பெரிய ஆட்டக்காரனா இருப்பானோ.. நாய்க்கு முன்பு 'டிஸ்கோ டான்ஸ்' ஆடிய வெட்டுக்கிளி.. கலக்கல் வீடியோ
நியூயார்க்: அமெரிக்காவில் சோகமாக இருக்கும் நாயை மகிழ்விப்பது போல வெட்டுக்கிளி ஒன்று அதன் முன் சென்று நடனம் ஆடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இணையதளமும், சமூக வலைதளங்களும் அனைவரின் கையிலும் உலவி வருவதால் உலகின் நடக்கும் பல விசித்திர சம்பவங்களை நாம் கண்டு வருகிறோம்.
செவி வழியாக கேட்டிருந்தால் நிச்சயம் நம்ப முடியாத சில சம்பவங்கள், நம் கண்களுக்கு முன்னால் வந்து நம்மை ஆச்சரியப்படுத்தி வருகின்றன. மான் குட்டியை வேட்டையாக சென்ற சிங்கம் திடீரென மனம் மாறி அதனை தாய் போல பராமரித்து வளர்ப்பது; தன்னை வேட்டையாட வந்த கழுதைப் புலியை வரிகுதிரை கடித்து குதறுவது போன்ற பல ஆச்சரிய வீடியோக்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

சோகத்தில் இருந்த நாய்
அந்த வகையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்திருக்கும் சம்பவம் காண்பவர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது.
நியூயார்க் நகரில் வசித்தும் வரும் ரிச்சர்ட்சன் என்ற ஐடி ஊழியர், தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வருகிறார். இதனிடையே, ரிச்சர்ட்சன்னின் மனைவியும், குழந்தைகளும் சில தினங்களுக்கு முன்பு வெளியூர் சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் தன்னுடன் விளையாட ஆள் இல்லாமல் ஒரு சில நாட்களாகவே அந்த நாய் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

விளையாட வந்த வெட்டுக்கிளி
சாப்பாடு வைத்தாலும் சரியாக சாப்பிடாமல், வெளியே கூட்டிச் சென்றாலும் வீட்டை விட்டு வெளியே வராமல் சோகமாக இருந்துள்ளது. நாயை எப்படியாவது சகஜநிலைக்கு கொண்டு வருவதற்கு ரிச்சர்ட்சன்னும் பல முயற்சிகளை மேற்கொண்டார். ஹுஉம்.. எதுவும் பலனிக்கவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில் அவர்களின் வீட்டுக்கு 'ப்ரேயிங் மேன்ட்டீஸ்' (praying mantis) என அழைக்கப்படும் பெரிய அளவிலான வெட்டுக்கிளி ஒன்று வந்துள்ளது. இந்த வெட்டுக்கிளி அடிக்கடி அவர்களின் தோட்டத்துக்கு வந்து செல்லும் வெட்டுக்கிளி ஆகும்.

கண்டுகொள்ளாத நாய்
அப்படி அந்த வெட்டுக்கிளி தோட்டத்துக்கு வரும் போது, எப்போதாவது வீட்டுக்குள் வந்துவிடும். அந்த சமயங்களில் எல்லாமல், அந்த நாய் வெட்டுக்கிளியை விளையாட்டாக துரத்துவதும், வெட்டுக்கிளி நாய் மீது அமர்ந்து விளையாடுவதும் வாடிக்கையாக இருந்துள்ளது. அந்த வகையில், நேற்று அப்படி வந்த வெட்டுக்கிளி, நாய் தன்னை துரத்தி விளையாடும் என எதிர்பார்த்துள்ளது. ஆனால், நாய் தான் சோகத்தில் இருக்கிறதே.. அந்த வெட்டுக்கிளியை அது கண்டுகொள்ளவே இல்லை.

அசத்தல் நடனம்
நாய் இப்படி சோர்ந்து போய் இருப்பதை பார்த்திராத அந்த வெட்டுக்கிளி என்ன நினைத்ததோ, திடீரென அந்த நாய்க்கு முன்னாள் சென்று அழகாக தனது முன்னங்கால்களை தூக்கி சில நிமிடங்கள் நடனமாடியது. இதை பார்த்த ரிச்சர்ட்சன் அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இந்தக் காட்சியை பார்க்கும் போது சோகமாக இருக்கும் நாயை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக வெட்டுக்கிளி நடனமாடியதை போலவே தெரிகிறது.
ஆனால் சோகம் என்னவென்றால், வெட்டுக்கிளியின் நடனத்தை பார்த்து அந்த நாய் எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. மேலும் நாயின் ரியாக்ஷனை பார்க்கும் போது, "இவன் வேற நேரம் காலம் தெரியாம காமெடி பண்ணிட்டு இருக்கான்" என நினைப்பதை போல இருக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டீசன்களின் கலகலப்பான கமெண்டுகளை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications