துள்ளது.. இப்போதான் மாஸ்க் போட வேண்டாம்னு சொன்னாங்க.. அதுக்குள்ள இது என்ன XE வகை கொரோனா.. ஏன் பாஸ் புதுசா பீதியை கிளப்புறீங்க என்று நீங்கள் கேட்பது புரிகிறது. வாருங்கள் இது என்ன வகை என்று பார்க்கலாம்!
Recommended Video
மும்பைக்கு தென் ஆப்ரிக்காவில் இருந்து வந்த பெண் ஒருவருக்குதான் இந்த XE கொரோனா ஏற்பட்டுள்ளது என்பதுதான் மும்பை மாநகராட்சி தரப்பு வாதம். அந்த பெண்ணுக்கு 50 வயது ஆகிறது. இணை நோய்கள் இல்லை.
மும்பைக்கு வந்ததும் அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதன் ரிசல்ட் நெகட்டிவ். அவருக்கு ஏற்கனவே வேக்சிங் இரண்டு டோஸ் போடப்பட்டுவிட்டது.

கொரோனா
இந்த நிலையில் மீண்டும் அலுவலகம் செல்லும் முன் டெஸ்ட் எடுக்க சொல்லியதால் டெஸ்ட் எடுத்து இருக்கிறார். அந்த டெஸ்டில் அவருக்கு பாசிட்டிவ் வந்து இருக்கிறது. அதில் XE கொரோனா என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்தியாவின் ஜீனோம் கூட்டமைப்பு இதை மறுத்துள்ளது. அவரின் ஜீனோம் சோதனையில் அப்படி எந்த முடிவும் வரவில்லை என்று கூறியுள்ளது. சரி அது என்ன XE கொரோனா.

XE கொரோனா
கொரோனா.. அல்லது எந்த வகை வைரஸாக இருந்தாலும் அது இரண்டு வகைகளில் உருமாற்றம் அடையும். முதல் வகை ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கும் செல்லும் போது ஏற்படும் உருமாற்றம். இதை subtle mutation என்பார்கள். அதாவது லேசான உருமாற்றம். டெல்டா, பீட்டா, காமா எல்லாம் இப்படி வந்ததுதான். அதிலேயே ஒருவருக்கு இரண்டு கொரோனா ஒரே சமயத்தில் ஏற்படுகிறது. அல்லது இரண்டு கொரோனா அடுத்தடுத்து ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.

XE கொரோனா எப்படி உருவானது
இந்த இரண்டு கொரோனாவும் கலப்பு திருமணம் செய்தால்.. அதை major mutation என்பார்கள். அதாவது recombination வகை கொரோனா. இந்த டெல்டாவும், ஓமிக்ரானும் சேர்ந்து டெல்டாகிரான் என்று ஒரு வகை உருவானதே.. அதுவும் இப்படிப்பட்ட recombination வகை கொரோனாதான். அதாவது கலப்பு கொரோனா. இது கிட்டத்தட்ட புதிய வைரஸ் போல இருக்கும். இப்போது பரவும் XE கொரோனா இதே கலப்பு வகைதான். இது ஓமிக்ரானின் இரண்டு BA.1-BA.2 உருமாற்றம் இணைந்து உருவான புதிய வைரஸ்தான் இது.

XE கொரோனா வகைகள்
ஓமிக்ரானில் மொத்தமாக மூன்று உட்பிரிவு உள்ளது. அவை BA.1, BA.2, மற்றும் BA.3. இதில் இந்தியாவில் BA.1 பரவி வந்தது. ஓமிக்ரான் BA.2 என்பதுதான் ஸ்டெல்த் ஓமிக்ரான் ஆகும். இந்த முதல் இரண்டு வகையும் இணைந்து உருவான குழந்தைதான் XE கொரோனா. இந்த XE கொரோனா 10 சதவிகிதம் வேகமாக ஓமிக்ரானை விட பரவ கூடியது என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக உலக சுகாதார மையம் கூறியுள்ளது.

XE கொரோனா இந்தியா
XE கொரோனா முதல் முறையாக யுகேவில் கடந்த ஜனவரி 19ம் தேதியே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. மொத்தம் 600 கேஸ்கள் இதுவரை அங்கு XE கொரோனா மூலம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் XD, XE மற்றும் XF மூன்று வகையான கலப்பு கொரோனா உள்ளன. இதில் XD என்பது டெல்டா, ஓமிக்ரானின் BA.1 சேர்ந்து உருவானது. இதுவும் கூட பிரான்ஸ் போன்ற நாடுகளில் பரவி வருகிறது. மூன்றாவது வகையான XF என்பது டெல்டா, ஓமிக்ரானின் BA.2 இணைந்து உருவானது. இது பிரிட்டனில் சில இடங்களில் பரவுகிறது.

XE கொரோனா அறிகுறிகள் என்ன
இரண்டாவது வகையான XEதான் இந்தியாவில் பரவுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு வீரியம் என்பது உறுதியாகவில்லை. போக போக கேஸ்கள் அதிகம் ஏற்பட்டால் மட்டுமே தெரியவரும். தாய்லாந்து, நியூசிலாந்தில் கூட இந்த கேஸ்கள் ஏற்பட்டுள்ளன. இதன் அறிகுறிகள் என்று பார்த்தால் லேசான காய்ச்சல். சிலருக்கு மோசமான காய்ச்சல். நீங்கள் போட்டு இருக்கும் வேக்சினை பொறுத்து அறிகுறிகள் மாறலாம். காய்ச்சல், இருமல், வறண்ட தொண்டை, சளி, தோல் அரிப்பு, முகம் நிறம் மாறுதல் ஆகியவை அடிப்படையான அறிகுறிகள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications