வறண்ட மேட்டூர் அணை.. தண்ணீர் திறப்பு நிறுத்தம்.. கேள்விக்குறியாகும் சம்பா.. தாளடி சாகுபடி
சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் நடப்பாண்டு சம்பா, தாளடி சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது. பருவமழை பொய்த்துப்போனதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 31 அடியாக சரிவடைந்துள்ளது அணையில் நீர் இருப்பு 8 டிஎம்சி மட்டுமே உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டு காலமாக வற்றாமல் கடல் போல காட்சியளித்த மேட்டூர் அணை நடப்பாண்டு வறண்டு போய் குட்டையாக காட்சி அளிக்கிறது. பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால் அணைக்கு தண்ணீர் வருவது குறைந்து போனது.

கர்நாடகா மாநிலத்தின் தலைக்காவிரியில் உற்பத்தியாகி பல நூறு கிலோமீட்டர் பயணம் செய்து பூம்புகாரில் கடலில் கலக்கிறது காவிரி. காவிரி நதிநீரை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகளும், குடிநீருக்காக லட்சக்கணக்கான மக்களும் உள்ளனர். பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீரை சேமித்து வைத்து பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 1934ஆம் ஆண்டு காவிரியின் குறுக்கே மேட்டூர் அணை கட்டப்பட்டது. தமிழகத்தில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள விளை நிலங்களும், விவசாயிகளும், பொதுமக்களும் காவிரி நதிநீரினால் பயன் பெறுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக காவிரி தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு மே மாதமே தண்ணீர் திறக்கப்பட்டது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நடப்பாண்டு ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு மேல் இருந்தது. இதனையடுத்து ஜூன் 12ஆம் தேதியன்று தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
இதேபோன்று சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த கால்வாய் பாசன விவசாயிகளின் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். தமிழக மற்றும் கர்நாடகம் இடையே காவிரி நீரை பங்கீடு செய்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் மே மாதம் வரை 177.25 டி.எம்.சி. தண்ணீரை மாதந்தோறும் பிரித்து வழங்க வேண்டும்
அதன் அடிப்படையில் ஜூன் மாதம் முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை கர்நாடகம் 28 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தமிழகத்துக்கு தந்துள்ளது.
46.9 டி.எம்.சி. தண்ணீரை இன்னும் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை. கர்நாடகா அணைகளில் தண்ணீர் இருந்த போதிலும் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தர மறுக்கிறது கர்நாடகா.
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு அதிகமாக இருந்த காரணத்தால் மளமளவென நீர் மட்டம் சரிவடைந்து 31 அடியாக உள்ளது. பல மாவட்டங்களில் குறுவை சாகுபடி பொய்த்துப்போனது பயிர்கள் கருகிப்போனது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு 8 டி.எம்.சி.யாக குறைந்துள்ளதால் ஜனவரி மாதம் 28ஆம் தேதி வரை டெல்டா பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு 4 மாதத்திற்கு பிறகு இன்று காலை 6.00 மணி முதல் நிறுத்தப்பட்டது.
அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் மீன் வளம், குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறுவை சாகுபடியே கருகிப்போன நிலையில் 110 நாட்களுக்கு முன்பே மேட்டூர் அணை மூடப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications