கருணை வைத்த வருண பகவான்.. பொங்கி வந்த காவிரி.. மளமளவென உயரும் மேட்டூர் அணை நீர் மட்டம்
சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 19000 கனஅடியாக உயர்ந்துள்ளதால் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் குடிநீர் தேவைக்காக மட்டும் 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கர்நாடகா மாநிலத்தின் தலைக்காவிரியில் உற்பத்தியாகி பல நூறு கிலோமீட்டர் பயணம் செய்து பூம்புகாரில் கடலில் கலக்கிறது காவிரி. காவிரி நதிநீரை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகளும், குடிநீருக்காக லட்சக்கணக்கான மக்களும் உள்ளனர். பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீரை சேமித்து வைத்து பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 1934ஆம் ஆண்டு காவிரியின் குறுக்கே மேட்டூர் அணை கட்டப்பட்டது. தமிழகத்தில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள விளை நிலங்களும், விவசாயிகளும், பொதுமக்களும் காவிரி நதிநீரினால் பயன் பெறுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக காவிரி தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு மே மாதமே தண்ணீர் திறக்கப்பட்டது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நடப்பாண்டு ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு மேல் இருந்தது. இதனையடுத்து ஜூன் 12ஆம் தேதியன்று தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
இதேபோன்று சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த கால்வாய் பாசன விவசாயிகளின் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். தமிழக மற்றும் கர்நாடகம் இடையே காவிரி நீரை பங்கீடு செய்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் மே மாதம் வரை 177.25 டி.எம்.சி. தண்ணீரை மாதந்தோறும் பிரித்து வழங்க வேண்டும்
அதன் அடிப்படையில் ஜூன் மாதம் முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை கர்நாடகம் 28 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தமிழகத்துக்கு தந்துள்ளது.
46.9 டி.எம்.சி. தண்ணீரை இன்னும் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை. கர்நாடகா அணைகளில் தண்ணீர் இருந்த போதிலும் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தர மறுக்கிறது கர்நாடகா.
தமிழகத்தின் பங்கு தண்ணீரை பெற போராடி வருகிறது தமிழகம். ஆனாலும் தண்ணீரை தராமல் அடம் பிடிக்கிறது கர்நாடகா மாநிலம். காவிரி டெல்டா விவசாயிகள் மீது கர்நாடகா அரசு கருணை காட்டா விட்டாலும் வருண பகவான் கருணையால் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கிருஷ்ணராஜசாகர், கபிணி அணைகள் நிரம்பி வருகின்றன.
இதனால் கர்நாடகா அணைகளில் இருந்து விநாடிக்கு 8000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுவிற்கு வந்து கொண்டிருப்பதால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால் அணை நீர் மட்டம் நேற்று 31 அடியாக இருந்தது. இன்றைய தினம் காலையில் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 9345 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருவதால் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 33 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 8 டி.எம்.சி.யாக அதிகரித்துள்ளது. இது டெல்டா பாசன விவசாயிகளிடையே மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது.
இதனிடையே பிலிகுண்டுவிற்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 11000 கனஅடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 19000 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கிளை நதியான பாலாறு, தொப்பையாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டுர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரு நாளைக்கு 3 அடி வரை உயர வாய்ப்பு உள்ளது.
வழக்கமாக ஜனவரி மாதம் 28ஆம் தேதி வரை டெல்டா பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்கப்படும் நடப்பாண்டு மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு அக்டோபர் 10ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. குறுவை சாகுபடி குறைந்து போன நிலையில் சம்பா, தளாடி சாகுபடி செய்ய விவசாயிகள் யோசித்து வருகின்றனர். வருணபகவான் கருணையால் மழை அபரிமிதமாக பெய்து மேட்டூர் அணை நிரம்பும் பட்சத்தில் பயிர் சாகுபடியை தொடங்கலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications