சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை.. சேலத்துக்கு அவர் செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி

Google Oneindia Tamil News

சேலம் : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் திமுக ஆட்சி மீது குறை சொல்ல எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த அருகதையும் இல்லை எனவும், கடந்த ஆட்சியில் முதலமைச்சராக இருந்த அவர் சேலத்திற்கு செய்தது என்ன என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். சென்னை அறிவாலயத்தில் இருந்து காணொலி வாயிலாக பேசிய முதலமைச்சர், சேலம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.

ஆடாமல் ஜெயிச்சுட்டோமே..போட்டியின்றி தேர்வான திமுக வேட்பாளர்கள்..நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ட்விஸ்ட்ஆடாமல் ஜெயிச்சுட்டோமே..போட்டியின்றி தேர்வான திமுக வேட்பாளர்கள்..நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ட்விஸ்ட்

தேர்தல் பிரச்சாரம்

தேர்தல் பிரச்சாரம்

இன்று மாலை காணொலி வாயிலாக சேலம் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி" என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு," தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் கழகமும், கழகக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும்தான் மாபெரும் வெற்றியைப் பெறப் போகிறார்கள். அதில் யாருக்கும் இம்மியளவும் சந்தேகம் இல்லை. இருந்தாலும் கழகத் தலைவர் என்கிற முறையில் எனது பரப்புரையை நேற்று முதல் நான் தொடங்கி இருக்கிறேன். நேற்றைய தினம் கோவை மாவட்ட மக்களிடம் காணொலி மூலமாக 300 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பேசினேன். இன்று சேலம் மாவட்டத்தில் 526 இடங்களில் காணொலி மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக் கூடிய கூட்டத்தில் உங்களிடையே பேசுகிறேன்.

நேரடியாக வரமுடியவில்லை

நேரடியாக வரமுடியவில்லை

நாளைய தினம் கடலூர் வாக்காளப் பெருமக்களிடையே பேச இருக்கிறேன். வருகிற 17 ஆம் தேதி வரையிலும் எனது பரப்புரைப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்த இருக்கிறேன். கொரோனா காலமாக இல்லாமல் இருந்தால், உங்களைத் தேடி, நாடி நானே சேலத்துக்கு வந்திருப்பேன். கொரோனா காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் நெருக்கடி அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அந்த அடிப்படையில்தான் மாபெரும் பொதுக்கூட்டங்கள், பரப்புரைப் பயணங்களை நடத்த முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். நேரடியாக வரமுடியாவிட்டாலும், நவீன தொழில்நுட்ப வசதியோடு உங்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் பார்த்துப் பேசும் அளவுக்கு இன்று நாம் காணொலிக் காட்சி வாயிலாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளோம்.

எனது பொதுநலம்

எனது பொதுநலம்

இவை அனைத்திலுமே கழக வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். ஸ்டாலின் ஏதோ பேராசைப் படுகிறான் என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது. நான் நினைப்பது பேராசை அல்ல. என்னுடைய இந்த எண்ணம் என்பது சுயநலமான எண்ணம் அல்ல. பொதுநலத்தோடுதான் இப்படி ஆசைப்படுகிறேன். அனைத்து இடங்களிலும் முழுமையான வெற்றியை நாம் அடைந்தால்தான் - கோட்டையில் இருந்து நாம் அறிவிக்கும் நலத்திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மனிதரையும் சென்றடையும். சட்டமன்றத்தில் நிறைவேற்றும் திட்டங்களை - அரசாங்கம் வழங்கும் உதவிகளை - மக்கள் கையில் சேர்க்கும் கடமையும் பொறுப்பும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கையில்தான் இருக்கிறது. அதனால்தான் அனைத்து நன்மைகளும் அனைவரையும் சென்றடைய நமது வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று நான் சொல்கிறேனே தவிர, வேறல்ல.

எல்லா இடங்களிலும் வெற்றி

எல்லா இடங்களிலும் வெற்றி

எல்லா இடங்களிலும் நாம்தான் வெற்றி பெறுவோம், அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நமக்கான செல்வாக்கு என்பது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மிக அதிகளவு கூடி இருக்கிறது. நமக்கு வாக்களிக்கத் தவறியவர்கள் கூட, இப்போது நமக்காக வாக்களிக்கும் முடிவோடு அந்த மனநிலைக்கு வந்து விட்டார்கள். நம்மைக் கடுமையாக விமர்சித்தவர்கள் கூட, இப்போது தங்களது விமர்சனத்தைக் குறைத்துவிட்டார்கள். எனவேதான் நாம் முழுமையான வெற்றியைப் பெறுவோம் என்று சொன்னேன். இதில் சேலத்தின் வெற்றிச் செய்தி மிகமிக முக்கியமானது என்பதை முதலிலேயே நான் சொல்லிக் கொள்கிறேன். கடந்த சட்டமன்றத் தேர்தலில், இங்கு நாம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெற இயலவில்லை. அதற்கான காரணங்களுக்குள் நான் இப்போது செல்ல விரும்பவில்லை. சட்டமன்றத் தேர்தலில் கைநழுவிய வெற்றியை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் கைப்பற்றியாக வேண்டும். இந்த உறுதிமொழியை மாவட்டக் கழகச் செயலாளர்கள் - நம்முடைய நிர்வாகிகள் - கழக வேட்பாளர்கள் - கூட்டணிக்கட்சியைச் சார்ந்த தோழர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அருகதை இல்லை

அருகதை இல்லை

திராவிட இயக்கத்தின் வரலாற்றில் மிக முக்கியமான ஊர் இந்த சேலம். * 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் நாள் இதே சேலத்தில் தான் நமது தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் உருவானது. பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்தான் அந்தப் பெயரைச் சூட்டினார்கள். அதிலிருந்து உருவானதுதான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம்! இத்தகைய பெருமைக்குரிய மாவட்டத்தில் கழகம் முழுமையான வெற்றியைப் பெற்றாக வேண்டும். பழனிசாமி இந்த எட்டு மாத காலத்தில் எங்கே பதுங்கி இருந்தார்? அவர் எதை கவர்ச்சியான வாக்குறுதி என்கிறார்? எதைப் பொய்யான வாக்குறுதி என்கிறார்? அவரது ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொலையும், கொள்ளையும் நடந்தது. அதில் உண்மைக் குற்றவாளி யார் என்றும் உண்மையான காரணம் யார் என்றும், கூலிப்படையை அமர்த்தியது யார் என்றும், ஏவியது யார் என்றும் கண்டுபிடித்தாரா? அதைக் கண்டுபிடிக்கத் துப்பு இல்லாதவர்களுக்கு திமுக ஆட்சியைப் பற்றிக் குறை சொல்ல என்ன அருகதை இருக்கு?

கொலை, கொள்ளை

கொலை, கொள்ளை

தினசரி கொலை, கொள்ளை நடப்பதாக அவர் சொல்லி வருகிறார். அதிமுக ஆட்சியில் இருந்தபோதுதான், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலித அவர்களின் முகாம் அலுவலகமாகச் செயல்பட்ட கொடநாடு பங்களாவிலேயே கொலையும் நடந்தது. கொள்ளையும் நடந்தது. இது சம்பந்தமான வழக்குகளைப் பதிவு செய்தது அதிமுக ஆட்சிதான். இதில் சம்பந்தப்பட்ட சிலர், அப்போது சொல்ல முடியாத சில தகவல்களை இப்போது சொல்வதற்கு முன் வந்துள்ளார்கள். அதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது. இந்த வழக்கை தூசி தட்டி எடுக்கிறோம் என்றதும், அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள். ஆளுநரையும் போய்ப் பார்த்தார்கள். அதற்கும் என்ன காரணம் என எனக்குத் தெரியாது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அடையாளமாக இருந்த கொடநாடு வீட்டில் கொலை, கொள்ளை நடந்திருக்கிறது என்பதால் அதில் உள்ள மர்மங்களை திமுக ஆட்சி அமைந்ததும் அது பற்றி விசாரிப்போம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் நானே குறிப்பிட்டுப் பேசினேன். அதனால்தான் ஆட்சி அமைந்ததும் அது சம்பந்தமான விசாரணையை முடுக்கிவிட்டேன். இதில் எங்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை; அரசியலும் இல்லை.

புலன் விசாரணை

புலன் விசாரணை

எந்த வழக்கிலும் மேற்கொண்டு புலன் விசாரணையை காவல்துறை நடத்தலாம். மேல் புலன் விசாரணை (Further Investigation) என்பது குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டத்தின் 173(8) பிரிவின்படி நடத்தப்படுவது. அதன்படி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பின்னர் கூடுதல் தகவல் கிடைத்தால் அதை முறைப்படி விசாரணை செய்ய காவல்துறைக்கு உரிமையும் கடமையும் உண்டு. அதன்படிதான் நடத்தப்படுகிறது. இதுவும் நாங்கள் கொடுத்த வாக்குறுதிதான். இது பொய்யான வாக்குறுதியும் கிடையாது. கவர்ச்சிகரமான வாக்குறுதியும் கிடையாது. அம்மா வீட்டில் நடந்த கொலை - கொள்ளையில் உண்மையைக் கண்டுபிடியுங்கள் என்று அதிமுகவினரே சொல்கிறார்கள். அவர்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். எனவே திமுக அரசு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். சொன்னதைச் செய்வோம் - செய்வதைத்தான் சொல்வோம் என்று வாக்குறுதி அளித்த தமிழினத் தலைவர் கலைஞரின் மகன் நான். கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன்.

உதய சூரியன் - இதய சூரியன்

உதய சூரியன் - இதய சூரியன்

அப்படி நாங்கள் நிறைவேற்றுவது எல்லாம் மக்களுக்கு முழுமையாகச் சென்று சேருவதற்கு உள்ளாட்சி அமைப்புகளிலும் கழக வேட்பாளர்களும் கூட்டணி வேட்பாளர்களும் வெற்றி பெற்று பங்கெடுத்தாக வேண்டும். அதற்காகத்தான் வாக்குக் கேட்டு உங்கள் முன்னால் நிற்கிறேன். உதயசூரியன் - உங்களது இதய சூரியன் அதனை மறந்து விடாதீர்கள். எங்கள் கூட்டணிக்கட்சிகளின் சின்னங்களையும் மறவாதீர். உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடர உங்களது பொன்னான வாக்குகளை வாரி வழங்குங்கள் என்று அன்போடு கேட்டுக் கொண்டு - இந்தப் பிரச்சார நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்து உங்களைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பைப் பெற முடியவில்லை. அதற்குக் காரணம் உங்களுக்கே தெரியும். நிச்சயமாக, உறுதியாக நாம் மாபெரும் வெற்றியைப் பெற்று அந்த வெற்றியைச் சேலம் மாவட்டம் கொண்டாடும்போது அந்த வெற்றிவிழா நிகழ்ச்சிக்கு நானே நேரடியாக வருவேன் என்ற உறுதியை மாத்திரம் தெரிவித்து உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன். நன்றி; வணக்கம்!" என முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

English summary
Stalin also questioned what Edappadi Palanisamy had done to Salem when he was chief minister in the last regime.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X