மேட்டுப்பாளையம்- குன்னூர் மலை ரயிலுக்கு 125 வயது! 16 குகைகள், 250 பாலங்களை கடக்கும் சூப்பர் ரயில்
நீலகிரி: மேட்டுப்பாளையம்- குன்னூர் நீலகிரி மலை ரயில் இயக்கம் தொடங்கி 125 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் ஆர்வலர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மலை ரயில் வழியாக இயற்கையின் அழகை ரசிக்க வேண்டும் என்பதுதான். இந்த மலை ரயில் சேவை 1899 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு தொடங்கியது.

இந்த நிலையில் நேற்றைய தினம் 125 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த மலை ரயில் உருவாக காரணமாக இருந்தவர் பிரிட்டிஷ் மேற்பார்வை பொறியாளர் ஜே.எல்.எல்.மோரன்ட் என்பவர்தான்.
இவர் 1886ஆம் தேதி ஜூன் 17ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நோய் வாய்ப்பட்டு மோரன்ட் இறந்தார். 1899 ஆம் ஆண்டு மலை ரயில் சேவை தொடங்கிய போது மோரன்ட் உயிருடன் இல்லை. குன்னூரில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயம், வெலிங்டன் தேவாலயம், கூடலூர் புரோட்டஸ்டன்ட் தேவாலயம், லாரன்ஸ் மற்றும் பிரீக்ஸ் பள்ளிகள், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நுழைவாயில் கட்டடம் ஆகியவை மோரன்ட்டால் கட்டப்பட்டவைகளாகும்.
இத்தனை வரலாற்று சிறப்பு வாய்ந்த கட்டடங்களையும் ரயில் சேவைகளையும் உருவாக்கிய மோரன்ட்டின் புகைப்படம் நமக்கு கிடைக்கவில்லை. ஆயினும் ஆண்டுதோறும் மேட்டுப்பாளையம்- குன்னூர் மலை ரயில் சேவை தொடங்கிய நாளில் மோரன்ட்டை நினைக்காதவர்களே இருக்க மாட்டார்கள்.
ஆசியாவிலேயே இன்று வரை பல்சக்கரங்களில் இயங்கும் ஒரே மலை ரயில் நீலகிரி மலை ரயில்தான். இந்த நீலகிரி மலை ரயில் 208 வளைவுகளின் வழியாக வளைந்தும் நெளிந்தும் 16 குகைகளுக்குள் புகுந்து வெளியேறி 250 பாலங்களை கடந்து 5 மணி நேரம் பயணிக்கிறது.
நீராவி என்ஜின் மூலம் இந்த ரயில் இயக்கப்பட்டது. மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே உள்ள பாதை மிகவும் சரிவான பாதை என்பதால் தண்டவாளங்களுக்கிடையே பல்சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதை பற்றிக் கொண்டே ரயில் இயங்குகிறது. 125 ஆவது ஆண்டையொட்டி மலை ரயில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. கேக் வெட்டி இந்த நாளை சுற்றுலா பயணிகள் கொண்டாடி மகிழ்ந்தனர். இதனுடன் அமர்ந்து பலர் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications