கரப்பான் பூச்சி கட்சி தலைமையை குறிவைக்கும் போலீஸ்? முக்கிய தலைவரின் குடும்பத்தினரிடம் விசாரணை?
டெல்லி: புதுச்சேரியில் தனது குடும்பத்தினர் வீட்டுக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தியதாகவும், மத்திய அரசின் உத்தரவின் பேரில் தனது குடும்பத்தினர் அச்சுறுத்தப்படுவதாகவும் கரப்பான் பூச்சி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக புதுச்சேரி போலீசார் விளக்கமளித்துள்ளது.
கடந்த மாதம் கரப்பான் பூச்சி கட்சி டெல்லியில் மிக பெரிய போராட்டத்தை நடத்தியது. இந்த போராட்டத்திற்கு நாடு முழுக்க ஆதரவு கிடைத்த நிலையில், வேறு வழியின்றி மத்திய அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய கரப்பான் பூச்சி கட்சியின் செய்தித்தொடர்பாளராகவும் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பவர் சவுரவ் தாஸ்.

குற்றச்சாட்டு
இவரது குடும்பத்தினர் புதுச்சேரியில் வசித்து வரும் சூழலில், புதுச்சேரி போலீசார் தனது குடும்பத்தினருக்கு தொல்லை கொடுப்பதாக சவுரவ் தாஸ் குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் பாஜக கூட்டணி என்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில், சவுரவ் தாஸ் குற்றச்சாட்டுகள் பகீர் கிளப்புவதாக இருக்கிறது.
புதுச்சேரி போலீசார் தனது குடும்பத்தினரிடம் சென்று பல்வேறு கேள்விகளை கேட்டதாக சவுரவ் தாஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும், "இரண்டு மணி நேரத்திற்கு முன்பு புதுச்சேரி போலீசார் எனது குடும்பத்தினர் வசிக்கும் வீட்டுக்கு வந்து பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளனர். ஏன் இந்த தொந்தரவு? இதற்கு யார் உத்தரவிட்டது? எதற்காக இந்த நடவடிக்கை? இது சட்ட நடைமுறையா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மிரட்டல்
மேலும், புதுச்சேரியில் உள்ள பாஜக கூட்டணி அரசு தனது குடும்பத்தினரை அச்சுறுத்துவதாக சவுரவ் தாஸ் குற்றம்சாட்டினார். அவர் மேலும், "எனது குடும்பத்தினரை புதுச்சேரி அரசு ஏன் அச்சுறுத்துகிறது? இது புதுச்சேரி அரசின் வழக்கமான அணுகுமுறை அல்ல. மத்திய அரசின் உத்தரவின் பேரில்தான் இது நடக்கிறது. என்னை அரசியலில் இருந்து பின்வாங்க செய்ய இதுபோல குடும்பத்தினரை வைத்து அழுத்தம் கொடுக்க முயல்கிறார்கள்.
என்னை அமைதியாக்குவது தான் நோக்கம் என்றால் அது ஒருபோதும் நடக்காது. இதுபோன்ற நடவடிக்கைகளால் நான் பின்வாங்க மாட்டேன். மாறாக, எங்களது முயற்சியை இது மேலும் வலுப்படுத்துகிறது. போலீசார் சட்டத்தை நிலைநாட்ட வேண்டுமே தவிர, குண்டர்களைப் போல செயல்படக் கூடாது. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அமித் ஷா புதுச்சேரிக்கு வந்திருந்தார். அப்போது அவர் புதுச்சேரி உள்துறை அமைச்சரையும் துணைநிலை ஆளுநரையும் சந்தித்தார். அந்த சந்திப்பின்போதே இந்த அச்சுறுத்தல் நடவடிக்கை திட்டமிடப்பட்டதா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விளக்கம்
மேலும், தனது குடும்பத்தினரிடம் எந்த அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாது. பலரும் புதுச்சேரி போலீசாரின் நடவடிக்கையை விமர்சித்தனர். இதற்கிடையே சவுரவ் தாஸின் குற்றச்சாட்டுகளுக்கு புதுச்சேரி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த விசாரணைகள் நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சவுரவ் தாஸ் வீடு மட்டுமின்றி. விஐபிக்கள் அடிக்கடி வந்து செல்லும் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் ஹோட்டல்களில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வழக்கமான விசாரணை
அந்த பகுதிகளில் புதிதாக யாரேனும் வந்து தங்கியுள்ளார்களா, வெளியில் இருந்து புதிய நபர்கள் யாராவது வந்துள்ளார்களா என்பதை உறுதி செய்வதற்காகவே இந்த விசாரணைகள் நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் நடத்தப்படும் வழக்கமான நடவடிக்கை மட்டுமே என்றும் குறிப்பிட்ட நபரை குறிவைத்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று போலீஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications
