'டெல்டா பிளஸ்' 3ஆம் அலை ஏற்படுமா? வேக்சின் போட்டவர்களை தாக்குகிறது.. ஷாக்கிங் ரிப்போர்ட்
மும்பை: மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. கொரோனா வேக்சின் 2 டோஸ் போட்டவர்கள் மத்தியிலும் வைரஸ் பாதிப்பு ஏற்படுவதால், இதனால் எங்கு கொரோனா 3ஆம் அலை ஏற்படுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் டெல்டா கொரோனாவால் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைரஸ் பாதிப்பு உச்சத்திலிருந்தது.
தினசரி வைரஸ் பாதிப்பு 4 லட்சம் வரை சென்றது. மருத்துவமனைகள் முழுவதும் கொரோனா நோயாளிகளால் நிரம்பியதால், நாட்டின் சுகாதார உட்கட்டமைப்பில் பெரியளவில் அழுத்தம் ஏற்பட்டது.

மகாராஷ்டிரா
முதல் அலையைப் போலவே இரண்டாம் அலையிலும் மகாராஷ்டிரா தான் மோசமாகப் பாதிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதத்திலேயே மகாராஷ்டிராவில் வைரஸ் பாதிப்பு கணிசமாக உயரத் தொடங்கியது. அதன் பின்னரே நாட்டின் பிற மாநிலங்களிலும் கொரோனா 2ஆம் அலை உச்சத்தைத் தொட்டது. கொரோனா 3ஆம் அலை பற்றிய தகவல்களும் வெளியாகி வரும் இந்தச் சூழலில் மகாராஷ்டிராவில் இப்போது டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்டா பிளஸ்
மகாராஷ்டிராவில் இதுவரை 75 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல டெல்டா பிளஸ் கொரோனாவால் அங்கு ஐந்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. அதேநேரம் 65 வயதைக் கொண்ட மற்ற இணை நோய் உள்ளவர்கள் மட்டுமே டெல்டா பிளஸ் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதையும் மருத்துவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா வேக்சின்
அதேபோல வேக்சின் போட்டுக் கொண்டவர்கள் மத்தியிலும் கொரோனா பாதிப்பு ஏற்படுவது புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. கொரோனா வேக்சின்களில் இருந்து தப்பும் ஆற்றல் டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு இருப்பதாக இதுவரை எந்தவொரு ஆய்வுகளிலும் உறுதி செய்யப்படவில்லை. அதேநேரம் வரும் காலங்களில் உருவாகும் புதிய உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா திரிபுகள் வோக்சின்களில் இருந்து தப்பும் ஆற்றலைப் பெறவும் வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

என்ன பாதிப்பு
டெல்டா பிளஸ் கொரோனா வேக்சிகளில் இருந்து தப்பினாலும்கூட, அவை லேசான கொரோனா பாதிப்பையே ஏற்படுத்துகிறது. அதாவது கொரோனா வேக்சிகள் தீவிர கொரோனா பாதிப்பையும் உயிரிழப்புகளையும் தடுக்கிறது. இதில் அனைத்து வேக்சின்களும் இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து உருமாறிய கொரோனா வகைகளுக்கு எதிராகவும் சிறப்பான பலனைத் தருவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

டெல்டா பிளஸ் என்றால் என்ன
டெல்டா கொரோனா வகையைப் போலவே டெல்டா பிளஸ் கொரோனாவும் முதலில் இந்தியாவில் தான் கண்டறியப்பட்டது. டெல்டா கொரோனாவின் மற்றொரு பிறழ்வு தான் டெல்டா பிளஸ் கொரோனா. இது K417N என்ற கூடுதல் ஸ்பைக் புரத திரிபைக் கொண்டுள்ளது. இதன் மூலம் கொரோனா வைரசால், நமது உடலில் உள்ள செல்களுடன் வலுவான ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது. இந்த டெல்டா பிளஸ் கொரோனைாவிலும்கூட 13 பிறழ்வுகள் உள்ளன. அதில் AY.1, AY.2 மற்றும் AY.3 ஆகிய பிறழ்வுகள் மகாராஷ்டிராவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிகிச்சை என்ன
ஒருவருக்குத் தீவிரமான டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அவருக்கு மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சை தேவைப்படும். இந்த ஆன்பாடி மருந்தின் விலை மட்டும் 60 ஆயிரம் ரூபாயாகும். கடந்த ஆண்டு முன்னாள் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது அவருக்கு இந்த சிகிச்சை முறை தான் பயன்படுத்தப்பட்டது. அதேநேரம் டெல்டா பிளஸ் கொரோனா எந்தளவுக்கு வேகமாகப் பரவுகிறது என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை.

கொரோனா 3ஆம் அலை
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு எதிராகச் செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. மற்ற வேக்சிகளும் டெல்டா கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் அதிகம் கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நாட்டில் இதுவரை 86 பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கணிசமாக அதிகரித்து வந்தாலும்கூட, இதன் மூலம் இந்தியாவில் 3ஆம் அலை ஏற்படுமா என்பது இனி வரும் காலத்தில் தான் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications