எல்லாமே வேஸ்ட்..அவர் எதுவுமே செய்யவில்லை! படக்கென பார்த்த எடப்பாடி! என்னங்க இப்படி சொல்லிட்டாரு..!
சேலம்: பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வந்து சென்றதால் எந்த பயனுமில்லை எனவும், வாக்குகளை மட்டும் குறி வைத்து வருகிறார் பிரதமர் மோடி என அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதியான நாளை மறுநாள் நடக்க இருக்கும் நிலையில் இன்றுடன் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதனையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் சேலம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக மீதும் பாஜக மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
பொய் பிரசாரம்: செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”அதிமுக ஆட்சியில் தான் மக்கள் நலன் காக்கும் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. திமுக அரசின் 520 அறிவிப்புகள் இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில் சுமார் 10 சதவீத அறிவிப்புகளே நிறைவேற்றப்பட்டுள்ளது. முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழக தலைவருமான ஸ்டாலின், அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கைகள் 98 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக பச்சை பொய்யை தேர்தல் பிரசார கூட்டத்தில் சொல்லி வருகிறார்.
வேலையில்லா திண்டாட்டம்: தமிழகத்தில் நதிநீர் பிரச்சனை, போதைப்பொருள் நடமாட்டம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு என்று பல பிரச்சனைகள் நிலவிக்கொண்டிருக்கிறது. இதையெல்லாம் கட்டுப்படுத்த தவறிய அரசு விடியா திமுக அரசு. மத்தியில் ஆளும் பாஜக அரசும் அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையிலும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை.
பிரதமர் மோடி: பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வந்து சென்றதால் எந்த பயனுமில்லை. வாக்குகளை மட்டும் குறி வைத்து வருகிறார் பிரதமர் மோடி. இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உரிய நிதி வழங்கப்படவில்லை. அதிமுக-வை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பெட்ரோல், டீசல், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் எதையும், தமிழகத்திற்கு 10 ஆண்டுகளாக தரவில்லை.
மத்திய பாஜக அரசு: இயற்கை சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை முழுமையாக வழங்குவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய அரசு மாநிலங்களுக்கு முறையாக வழங்கவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கும் தரவில்லை. இயற்கை சீற்றம் ஏற்படும்போதெல்லாம் தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய பாஜக அரசு வழங்கவில்லை. அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டுமே தமிழ்நாடு வருகின்றனர். ஆனால் மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை.
யாருக்கு ஆதரவு: எனவே அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து புதிய வரலாற்றுச் சாதனையை படைக்க வேண்டும். அதே நேரத்தில் தொண்டர்களை பொதுமக்களை வாக்காளர்களை குழப்பம் வகையில் வரும் மக்களவைத் தேர்தலுக்கு கணிப்புகளையும் யாரும் பொருட்படுத்த தேவையில்லை என பேசினார். அப்போது மத்தியில் இழுபறி வந்தால் யாருக்கு ஆதரவு என எடப்பாடி பழனிச்சாமி இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் முடிவுகளில் நீதிபடி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications