இந்திய ஒன்றியம்னு சொன்னோம்தான்- ஆனா புதுச்சேரி அரசைத்தான் குறிக்கும்.. தமிழிசையின் அடடே விளக்கம்
புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. என்.ஆர்,காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.ஆனால் ஆட்சி அமைத்து 50 நாட்களை கடந்த பின்னரும் அமைச்சரவையை தேர்வு செய்வதில் கடும் குழப்பம் நிலவியது.
இந்த நிலையில் 50 நாட்களுக்குப் பிறகு என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி யில் 5 அமைச்சர்கள் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டனர். அப்போது "இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப் பரப்பின் அமைச்சர் என்ற வகையில் கடமையாற்றுவேன்" என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாசிக்க, அமைச்சர்கள் அந்த வார்த்தையை திரும்பக் கூறி பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழ்நாடு அரசு மத்திய அரசு எனக்கூறாமல் ஒன்றிய அரசு என அழைத்து வரும் நிலையில் இந்திய ஒன்றியம் என்று புதுச்சேரி அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் குறிப்பிட்டது தொடர்பாகப் பலரும் பல்வேறு கருத்துகள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இந்திய ஒன்றியம் என கூறியது தொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

திரித்து கூறப்படுகிறது
இது தொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அரசியலமைப்புச் சட்டப்படி பல ஆண்டு காலமாக புதுச்சேரி அரசால் மரபாகப் பயன்படுத்தப்பட்ட தமிழ் உறுதிமொழிப் படிவத்தில் எந்த மாறுதலும் செய்யப்படாமல் தமிழில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இதில் இந்திய ஒன்றியம் என்ற வார்த்தை வேண்டுமென்றே திரித்துக் கூறப்படுகிறது. ஒன்றிய அரசு என்று ஆளுநர் கூறியதாகத் திரித்துக் கூறப்படுகிறது.

வெகுகாலம் பயன்படுத்துகிறோம்
தமிழக அமைச்சர்கள் பதவியேற்கும்போது, தமிழக அமைச்சர்களாகப் பதவியேற்கிறோம் என்று கூறுகிறார்களோ அதேபோல் "Indian union Territory of puducherry" என்ற வாசகம் "இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப் பரப்பு" என மொழிபெயர்க்கப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. இப்படிவம்தான் வெகுகாலமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து அதன் பின்பு இந்திய ஆட்சிக்கு உட்பட்டதால் அதை "Indian Union Territory" என்கிறார்கள்.

புதுச்சேரியைத்தான் கூறுகிறோம்
அதனால் ஒன்றியம் எனக் குறிப்பிடுவது யூனியன் பிரதேசமான புதுச்சேரியைத்தான். இங்கு எங்கேயும் மத்திய அரசு என்று குறிப்பிடவில்லை. மத்திய அரசை ஒன்றிய அரசு என்று ஆளுநர் கூறியதாகத் திரித்துக் கூறுகின்றனர்.புதுச்சேரி இந்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இருக்கும் நிலப்பரப்பு. அதனால்தான் இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப் பரப்பு என்று கூறுகிறோம். மாநில அரசுகளின் பதவியேற்பு படிவத்தில் மத்திய அரசு என்ற வார்த்தை இடம் பெறாது.

இறையாண்மையை குலைக்க வேண்டாம்
அவ்வாறு இருக்கையில், புதுச்சேரியில் மட்டும் ஒன்றிய அரசு என்று சொல்லப்பட்டது என்று கூறுவது உள்நோக்கம் உடையது. தமிழ் மண்ணில் தமிழில் பதவியேற்ற பெருமையை நிலைநிறுத்த வேண்டும். அதனால் அதன் மாண்பை மறைக்கும் அளவுக்குத் தவறாக இந்த ஒன்றியம் என்ற கருத்து பரப்பப்பட்டு வருகிறது. சில தேவையற்ற சலசலப்புகளால் பலரது தியாகத்தால் உருவான பலமான இந்திய இறையாண்மையைக் குலைக்க முயல வேண்டாம். இவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications