புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

144 தடையுத்தரவு ஏன்? உரிய விளக்கம் இல்லையென்றால் ரத்து செய்வோம்... புதுவை அரசை எச்சரிக்கும் ஹைகோர்ட்

Google Oneindia Tamil News

புதுச்சேரி: தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு குறித்துத் தெளிவுபடுத்தாவிட்டால் அது ரத்து செய்யப்படும் எனப் புதுச்சேரி அரசை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் என்பது அரசியல் சாசன அமைப்பு தானே தவிர அரசியல் கட்சியில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழகத்துடன் இணைந்து புதுவையிலும் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது, தேர்தலை முன்னிட்டு புதுவையில் இன்று (ஏப்ரல் 4) இரவு 7 மணி முதல் வரும் 7ஆம் தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் எனப் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் மார்ச் 22ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவு, தேர்தல் ஆணைய அனுமதியுடன் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு அவசர வழக்காக இன்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு

உயர் நீதிமன்றத்தில் வழக்கு

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.என்.சுமதி, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, அவசரநிலை என எவ்வித முறையான காரணங்களையும் குறிப்பிடாமல் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் பிறப்பித்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். மேலும், மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவின் ட்விட்டர் பதவிகளை, மாவட்ட ஆட்சியர் பலமுறை ரீட்வீட் செய்துள்ளதாகவும், பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படக்கூடியவராக இருப்பதால் இந்த உத்தரவு அரசியல் உள்நோக்கத்துடன் அவர் பிறப்பித்து இருப்பதாகவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதிகாரம் இருந்தால் என்ன

அதிகாரம் இருந்தால் என்ன

அப்போது புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாலா, தேர்தலை முன்னிட்டு 144 தடை பிறப்பிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்தார். இதை நீதிபதிகள் ஏற்க மறுத்து, அதிகாரம் இருக்கிறது என்பதற்காக நாங்கள் அனைத்து வழக்குகளிலும் மரண தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறோமா எனக் கேள்வி எழுப்பினார்கள். மேலும் விஷயத்தின் தன்மையை ஆராய்ந்து உரிய முடிவெடுக்க வேண்டும் என்றும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தினர்.

நீதிபதிகள் அதிருப்தி

நீதிபதிகள் அதிருப்தி

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், ஒவ்வொரு தேர்தலின் போதும் இதுபோன்ற உத்தரவு பிறப்பிப்பது வழக்கம்தான் என்று தெரிவித்தார். ஆனால் புதுச்சேரி அரசின் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அனுமதித்த தேர்தல் ஆணையத்திற்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், நீங்கள் தேர்தல் ஆணையம் தானே தவிர, அரசியல் கட்சி கிடையாது என்றும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

விளக்கம் தேவை

விளக்கம் தேவை

சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தினர். 144 தடை உத்தரவு ஏன் பிறப்பிக்கப்பட்டது என்று உரிய தெளிவுபடுத்துதலைப் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வெளியிடாவிட்டால், நீதிமன்றமே அதை ரத்து செய்யும் என நீதிபதிகள் எச்சரித்தனர் அப்போது புதுச்சேரி அரசு தரப்பில் 144 தடை உத்தரவு எதற்காக அமல்படுத்தப்பட்டது என்ற விளக்கத்தை வெளியிடுவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

English summary
Madras High Court about section 144 in Puducherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X