கொட்டித்தீர்க்கும் கனமழை.. நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி: தொடர்மழை நீடிப்பதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால்
பகல் நேரங்களிலும் தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நீலகிரியில் தொடர் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கூடலூர் பகுதிகளில் 23 செமீ மழை கொட்டித்தீர்த்தது. பலத்த காற்றால் கூடலூரில் சாலைகளில் மரம் விழுந்து கேரளா, கர்நாடகாவுக்குமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாலங்கள் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கூடலூர், பந்தலூர், உதகை, குந்தா ஆகிய தாலுகா பள்ளிகளுக்கு கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டது.

கனமழை வெள்ளம்
கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில், வரலாறு காணாத கனமழை காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மசினகுடி செல்லும் தரப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனிடையே, வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் ராமச்சந்திரன், முகாம்களில் தங்கியுள்ள பழங்குடியினர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

காற்றுடன் கனமழை
உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் இடை விடாத பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ள நீர் கரை புரண்டு பாய்கிறது.

பாலம் மூழ்கியது
ஆற்றைக் கடக்க பயன்படுத்தப்பட்டு வந்த தெப்பக்காடு பாலம் நீரில் மூழ்கியிருப்பதால் மக்கள் ஆற்றைக் கடக்க ஜே.சி.பி இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். முழு கொள்ளளவை எட்டிய குந்தா, கெத்தை ஆகிய அணைகளிலிருந்து உபரி நீரை வெளியேற்றி வருகின்றனர் அதிகாரிகள்.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் தொடர் மழை காரணமாக கூடலூர் பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்
இந்த நிலையில், இன்னும் சில தினங்கள் மாவட்டத்தில் மழைப் பெய்ய வாய்ப்புள்ளதால் இரவு நேரங்களில் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் மேலும் பகல் நேரங்களிலும் தேவையில்லாமல் யாரும் வெளியில் வர வேண்டாம் என்றும்,காற்றின் தாக்கம் இருக்கும் என்பதால் மரங்கள் தடுப்பு சுவர்கள் அருகில் நிற்க வேண்டாம் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் அறிவுறுத்தியுள்ளார்.

முகாம்களில் மக்கள்
நீலகிரி மாவட்டத்தில் அபாயகரமான மரங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊட்டி, கூடலூர் சாலையோரங்களில் உள்ள மரங்கள் மட்டுமின்றி, கோத்தகிரி செல்லும் சாலைகளிலும் உள்ள அபாயகரமான மரங்கள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூடலூர் பகுதியில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஊட்டி, கூடலூரில் சில குடும்பங்களை முகாம்களில் தங்க வைத்திருக்கிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று மாவட்ட ஆட்சியர் அம்ரித் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications