என்ஜினியர்.. மின் வாரிய பணி.. பீகாரின் நீண்டகால முதல்வர்.. நிதிஷ் குமாரின் ஆச்சர்ய அரசியல் வாழ்க்கை!
பாட்னா : பீகார் மாநிலத்தின் முதல்வராக 8-வது முறையாக ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) தலைவர் நிதிஷ் குமார் நாளை பதவியேற்க உள்ளார். பாஜக உடனான கூட்டணியை முறித்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிதிஷ் குமார், ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து நாளை மீண்டும் முதல்வராகப் பதவியேற்க இருக்கிறார்.
பீகாரில் 2020ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக 77, ஜேடியூ 45 இடங்களில் வென்றன. தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தப்படி ஜேடியூ தலைவர் நிதிஷ் குமார் முதல்வராகப் பதவியேற்றார். நிதிஷ் குமார் அமைச்சரவையில் 16 பாஜக அமைச்சர்கள் இடம்பெற்றனர்.
பாஜகவுடன் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடுகள் நிலவிய நிலையில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக நிதிஷ்குமார் இன்று அறிவித்தார். அதன்பின்னர் ஆளுநரை நேரில் சந்தித்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்ப்வதாக கடிதம் அளித்தார்.
பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிய ஜேடியூவுக்கு ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி ஆதரவு அளித்துள்ளது. இதன்மூலம் பீகார் முதல்வராக 8-வது முறையாக பதவியேற்க உள்ளார் நிதிஷ் குமார். நிதிஷ் குமாரின் அரசியல் பயணம் குறித்துப் பார்ப்போம்.

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார் 1951ஆம் ஆண்டு பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்தியார்பூர் என்னும் ஊரில் பிறந்தவர். நிதிஷ் குமாரின் தந்தை கவிராஜ் ராம் லக்கன் சிங் சுதந்திரப் போராட்ட வீரர். பாட்னா அறிவியல் கல்லூரியில் படித்த நிதிஷ் குமார், பின்னர் பீகார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து எலெக்ட்ரிகல் என்ஜினியரிங் முடித்தார்.

மின் வாரியத்தில் பணி
பின்னர் பீகார் மாநில மின்சார வாரியத்தில் பணியில் சேர்ந்த நிதிஷ் குமார், தீவிர அரசியல் ஆர்வம் காரணமாக அரசுப் பணியில் இருந்து விலகி, அரசியலில் ஈடுபட்டார். ஜெயப்பிரகாஷ் நாராயணனின் இயக்கத்தினால் ஈர்க்கப்பட்ட நிதிஷ் குமார் அந்த இயக்கத்தில் பங்கு கொண்டு செயல்பட்டார். பின்னர் சத்யேந்திர நரேன் சின்ஹா தலைமையிலான ஜனதா கட்சியில் இணைந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து பிரித்த சமதா கட்சியில் செயல்பட்டார்.

முதல் முறையாக
நிதிஷ் குமார் 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வி அடைந்தார். 1985ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதல்முறையாக வெற்றி பெற்றார். 1996ஆம் ஆண்டு எம்.பியாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். மத்திய அரசில் ரயில்வே அமைச்சர் பதவியைப் பெற்றார். பின்னர், 1998-99ல் வாஜ்பாய் அரசில் விவசாயத்துறை அமைச்சராகவும் இருந்தார். ஆகஸ்ட் 1999ல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 2001 முதல் மே 2004 வரை நிதிஷ் குமார் மீண்டும் - மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தார்.

முக்கிய சாதனைகள்
ரயில்வே அமைச்சராக இருந்த குறுகிய காலத்தில், 2002இல் இணைய டிக்கெட் முன்பதிவு வசதி போன்ற பரவலான சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். ரயில்வே டிக்கெட் முன்பதிவு கவுன்டர்களைத் திறந்து உடனடியாக தட்கல் திட்டத்தை அறிமுகப்படுத்தியது இவர் ரயில்வே அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த முக்கியமான மாற்றமாகும்.

7 நாட்கள் மட்டும்
பீகார் முதல்வராக முதல் முறையாக 2000-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி முதல் வெறும் 7 நாட்கள் மட்டும் முதல்வராக இருந்தார் நிதிஷ் குமார். 324 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு 151 எம்எல்ஏக்களும், லாலு பிரசாத் யாதவுக்கு 159 எம்எல்ஏக்களும் இருந்தனர். இரண்டு கூட்டணிகளும் பெரும்பான்மைக்கான 163 ஐ விட குறைவாகப் பெற்றிருந்த நிலையில், நிதிஷ் குமார் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்பே ராஜினாமா செய்தார்.

15 ஆண்டுகள்
2003ஆம் ஆண்டில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரானார் நிதிஷ் குமார். அதன் பின்னர் 2005 தேர்தலில் வெற்றி பெற்று பீகார் மாநில முதல்வர் ஆனார். அதைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டிலும் பீகார் முதல்வராகப் பதவியேற்றார். 2014 லோக்சபா தேர்தலில் அவரது கட்சி மோசமான தோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது வரை தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் பதவி வகித்தார். 2015 அன்று நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சரானார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வென்று மீண்டும் முதல்வரானார் நிதிஷ் குமார்.

நீண்ட கால முதல்வர்
பீகார் முதல்வராக சுமார் 15 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார் நிதிஷ்குமார்.
பீகார் மாநில அரசியல் வரலாற்றில் நீண்டகாலம் முதல்வராக இருந்தவரும் நிதிஷ் குமார்தான். ஆட்சிக்காலம் இன்னும் 3 ஆண்டுகள் இருக்கும் நிலையில், பாஜக கூட்டணியில் ஏற்பட்டுள்ள மோதலால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அதே நாளில், காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார்.

8வது முறையாக
பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிய ஜேடியூவுக்கு ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி ஆதரவு அளித்துள்ளது. பாட்னாவில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த கூட்டணியின் தலைவராகவும் மாநில முதல்வராகவும் நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து மீண்டும் ஆளுநரை சந்தித்த நிதிஷ்குமார் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பாட்னாவில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் அம்மாநிலத்தின் முதல்வராக 8-வது முறையாக பதவியேற்க உள்ளார் நிதிஷ் குமார்.












Click it and Unblock the Notifications