எடப்பாடியாவது பன்னீராவது.. எல்லாம் “ஜுஜூபி”! ஆர்ப்பாட்டத்தில் “ஸ்லிப்பான” அதிமுக மாஜி மா.செ. நாக்கு
ராமநாதபுரம்: அதிமுகவின் தலைவர் ஜெயலலிதா என்றும், எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஜுஜூபி எனவும் முதுகுளத்தூரில் நடைபெற்ற அதிமுக போராட்டத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர் பேசியதால் தொண்டர்கள் குழப்பமடைந்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த ஜூலை மாதம் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயுத தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.
அப்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் தொடரும். அதற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட உள்ளது." என்றார்.

கடும் எதிர்ப்பு
இதனை எதிர்த்து திமுக கூட்டணியான இடதுசாரிகள், பாமக, பாஜக ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிமுக நிர்வாகி சுந்தரபாண்டியன்
மின்கட்டண உயர்வை கண்டித்து பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். இந்த ஆர்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

ஈபிஎஸ், ஓபிஎஸ் ஜுஜூபி
அப்போது பேசிய அவர், "அதிமுகவில் ஜெயலலிதா மட்டுமே தலைவர். ஒபிஸ், இபிஎஸ் எல்லாம் ஜுஜூபி என்று கூறி உரையை முடித்தார். உடனே சுதாரித்துக் கொண்ட சுந்தரபாண்டியன் இபிஎஸ் பெயரை தவறாக சொல்லிவிட்டேன் டிடிவி தினகரன், சசிகலா என சொல்வதற்கு பதிலாக இப்படி கூறி விட்டேன் என தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்தார். இதனால் அந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

உட்கட்சிப்பூசல்
தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக திகழும் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களை அழைத்து பொதுக்குழு கூட்டத்தை கூட்டி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். மறுபக்கம் ஓபிஎஸ் சட்டப்போராட்டம் நடத்தி அதிமுகவை தன்வசப்படுத்த முயன்று வருகிறார்.

மின் கட்டண உயர்வு
ரூ.55 முதல் ரூ.1130 வரை மின்கட்டணம் உயரும். 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவதற்கு இலவச மின்சாரம் தொடரும். அதே நேரம் மானியத்தை விட்டுத்தர விரும்புபவர்கள் தாமாக முன்வந்து தெரிவிக்கலாம்." என்றார். இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் மின்கட்டணங்களை ஓர் அலகிற்கு 27.50 பைசா முதல் ரூ.1.25 உயர்த்தப் போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.

எவ்வளவு கட்டணம்?
மின் பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52% வரை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 2 மாதங்களுக்கு 200 அலகு வரை மின்சாரம் பயன்படுத்துவோர், ஓர் அலகுக்கு 27.50 காசுகள் கூடுதலாக செலுத்த வேண்டும். 500 அலகு வரை மின்சாரம் பயன்படுத்துவோர் ஓர் அலகுக்கு ரூ.1.19 வரை செலுத்த வேண்டும். 900 அலகு வரை பயன்படுத்துவோர் அலகுக்கு ரூ.1.25 வரையும், மொத்தமாக முறையே ரூ.595, ரூ.1,130 கூடுதலாக செலுத்தும் நிலையும் உள்ளது.












Click it and Unblock the Notifications