புதுவையில் கூட்டணிக்கு தலைமை காங். தான்.. திமுக இல்லை.. தனித்து களமிறங்கவும் தயார்! நாராயணசாமி பரபர
புதுச்சேரி: காங்கிரஸ் மூத்த தலைவரும் புதுச்சேரி முன்னாள் முதல்வருமான நாராயணசாமி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடர்பாகக் கூறியுள்ள கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இந்தக் கூட்டணியில் தான் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. தேர்தலை முடிந்த பிறகும் கூட இந்தக் கூட்டணி தொடர்ந்து இணைந்தே பயணித்து வருகிறது.
இதற்கிடையே புதுச்சேரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எந்தக் கட்சித் தலைமை என்பது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான நாராயணசாமி அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
காவி அணியில் கதர்.. பாஜக அரசுக்கு நன்றி! தமிழக அரசுக்கு அதிகாரமில்ல! ஏழுவர் விடுதலை பற்றி நாராயணசாமி

நாராயணசாமி
இன்று புதுச்சேரியில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர் சந்தித்த முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவர் நாராயணசாமி, "புதுச்சேரியில் மக்கள் குடியிருப்பு, கோயில் மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு அருகே மதுபான கடைகளை அனுமதிக்கக் கூடாது என்று சட்டம் உள்ளது. இருப்பினும், இந்தச் சட்டத்தைத் துளியும் கடைப்பிடிக்காமல், அதை மீறி நூற்றுக்கணக்கான மதுபான கடைகளுக்கு விதிமுறைகளை மீறிக் குடியிருப்பு பகுதிகளில் திறக்க முதலமைச்சர் அனுமதி தந்துள்ளார்.

மதுபான கடைகள்
இது அப்பட்டமான விதிமீறல் தானோ தவிர வேறு எதுவும் இல்லை. புதுச்சேரியில் தடுக்கி விழுந்தால் சாராயக்கடை என்ற நிலைமையை உருவாக்கிவிட்டார் ரங்கசாமி.. புதுச்சேரியில் 350க்கும் மேற்பட்ட மதுபான கடைகளுக்கு லஞ்சம் பெற்றுவிட்டு, விதிமுறைகளை புறந்தள்ளி முறைகேடாக முதலமைச்சர் அலுவலகம் அனுமதி தந்துள்ளது. இந்த ஆட்சியில் கலால் துறை என்பது ஊழலின் மொத்த உறைவிடமாக மாறிவிட்டது துயரம்

யானை லட்சுமி மரணம்
புதுச்சேரியில் உயிரிழந்த மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமிக்கு அரசியல்வாதிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். ஆனால் லட்சுமி யானைக்கு அஞ்சலி செலுத்தாமல் முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி மாநில மக்களுக்கு அவமரியாதையை ஏற்படுத்தி இருக்கிறார்.. பிரசித்தி பெற்ற புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்கு விரைவில் புதிய யானைக் கொண்டு வர வேண்டும்.. இதைப் புதுச்சேரி அரசே செய்ய வேண்டும். ஒரு அரசு நினைத்தால் மட்டுமே விரைவாக அனுமதி பெற்று புதிய யானை வாங்க முடியும்..

புதிய யானை வாங்க வேண்டும்
விநாயகர் கோயிலுக்கு புதிய யானை வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். காங்கிரஸ் கட்சி சார்பில் கேரள முதலமைச்சரிடம் பேசி, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்கு புதிய யானை வாங்க அனுமதி பெற முயற்சி மேற்கொள்வோம்.. புதுச்சேரி மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப முதலமைச்சர் ரங்கசாமி யானை வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் காங்கிரஸ் சார்பில் முன்வைக்கிறேன்" என்றார்.

காங்கிரஸ் தான் தலைமை
தொடர்ந்து புதுச்சேரி கூட்டணி குறித்துப் பேசிய அவர், "புதுச்சேரி மாநிலத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி போராட்டம் என்று வந்தால் காங்கிரஸ் கட்சி தான் தலைமை ஏற்கும்.. சமீபத்தில் நடந்த இட ஒதுக்கீட்டுப் போராட்டங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக அமைப்பாளர் சிவா தலைமை ஏற்றதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்தன.. புதுச்சேரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிக்குக் காங்கிரஸ்தான் தலைமை.. அப்படி ஏற்காவிட்டால் தனித்துப் போட்டியிடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று நாராயணசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

புதுச்சேரி
புதுச்சேரிக்குக் கடந்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுடன் இணைந்து சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் கூட ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ் 10 இடங்களில் வென்றது. பாஜக உடன் இணைந்து ரங்கசாமி ஆட்சியை அமைத்தார். புதுச்சேரியில் திமுக 6 இடங்களை வென்றது. அதேநேரம் கடந்த தேர்தலில் 15 இடங்களில் வென்றிருந்த காங்கிரஸ் இம்முறை வெறும் இரண்டு இடங்களை மட்டுமே கைப்பற்றியது.