"நெஞ்சை பிசையும் கொடுமை".. 2 குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய்.. ஆற்றில் வீசி கொன்று தம்பதி தற்கொலை
சேலம்: தங்களின் 2 குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் இருப்பதால் விரக்தி அடைந்த தம்பதியர், குழந்தைகளை ஆற்றில் வீசிக் கொன்று தாங்களும் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.
இரண்டு குழந்தைகளின் சிகிச்சைக்கும் போதிய வசதி இல்லாததாலும், குழந்தைகள் படும் அவஸ்தையை பார்க்க முடியாமலும் அவர்கள் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கின்றனர்.
சேலம் மாவட்டத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூலித்தொழிலாளர்கள்
சேலம் மாவட்டம் தாதகாபட்டியைச் சேர்ந்தவர் யுவராஜ் (42). இவரது மனைவி மான்விழி (35). தம்பதியர் இருவரும் சேலத்தில் உள்ள ஒரு தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு நேகா (7), அக்ஷரா (5) என்ற இரு பெண் குழந்தைகள் இருந்தனர். இவர்களில் நேகா, அங்குள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அக்ஷரா எல்கேஜி படித்து வந்தார்.

சர்க்கரை நோய்
இதனிடையே, மூத்த மகள் நேகாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்க் கொண்டிருந்தது. இதனிடையே, கடந்த ஆண்டு அவர் பள்ளியில் விளையாடும் கீழே விழுந்திருக்கிறார். இதில் அவருக்கு காயம் ஆற பல நாட்கள் ஆகியுள்ளது. இதையடுத்து, மருத்துவமனைக்கு நேகாவை அழைத்துச் சென்று பரிசோதித்ததில் அவருக்கு டைப் 1 சர்க்கரை நோய் இருப்பது தெரியவந்தது. குழந்தைக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியவந்ததும் யுவராஜும், மான்விழியும் மனம் உடைந்தனர். எனினும், நேகாவை எப்படியாவது நோயின் பிடியில் இருந்து மீட்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

2-வது குழந்தைக்கும்..
டைப் 1 சர்க்கரை நோய் வந்தால் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசி எடுத்துக்கொள்ள வேண்டும். நாளொன்றுக்கு 5 முதல் 6 இன்சுலின் ஊசிகளை போட்டுக்கொள்ள வேண்டும். சிறுமி என்பதால் ஒவ்வொரு முறை ஊசி போடும் போது கதறி அழுதிருக்கிறாள் நேகா. இதை பார்த்த யுவராஜ் - நேகா தம்பதி, தங்கள் குழந்தை இந்த வயதில் இப்படி கஷ்டப்படுகிறாளே என நினைத்து மனவேதனை அடைந்துள்ளனர். மேலும், இவ்வாறு இன்சுலின் மருந்துகளை வாங்குவதற்கும் அதிக பணம் செலவாகியுள்ளது. இந்நிலையில், துரதிருஷ்டவசமாக அவர்களின் 2-வது மகளான அக்ஷராவுக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பது கடந்த வாரம் தெரியவந்தது.

தாங்க முடியாத வேதனை.. விபரீத முடிவு
தங்களின் 2-வது குழந்தை அக்ஷராவுக்கும் சர்க்கரை நோய் இருப்பது உறுதியானதால் யுவராஜ் - நேகா தம்பதியர் விரக்தியின் உச்சத்துக்கே சென்றனர். தங்களின் 2 குழந்தைகளும் வாழ்நாள் முழுவதும் இந்த வியாதியுடன் போராட வேண்டுமே என நினைத்து அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர். மேலும், 2 பிள்ளைகளுக்கும் இன்சுலின் ஊசிகளை வாங்குவதற்கு அவர்களிடம் போதிய பண வசதியும் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த விஷயங்களை எல்லாம் குறிப்பிட்டு கடிதம் எழுதி வைத்த அவர்கள், நேற்று குழந்தைகளை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு மேட்டூர் அருகே உள்ள சின்ன காவல் மாரியம்மன் காவிரி ஆற்றின் நீர்தேக்க பகுதிக்கு சென்றனர். பின்னர், விளையாடுவதை போல வேடிக்கை காட்டி 2 குழந்தைகளையும் அடுத்தடுத்து அவர்கள் ஆற்றில் வீசினர். இதில் 2 குழந்தைகளும் ஆற்றில் மூழ்கி மூச்சடைத்து உயிரிழந்தன. குழந்தைகள் இறந்ததை மேலே இருந்து கண்ணீருடன் பார்த்து உறுதி செய்த யுவராஜ் - நேகா தம்பதியர், பின்னர் தாங்களும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications