பீகார் பாலம் மாயமான வழக்கு! எதிர்பாராத ட்விஸ்டால் அதிர்ந்த காவல்துறை! 8 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்
பாட்னா : பீகார் மாநிலத்தில் ஒரு முழு இரும்பு பாலமே திருடப்பட்ட சம்பவத்தில் பாலத்தை இடிக்க வந்த அதிகாரிகள் எனக் கூறி 3 நாட்கள் பாலம் உடைக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் நாசிரிங் எனும் பகுதியில் ஆற்றைக் கடந்து செல்ல 1972 ஆம் ஆண்டு சுமார் 60 அடி நீள இரும்பு பாலம் ஒன்று அமைக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக போக்குவரத்துக்காக பாலத்தை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், பல ஆண்டுகள் கடந்த நிலையில் இரும்பு பாலம் சேதமடைந்தது.

பாலம் மாயம்
இதையடுத்து அங்கு கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் இரும்பு பாலத்தில் பயணம் செய்வதை தவிர்த்து வந்தனர். இதனால் பயன்பாடு இல்லாமல் போன பாலம் மிகுந்த சேதம் அடைந்து காணப்பட்டது. சுமார் 600 டன் இரும்பு பொருட்களை கொண்டு 10 அடி அகலத்தில் 12 அடி உயரத்தில் 60 அடி நீளத்தில் அமைக்கப்பட்டிருந்த பாலம் நாளுக்கு நாள் சிதைய ஆரம்பித்தது. இதனால் போக்குவரத்து தவிர்க்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அங்கு இருந்த பாலம் திடீரென மாயமானது.

மக்கள் அதிர்ச்சி
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஒரு பாலத்தையே 3 நாட்களில் திருடிச் சென்றது யார் என கேள்வி எழுந்த நிலையில் இந்தியா முழுவதும் இந்த விவகாரம் பெரும் விவாதத்தை எழுப்பியது. பின்னர் அப்பகுதி மக்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பகலில் தான் இந்த பாலத்தை திருடர்கள் திருடிக் கொண்டு சென்றது தெரியவந்தது. குறிப்பாக பாலத்தை கொள்ளையடிக்க திட்டமிட்ட கொள்ளையர்கள் அரசு அதிகாரிகள் என கூறி இந்த நூதன திருட்டில் ஈடுபட்டதும் அம்பலமானது.

போலீசார் விசாரணை
ஆற்றில் கட்டப்பட்ட பழைய பாலம் பயன்பாட்டில் இல்லாததால் அதை அகற்ற அரசு முடிவு செய்ததாகக் கூறி மாநில நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் போல் நடித்த திருடர்கள் கும்பல், அசாதாரண திருட்டை நடத்தியுள்ளது. கொள்ளையர்கள், பிக்-அப் வேன்கள், கேஸ் கட்டர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்களுடன் வந்து, மூன்று நாட்களில், 50 ஆண்டுகள் பழமையான இரும்புப் பாலத்தை சிறிது சிறிதாக கொள்ளையடித்துள்ளனர். பின்னர் அதை ஸ்கிராப் மெட்டலாக பகுதிகளாக விற்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

அதிகாரி கைது
இந்நிலையில் பாலம் மாயமான வினோதமான திருட்டு சம்பவத்தில் திடீர் திருப்பமாக, பாலம் மாயமானதாக புகார் அளித்த அரசு அதிகாரியே போலிசாரால் கைது செய்யப்பட்டார். பாலம் மாயமானது தொடர்பாக கைது செய்யப்பட்ட எட்டு பேரில் மாநில நீர்வளத் துறையின் துணைப் பிரிவு அதிகாரி ஒருவர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு ஜேசிபி, திருடப்பட்ட 247 கிலோ இரும்பு சேனல்கள் மற்றும் பிற பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன என்று போலீசார் கூறியுள்ளனர். பாலம் திருடியது தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரி உட்பட 8 பேரை கைது செய்துள்ளோம். எஸ்டிஓவின் துணையுடன் திருடர்கள் பாலத்தை திருடியுள்ளனர். ஒரு ஜேசிபி, திருடப்பட்ட 247 கிலோ எடையுள்ள இரும்பு சேனல்கள் மற்றும் பிறவற்றை மீட்டுள்ளோம் என்று போலீஸ் அதிகாரி ஆஷிஷ் பார்தி கூறினார்.












Click it and Unblock the Notifications