சவுதி அரேபியாவில் ஒரே நாளில்.. 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! என்ன தவறு செய்தார்கள் தெரியுமா
ரியாத்: சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் மரண தண்டைக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இருப்பினும், உலகின் பல நாடுகளிலும் மரண தண்டனை என்பது இன்னும் இருந்து கொண்டு தான் வருகிறது.
இதற்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்து வரும் போதிலும், பயங்கரவாதம் உள்ளிட்ட மோசமான குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை சரி என்றே மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
அவர்கிட்ட பேச முடியாது! பிடனிடம் போன் பேச மறுத்த சவுதி சல்மான், அரபு ஷேக்.. பரபரப்பு! என்ன நடந்தது?

மரண தண்டனை
இந்தச் சூழலில் சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது கடந்த ஆண்டு முழுவதும் அங்கு நிறைவேற்றப்பட்ட மொத்த மரண தண்டனைகளை விட அதிகமாகும். சவுதியில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு இணையத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

சவுதி விளக்கம்
இருப்பினும், இது தொடர்பாகச் சவுதி அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனத்தில் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த அனைவரும் பல கொடூரமான குற்றங்களைச் செய்த குற்றவாளிகள். இன்று மரண தண்டனை பெற்ற நபர்களில் பலர் பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ், அல்-கொய்தா, யேமனின் ஹுதி கிளர்ச்சிப் படைகள் தொடர்புடைய மற்றும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட குற்றவாளிகள் ஆவர். அவர்கள் சவுதியின் முக்கிய ன பொருளாதார மையங்கள் மீது தாக்குதல்களைத் திட்டமிட்டவர்கள்.

என்ன குற்றம்
சிலர் சவுதி பாதுகாப்புப் படைகள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டவர்கள் அல்லது கொன்றவர்கள். மேலும், சிலர் சட்ட விரோதமான ஆயுதங்களை நாட்டிற்குள் கடத்தினார்கள். இதுபோன்ற மோசமான குற்றங்களைச் செய்தவர்களுக்கு மட்டுமே மரண தண்டனை அளிக்கப்படுகிறது" என்று அவர் தெரிவித்தார். இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 81 பேரில் 73 பேர் சவுதி நாட்டை சேர்ந்தவர்கள், ஏழு பேர் ஏமன் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் சிரிய நாட்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

2021ஐ விட அதிகம்
தூக்கிலிடப்பட்ட அனைவரும் சவுதி நீதிமன்றங்களில் முறையாக விசாரிக்கப்பட்டனர் என்றும் ஒவ்வொரு நபரின் வழக்குகளும் மூன்று தனித்தனி நிலைகளில் 13 நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டது என்றும் சவுதி தரப்பில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் அதிகம் மரண தண்டனை விதிக்கும் நாடுகளில் ஒன்றாகச் சவுதி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. சவுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாகவே 69 பேருக்கு மட்டுமே மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் அதைவிட அதிக பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.