பீகார்.. கோயில் கர்ப்பகிரகத்திற்குள் சென்ற முஸ்லீம் அமைச்சர்.. தீட்டானதாக அர்ச்சகர்கள் பரிகார பூஜை!
பாட்னா: விஷ்ணுபத் கோயிலின் கர்ப்பகிரகத்துக்குள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் நுழைந்ததால் கோயில் தீட்டுப்பட்டுவிட்டதாக கூறி அர்ச்சகர்கள் பரிகாரப் பூஜைகள் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார்மாநிலம் கயா நகரில் பல்கூ ஆற்றங்கரையில் விஷ்ணுபத் கோயில் அமைந்திருக்கிறது. 18-ம் நூற்றாண்டில் சீரமைக்கப்பட்ட இந்தக் கோயிலில், ராமனும் சீதையும் ஒன்றாக வந்து வழிபட்டதாக மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உண்டு. இந்த நிலையில் அண்மையில் பீகார் முதலமைச்சர் பதவியேற்ற நிதீஷ் குமார் விஷ்ணுபத் கோயிலுக்கு சென்றிருந்தார்.

அப்போது முதல்வர் நிதீஷ் குமாருடன் அம்மாநிலத்தின் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முகமது இஸ்ரைல் மன்சூரியும் சென்றிருந்தார். முன்னோர்கள் வழிபட ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்ச்சிக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக இருவரும் அந்தக் கோயிலுக்குச் சென்றிருந்தனர். அப்போது இருவரும் கோயில் கர்ப்பகிரகத்துக்குச் சென்று வழிபட்டுள்ளனர்.
இதுகுறித்து அமைச்சர் முகமது இஸ்ரைல் மன்சூரி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தற்செயலாகத்தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. அதேசமயம், விஷ்ணுபத் கோயிலுக்குள் முதல்வர் நிதீஷ் குமாருடன் சென்றததைப் பெருமையாக கருதுவதாக தெரிவித்தார்.
ஆனால், இந்து மதத்தினர் அல்லாத பிறர் இந்தக் கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை என்று கோயில் முன்பாக எழுதிவைக்கப்பட்டிருக்கும் நிலையில், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் எப்படி கோயிலுக்குள் நுழையலாம் என அக்கோயிலின் அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதையடுத்து, நேற்று கோயிலின் தரை தண்ணீர் ஊற்றி கழுவப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கடவுளுக்கு தீட்டுப்பட்டுவிட்டதாக கூறி பரிகார பூஜைகள், சடங்குகளையும் நடத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக, விஷ்ணுபத் கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் ஷம்புலால் கூறுகையில், மன்சூரி புதிதாக அமைச்சரானவர் என்பதால், அவர் கோயிலின் கர்ப்பகிரகத்துக்குள் நுழைந்தபோது அவர் யார் என யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. ஆனால் இந்து அல்லாத ஒருவர் இந்தக் கோயிலுக்குள் நுழைந்தது இதுதான் முதல் முறை.
இதனால் அமைச்சர் பதவியிலிருந்து மன்சூரி நீக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல் பாஜக தரப்பில் முதலமைச்சர் நிதீஷ் குமார் மற்றும் அமைச்சர் முகமது இஸ்ரைல் மன்சூரி ஆகியோர் மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications