தங்க நகை என்று நினைத்து கவரிங் நகைகளை திருடி சென்ற கொள்ளையர்கள்! சேலத்தில் பரபரப்பு
சேலம்: சேலம் தாதகாபட்டியில் ஓட்டல் தொழிலாளி வீட்டில் தங்க நகை என்று கவரிங் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் தாதகாப்பட்டி அருகே உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் ஒபுலிசாமி என்பவர் வசித்து வருகிறார். ஓட்டல் தொழிலாளியான இவர் வழக்கம் போல நேற்று இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டினுள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து பீரோவில் இருந்த ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள மணப்பெண்களை அலங்கரிக்கும் 4 செட் கவரிங் நகைகளை தங்க நகைகள் என்று எண்ணி திருடியுள்ளனர்.
மாநில தலைமை மீது அதிருப்தி..! பாஜகவில் இருந்து ஒதுங்குகிறாரா நடிகை கவுதமி..?

மேலும் பீரோவில் இருந்த ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள 15 பட்டுப் புடவைகளையும், வீட்டு பத்திரங்களையும், 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களையும் மர்மநபர்கள் தூக்கிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஒபுலிசாமி அளித்த புகாரின் அடிப்படையில் அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.