அவிழ்ந்த மர்மமூடிச்சுகள்.. லண்டன் ஹோட்டலில் சவுதி இளவரசர் இறந்தது எப்படி? பின்னணியில் இருக்கும் போதை
ரியாத்: சவுதி அரேபியாவின் இளவரசர் அப்துல்லா லண்டனில் உள்ள பிரபலமான ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது அவரது மரணத்தின் பின்ணியில் உள்ள திடுக்கிட வைக்கும் தகவல் பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இளவரசர் அப்துல்லா அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்து போதைப்பொருள் பயன்படுத்தியதால் தான் இறந்தது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் இளவரசர் அப்துல்லா. இவரது முழுப்பெயர் அப்துல்லா பின் ஃபஹத் பின் அப்துல்லா பின் அதுலாஜி பின் ஜலாவி அல் சவுத் என்பதாகும். இவர் பிரிட்டன் தலைநர் லண்டனில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதி கென்சிங்டன் பகுதியில் உள்ள மரியாட் ஹோட்டலில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் தான் திடீரென்று அவர் தான் தங்கியிருந்த ஹோட்டல் பாத்ரூமில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்த ஹோட்டல் தூய்மை பணியாளர் நிர்வாகத்தினரிடம் கூறினார். அதன்பிறகு போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.
இதுதொடர்பான வழக்கு மேற்கு லண்டனில் உள்ள Coroner's நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தற்போது அந்த நீதிமன்றத்தில் இளவரசர் பிரின்ஸ் எப்படி இறந்தார்? என்ற விவரம் தாக்கல் செய்யப்ப்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழங்கிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ''இளவரசர் பிரின்ஸ் 600 யூரோ கொடுத்து நவம்பர் 19ம் தேதி ஹோட்டலில் தங்க தொடங்கினார். அந்த ஹோட்டலில் அவர் ஒருவார காலம் வரை தங்க முடிவெடுத்து இருந்தார். அவர் இறந்து நவம்பர் 20ம் தேதி மாலையில் இளவரசர் அப்துல்லா சிகரெட் வாங்க வெளியே வந்துள்ளார். அது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
அதன்பிறகு அவரது அறைக்கு தூய்மை பணிக்கு ஊழியர் சென்றார். அப்போது பாத்ரூமில் அவர் இறந்து கிடந்தார். உடனடியாக எமர்ஜென்சி சேவைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சோதித்து பார்த்தனர். ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
ஏற்கனவே குடிப்பழக்கத்தை இருந்து விடுபட அவர் சிகிச்சைகள் எடுத்துள்ளார். இதனால் Toxicology சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அவரது 100 மில்லி ரத்தத்தில் 220 மில்லி கிராம் ஆல்கஹால் கலந்து இருப்பது தெரியவந்தது. இது பிரிட்டனில் கார் ஓட்டும்போது அனுமதிக்கப்பட்ட ஆல்கஹால் அளவை விட 3 மடங்கு அதிகமாகும். இது கோமா நிலைக்கு கூட கொண்டு செல்லும். மேலும்.அவரது உடலில் ஜிஎச்பி எனும் போதைப்பொருள் அதிகம் இருந்துள்ளது. மதுபானம் மற்றும் போதைப்பொருள் ஆகியவற்றின் அதிகப்படியான பயன்பாடு தான் அவரது இறப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. போதையில் இருந்த இளவரசர் பிரின்ஸ் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்'' என கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் லண்டன் ஹோட்டலில் மர்மமான முறையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இறந்த சவுதி இளவரசர் அப்துல்லாவின் மரணத்துக்கு அதிகப்படியான மதுபானம் குடித்ததும், போதைப்பொருள் பயன்படுத்தியதும் தான் முக்கிய காரணம் என்பது உறுதியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications
