இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினம்.. காவல்துறை வளையத்திற்கு வந்த ராமநாதபுரம்! பலத்த பாதுகாப்பு
ராமநாதபுரம்: இன்று இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நினைவு தினத்தையொட்டி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பலத்த பாதுகாப்பு
இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமகுடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் இன்று அஞ்சலி செலுத்து இருக்கின்றனர். இதனையடுத்து மாவட்டம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கெனவே இம்மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

5,500 காவலர்கள்
இன்று இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்தில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களும், அதிமுக சார்பில் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்த உள்ளனர். எனவே அசம்பாவிதங்களை தவிர்க்க 3 டிஐஜி, 24 மாவட்ட எஸ்பி, 26 ஏடிஎஸ்பி, 60 டிஎஸ்பி ஆகியோருடன் 5,500 காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பதட்டமான பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அங்கு கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தீவிர கண்காணிப்பு
அதேபோல, நெடுஞ்சாலைகள் என முக்கிய சாலைகளில் 40க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பரமகுடி நகர் பகுதியில் மட்டும் 150 சிசிடிவி கேமிராக்களை கொண்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, இம்மானுவேல் சேகரன் நினைவிடம் அமைந்துள்ள பகுதியில் பிரத்யேக புறக்காவல் நிலையம் இந்த ஆண்டு முதல் அமைக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்
இந்த பாதுகாப்பு பணியில் ட்ரோன்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வருவாய் துறை சார்பில் வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருவோர்கள் அவர்களது சொந்த வாகனங்களில் மட்டுமே வரவேண்டும். வாகனங்களின் மேற்கூரையில் அமர்ந்து வரக்கூடாது, ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது, பட்டாசு வெடிக்கக்கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், அஞ்சலி செலுத்த வரும் அரசியல் கட்சியினர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் மட்டுமே வந்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications