சேலத்தில்.. பேராசிரியையே கூப்பிட்டு வைத்து ராகிங் செய்த சீனியர்கள்.. கொடுமை
சேலம்: சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மாணவி என நினைத்து இளம் பேராசிரியையை மாணவர்கள் ராகிங் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது அந்த பேராசிரியை வகுப்பு மாணவர்களிடம் இதை தட்டிக்கேட்டதால், அவர்களுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது.
வேலூரில் அண்மையில் ஏற்பட்ட ராகிங் பிரச்சினையின் அதிர்வலைகளே இன்னும் முடியாத நிலையில், பேராசிரியை ஒருவரே ராகிங் கொடுமைக்கு ஆளான சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிறந்த நாளில் யாரும் யோசிக்காததை செய்த பாலாஜி முருகதாஸ்.. ரசிகர்களிடம் வைத்த வித்தியாசமான வேண்டுகோள்

அதிர வைத்த வேலூர் ராகிங்
வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை இறுதியாண்டு மாணவர்கள் அரை நிர்வாணமாக ராகிங் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, ராகிங் செய்த 10 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதையடுத்து, தமிழகத்தில் எந்தக் கல்லூரியிலும் ராகிங் நடைபெறாததை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் காவல்துறை எச்சரித்துள்ளது.

சேலம் கல்லூரியில்..
இந்த சம்பவம் கொடுத்த அதிர்வலைகளே இன்னும் குறையாத நிலையில், சேலத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சேலம் ஐந்து ரோட்டில் இருந்து சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் செல்லும் சாலையில் ஒரு தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் சீனியர் மாணவர்கள் சிலர் முதலாமாண்டு மாணவ - மாணவிகளை தொடர்ந்து ராகிங் செய்து வந்துள்ளனர்.

பட பாணியில்..
இந்நிலையில், அந்தக் கல்லூரிக்கு புதிதாக பணிக்கு சேர்ந்த இளம் பேராசிரியை ஒருவரை மாணவி என நினைத்து சீனியர் மாணவர்கள் நேற்று முன்தினம் ராகிங் செய்துள்ளனர். தான் பேராசிரியை என அவர் கூறியபோதும் நம்ப மறுத்த மாணவர்கள், அவரை பாட்டு பாடுமாறும், நடனமாடுமாறும் கூறி ராகிங் செய்துள்ளனர். இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் பேராசிரியை தவித்து நிற்க, அந்த நேரத்தில் அவரது வகுப்பு மாணவர்கள் அதை பார்த்துவிட்டனர். இதையடுத்து, அங்கு வந்த சில மாணவர்கள், பேராசிரியையை ராகிங் செய்த மாணவர்களை தட்டிக் கேட்டனர்.

பயங்கர மோதல் - கைது
இதனால் சிறிது நேரத்தில் இந்தப் பிரச்சினை, ஜூனியர் மாணவர்களுக்கும், சீனியர் மாணவர்களுக்கும் இடையேயான பிரச்சினையாக மாறி பெரும் மோதலாக வெடித்தது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருதரப்பாக பிரிந்து ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதால், கல்லூரியே போர்க்களம் போல மாறியது. இதில் பல மாணவர்கள் படுகாயமடைந்தனர். பிறகு தகவலறிந்து வந்த போலீஸார், மோதலில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கலைந்து போகச் செய்தனர். இதையடுத்து, பேராசிரியையை ராகிங் செய்ததாக 2 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.