பொன்னையன் வரப்போறார்.. ஐந்தாறு மாஜிக்களும் ஓபிஎஸ் பக்கம் வருவார்கள்.. சீக்ரெட் உடைத்த புகழேந்தி!
நாமக்கல் : அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு வரப்போகிறார். அவர் இனி இங்கேதான் இருக்கப்போகிறார் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
மேலும், ஐந்தாறு முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து விலகி ஓபிஎஸ் பக்கம் வரப்போகிறார்கள் என்றும் கூறியுள்ளார் புகழேந்தி.
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக உள்ள எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், முனுசாமி, தங்கமணி உள்ளிட்டோர் பற்றி அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன் பேசிய ஆடியோ சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற ஓபிஎஸ் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற புகழேந்தி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

தங்கமணி வேலுமணிக்கு நன்றி
அப்போது பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் செயலை கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் கூர்ந்து கவனித்து வருகின்றனர். நான்கு ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இல்லை. நான்கு ஆண்டுகளும் முதலமைச்சராக செயல்பட்டவர்கள் தங்கமணியும், வேலுமணியும் தான். அதிமுகவின் ஒப்பற்ற தலைவராக வழி நடத்தக்கூடியவராக ஓபிஎஸ்ஸை உருவாக்கி இருப்பதே அவர்கள் தான். இதற்காக தங்கமணிக்கும், வேலுமணிக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜாதியின் பின்னால்
ஓ.பன்னீர்செல்வம் தான் இந்தக் கட்சியை திறம்பட வழிநடத்திச் செல்வார். அதிமுக என்ற இயக்கம் எப்போதும் ஜாதியின் பின்னால் போனதில்லை. இப்போது ஜாதி அமைப்பாக அதை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதை மக்களும், அதிமுக தொண்டர்களும் விரும்பமாட்டார்கள்.

பொன்னையன் ஓபிஎஸ் பக்கம்
ஐந்தாறு முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் எங்கள் பக்கம் வரப்போகிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ பொன்னையன் எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டார். பொன்னையன் சொன்னதுபோல் நம்மால் சொல்ல முடியாது. ஓபிஎஸ் அணிக்கு பொன்னையன் வருவார். இங்கே தான் இருக்கப்போகிறார். அது நடக்கத்தான் போகிறது.
Recommended Video

கதையை முடித்து விடுவார்கள்
சசிகலா இணைந்து செயல்படுவது குறித்து காலம் பதில் சொல்லும். தேர்தல் வரும்போது நல்ல முடிவு வரும். அணி இரண்டாகவே இருந்து எடப்பாடி பழனிசாமி அணி வாக்கு கேட்கச் சென்றால் மக்கள் அவர்கள் கதையை முடித்து விடுவார்கள். எடப்பாடி பழனிசாமி துரோகி என எண்ணும் மக்கள் அவருக்கு ஓட்டு போட மாட்டார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications