பீகாரில் பரபர- நவ.3 இடைத்தேர்தலுக்குப் பின் லாலு, நிதிஷ் கட்சிகள் ஆர்ஜேடி,ஜேடியூ ஒன்றாக இணையும்?
பாட்னா: பீகார் மாநிலத்தில் நவம்பர் 3-ந் தேதி நடைபெறும் இரு சட்டசபை தொகுதிகளின் முடிவுகள் அம்மாநில அரசியலில் மிகப் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடும் என்கின்றன ஊடக செய்திகள்.
பீகாரில் நிதிஷ்குமாரின் ஜேடியூ, லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி, இடதுசாரிகள், காங்கிரஸ் இணைந்து மெகா கூட்டணி அரசாங்கத்தை அமைத்துள்ளன. அதாவது பாஜகவுக்கு எதிராக பெரும்பாலன எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்துள்ளன.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு இது முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் பாஜக, அதிமுக அல்லாத எதிர்க்கட்சிகள் திமுக தலைமையில் ஓரணியில் நிற்கின்றன. இதே பார்முலாதான் பீகாரில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பாஜகவை விரட்டி நாட்டை முன்னேற்றுவோம்.. சோனியாவை சந்தித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சூளுரை

நிதிஷின் ஜேடியூ நிலைமை
முன்னதாக பாஜகவுடன் ஜேடியூ கூட்டணி அமைத்திருந்தது. என்னதான் கூட்டணி கட்சி என்றாலும் ஜேடியூவை மெல்ல மெல்ல கரைத்து குழிபறித்து அதன் வலிமையை குறைத்தது பாஜக. இதனால் பீகாரில் ஜேடியூ கட்சியானது ஆர்ஜேடி, பாஜகவுக்கு அடுத்ததாக 3-வது இடத்தில்தான் இருக்கிறது. இதனாலேயே பாஜகவை காலத்துக்கும் எழுந்திருக்க விடாமல் செய்ய ஜேடியூவை ஆர்ஜேடியுடன் இணைக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. இது தொடர்பான விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

பீகார் அரசியல் களம்
பீகாரில் தம்முடைய கட்சியின் தலைவராக இருந்த சரத்யாதவை நிதிஷ்குமார் வெளியேற்றி இருந்தார். இதனால் சரத்யாதவ் தனிக் கட்சி தொடங்கினார். ஆனால் அதே சரத் யாதவை அண்மையில் டெல்லியில் நிதிஷ்குமார் ஆரத் தழுவி வரவேற்றார். இதனால் பீகார் அரசியலில் எதுவும் எப்போதும் சாத்தியம் என்ற நிலைதான் உள்ளது.

நவம்பர் 3 இடைத்தேர்தல்
இந்நிலையில்தான் நவம்பர் 3-ந் தேதி பீகாரில் மொகாமா, கோபால்கஞ்ச் ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த இரு தொகுதிகளிலுமே லாலுவின் ஆர்ஜேடி கட்சி வேட்பாளர்களை இறக்கி உள்ளது. ஆர்ஜேடி வேட்பாளர்களுக்கு எந்த வித சலசலப்பும் இல்லாமல் அத்தனை கட்சிகளும் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவித்துள்ளன.

எதிர்பார்ப்பு- என்ன நடக்கும்?
அதாவது பாஜக அல்லாத அத்தனை கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரை ஆதரிக்கின்றன. ஆகையால் இந்த 2 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பாஜகவை வீழ்த்தி அமோக வெற்றியை அத்தனை கட்சிகளும் இணைந்த கூட்டணி வென்றுவிட்டால் நிச்சயம் பீகாரிலும் சரி தேசிய அரசியலிலும் சரி திருப்பங்கள் நடைபெறலாம் என கணிக்கப்படுகின்றன. இதன் முதல் கட்டமாக லாலு- நிதிஷ் கட்சிகள் இணைந்தாலும் ஆச்சரியமில்லை என கூறப்படுகிறது.