தடையை மீறிய எச் ராஜா.. ரோட்டிலேயே கைது செய்த போலீஸ்.. பெரம்பலூர் அருகே பரபரப்பு.. பாஜக போராட்டம்
திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பாஜக மூத்த தலைவர் எச் ராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
பெரம்பலூர்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற பாஜக மூத்த தலைவர் எச் ராஜாவை பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை டோல்கேட்டில் வைத்து வைத்து போலீசார் திடீரென்று இன்று அதிரடியாக கைது செய்தனர். இதை கண்டித்து பாஜகவினர் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
பாஜக மூத்த தலைவராக இருப்பவர் எச் ராஜா. இவர் பாஜக சார்பில் நடக்கும் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். இந்த வேளையில் எச் ராஜா, ஆளும் திமுக மற்றும் அதனை கூட்டணி கட்சியினரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனை அவர் விமர்சனம் செய்தார். மேலும் மதுரையில் நேற்று அம்பேத்கரிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் எச் ராஜா பங்கேற்று இருந்தார்.

திருமாவளவனை சாடிய எச் ராஜா
அப்போது எச் ராஜா, ‛‛பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியேற வேண்டும். தமிழகத்துக்கு பட்டியலின மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை திமுக அரசு செலவு செய்யவில்லை. பட்டியலின மக்கள் மீது திருமாவளவனுக்கு அக்கறை இல்லை'' என காட்டமாக விமர்சித்து இருந்தார்.

விசிக எச்சரிக்கை
இந்நிலையில் தான் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் எச் ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எச் ராஜா பங்கேற்றால் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு, தலைவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

எச் ராஜா கைது
மேலும் பாஜக தலைவர்கள் அங்கு செல்வதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில் எச் ராஜா இன்று தனது காரில் திண்டிவனம் பொதுக்கூட்டத்துக்கு புறப்பட்டு சென்றார். இந்த தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து பெரம்பலூர் திருமாந்துறை டோல்கேட்டில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜாவை கைது செய்ய போலீசார் தயாராக இருந்தனர். அதன்படி அங்கு காரில் வந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

பாஜகவினர் போராட்டம்
இதையடுத்து எச் ராஜா அங்குள்ள மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். இதற்கிடையே போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து பாஜகவினர் திருமாந்துறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications