"நாய் சாப்பிட்டுடுச்சு.. அம்மை வேற".. சுருண்ட உயிர்கள்.. 100 வருஷமாக "பொங்கல்" வைக்காத கிராமம்.. ஓஹோ
நாமக்கல் அருகே பொங்கல் கொண்டாடாத கிராம மக்கள் சில காரணங்களை சொல்கிறார்கள்
நாமக்கல்: தமிழகமே பொங்கல் கொண்டாட்டத்தில் மூழ்கி திளைத்து வரும்நிலையில், சிங்கிலிப்பட்டி என்ற கிராமம் சத்தமின்றி, களையின்றி இயல்பாக காணப்படுகிறது.. என்ன காரணம்?
எத்தனையோ வருடங்களாக தீபாவளி பண்டிகையை கொண்டாடாத கிராமங்கள் பற்றி நாம் கேள்விப்பட்டு வருகிறாம்.. குறிப்பாக, நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் கிராமத்தில் பறவைகள் வாழ்வதற்காகவே, தங்களது பண்டிகைகளையே கொண்டாடாமல் தியாக மனப்பான்மையோடு பொதுமக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கூந்தன்குளம் கிராமத்தில் அதிக அளவில் பறவைகள் வந்து செல்வதால் இந்த கிராமத்தை அரசு பறவைகள் சரணாலயமாக அறிவித்தது... இந்த கிராமத்தில் குளங்கள், தெருக்களில் உள்ள மரங்களில் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து செல்வது, காலங்காலமாக நடந்து வருகிறது.

தீபாவளி
இதனால் எந்த ஒரு திருவிழா நடந்தாலும், பறவைகளை அச்சுறுத்தாத வகையில் லைட்டுகளை வைத்து மட்டும் அக்கிராமத்தினர் கொண்டாடி வருகின்றனர்.. அதுமட்டுமல்ல, இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. அந்த காலத்தில் வறுமையால் கடன் வாங்கி விவசாயம் செய்த இவர்கள், அறுவடைக்கு பிறகு, கடனை செலுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.. எனவே, அந்த கால கட்டத்தில் வந்த தீபாவளியையும் கடன் வாங்கியே கொண்டாடியதால், கடைசியில் 2 கடன்களையும் செலுத்த முடியாமல் திணறியுள்ளனர்.. எனவே, கடனில் இருந்து மீட்க முடிவு செய்த கிராம மக்கள், விவசாயப் பணி காலத்தில் வரும் தீபாவளியை கொண்டாடுவதில்லை என்றும், அதற்கு பதிலாக அறுவடைக்கு பிறகு வரும் பொங்கலை சிறப்பாக கொண்டாடுவது என்று முடிவு செய்தனர்.

எட்டுப்பட்டி
ஆனால், இங்கே ஒரு கிராமம், பொங்கல் கொண்டாடுவதையே தவிர்த்துள்ளது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.. நாமக்கல் மாவட்டம் சிங்கிலிப்பட்டி கிராமம்.. ராசிபுரம் அடுத்த அத்தனூர், ஆயிபாளையம், கோம்பக்காடு, அத்தனூர்புதூர், தட்டான்குட்டைபுதூர், ஆலங்காடுபுதூர், உடும்பத்தான்புதூர் மற்றும் தாசன்புதூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள எட்டுப்பட்டி கிராமங்களில் 3000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்... கடந்த நூறு வருடங்களுக்கு முன்பு, இந்த கிராமத்தை சேர்ந்த முன்னோர்கள், பொங்கலை சிறப்பாகத்தான் கொண்டாடி வந்துள்ளனர்.. ஆனால், அந்த சமயத்தில், சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துவிட்டதாம்.

நாய் தின்றுவிட்டது
ஒருமுறை சுவாமிக்கு வைக்கப்பட்ட படையல் பொங்கலை நாய் தின்றுவிட்டது.. இதை அபசகுணமாக கருதிய கிராம மக்கள், அந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டத்தை தவிர்த்துவிட்டனர்.. இதனால் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடி உள்ளனர்.. மாட்டுப் பொங்கல் தினத்தன்று, எட்டுப்பட்டி கிராமங்களில் உள்ள மாடுகள் மற்றும் மனிதர்களுக்கு திடீரென அம்மை நோய் வந்துவிட்டதாம்.. அந்த அம்மை நோய் தாக்கியதில் ஏராளமானோர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

கோமாரி
அதனால்தான், தை பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் தினத்தை கொண்டாடினால், தங்களுக்கும், தங்கள் விலங்குகளுக்கு ஏதாவது ஆபத்து நடந்து விடுமோ? என்ற பயத்தில் இப்போதுவரை பொங்கலையே கொண்டாடாமல் இருந்து வருகிறார்களாம்.. இதை பற்றி அம்மக்கள் சொல்லும்போது, "எங்கள் முன்னோர்கள் தைப்பொங்கல், மாட்டுப் பொங்கலை சிறப்பாக கொண்டாடினர்.. மாடுகளுக்கு பொங்கல் வைத்து மாடுகளை அலங்கரித்து விழாவை கொண்டாடினர். அப்போது திடீரென்று மாடுகளுக்கு அம்மை நோய், கோமாரி போன்ற நோய்கள் தாக்கிவிட்டன.. மனிதர்களுக்கும் அம்மை நோய் தாக்கியதால் ஏராளமானோர் உயிரிழந்துவிட்டனர்.

தீர்த்தங்கள்
அதனால், அத்தனூர் அம்மன் கோவிலுக்கு சென்ற எட்டுப்பட்டி கிராம மக்கள், அம்மனை வழிபட்டு கோவிலில் இருந்த தீர்த்தங்களை கொண்டு வந்து தெளித்ததன் மூலம் கிராம மக்கள் அம்மை நோய்களிலிருந்து உயிர்தப்பினர்.. மாடுகளுக்கு பொங்கல் வைப்பதற்கு பதிலாக, அரிசியை பச்சையாகவும், வாழைப்பழங்களையும் தந்து கொண்டாடி வருகிறோம்" என்கிறார்கள். இதனிடையே, 10 வருடங்களுக்கு முன்பு, சிங்கிலிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினாராம்..

கறவை மாடுகள்
அப்போது, அவரது வீட்டில் இருந்த கறவை மாடு திடீரென இறந்துபோய்விட்டதால், பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை முற்றிலுமாக தவிர்த்து விட்டதாக சொல்கிறார்கள்.. கிராமக் கோயில் திருவிழாதவிர, எந்த பண்டிகை தொடர்பான விழாவும் இந்த கிராமத்தில் நடத்துவதில்லையாம்.. கிராமத்தைச் சேர்ந்த பெண்களையும், வெளியூர்களில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளனர் என்றாலும், அவர்களும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை என்கிறார்கள். சமீப காலமாக இளைஞர்கள் விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டு வருவதால், ஒரு சிலர் பொங்கல் வழிபாடு நடத்த துவங்கி உள்ளார்களாம்..!!












Click it and Unblock the Notifications