சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் வெல்வாரா? 2வது இடத்திற்கு வரும் கட்சி எது? வெளியான கருத்துக்கணிப்பு
சிவகங்கை: சிவகங்கை லோக்சபா தொகுதியில் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெறுவார் என்றும், அவர் 38 சதவீத வாக்குகள் பெறுவார் என்றும் தந்தி டிவி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.
சிவகங்கை லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம், அதிமுகவில் சேவியர் தாஸ், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேவநாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் எழிலரசி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கடந்த லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது. அந்த தேர்தலிலும் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில் நடப்பு ஆண்டில் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது. இதில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்தது.
இதன் பின்னர் அடுத்தடுத்து 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. இன்றுடன் கடைசி மற்றும் 7 ஆம் கட்ட தேர்தல் முடிந்த நிலையில் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் பெரும்பாலும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது என்றும் தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 35 இடங்கள் கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
இதில் தமிழகத்தின் சிவகங்கை லோக்சபா தொகுதியிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று தந்தி டிவி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. சிவகங்கையில் களம் கண்டுள்ள சிட்டிங் எம்பி கார்த்தி சிதம்பரமே மீண்டும் வெற்றி வாகை சூடுவார் என்று கணித்துள்ளது.
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான ஒரு தொகுதியாகவே உள்ளது. கடந்த 2019 ஆம் லோக்சபா தேர்தலில் கார்த்தி சிதம்பரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2024 தேர்தலில் சிவகங்கை தொகுதியில் 4 முனை போட்டி நிலவுகிறது. ஆனாலும் காங்கிரஸ் கட்சிக்கும் அதிமுக, பாஜக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என கருதப்பட்டது.
இந்த நிலையில் தந்தி டிவி கருத்துக்கணிப்பில் கார்த்தி சிதம்பரமே வெற்றி பெறுவார் என்று தெரிவித்துள்ளது. அதாவது கார்த்தி சிதம்பரத்துக்கு 38 சதவீத வாக்குகளும், அதிமுகவின் சேவியர் தாஸ் 30 சதவீத வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தையும், பாஜக கூட்டணியில் போட்டியிட்ட தேவநாதன் 23 சதவீத வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தையும் பிடிப்பார்கள் என்று தந்தி டிவி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications