மே 30ல் ஐபிஎல் இறுதிப்போட்டி.. ஒவ்வொரு நாளும் 2 போட்டிகள்.. இன்று அட்டவணை ரிலீஸ்.. பக்கா பிளான் ரெடி
மும்பை: ஐபிஎல் தொடருக்கான புதிய அட்டவணை இன்று ஒவ்வொரு அணிகளின் நிர்வாகங்களுக்கும் அளிக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. மே 16ஆம் தேதி மீண்டும் ஐபிஎல் தொடரை தொடங்குவதற்கு பிசிசிஐ முடிவு எடுத்துள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் 2 போட்டிகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மே 25ல் திட்டமிட்டிருந்த இறுதிப்போட்டி, மே 30ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 நாட்களாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் நீடித்து வந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பாதியோடு நிறுத்தப்பட்டது. மே 8ஆம் தேதி தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் - டெல்லி இடையிலான ஆட்டம் பாதியோடு ரத்து செய்யப்பட்டது. இதன்பின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ நிர்வாகிகள் அறிவித்தனர்.

இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் முடிவுக்கு வந்துள்ளது. எல்லையில் அமைதி நீடித்து வரும் சூழலில், மீண்டும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஆரம்பிக்க பிசிசிஐ மும்முரமாக உள்ளது. இருந்தாலும் வெளிநாட்டு வீரர்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளதால், உடனடியாக அணி நிர்வாகங்களை அணுகி ஐபிஎல் தொடரை நடத்துவதற்கான திட்டங்களை கூறவுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியை மே 25ஆம் தேதி நடத்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஒரு வாரத்திற்கு எந்த போட்டியும் நடத்த வாய்ப்பில்லை என்பதால், கூடுதலாக 5 நாட்கள் ஐபிஎல் தொடரை நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மே 30ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல் மே 16ஆம் தேதி முதல் மீண்டும் ஐபிஎல் தொடரை தொடங்க வேண்டும் என்பதில் பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது. ஒவ்வொரு நாளும் 2 போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக முதல் அணி நிர்வாகங்களுடன் ஆலோசனை செய்யவுள்ளது. அதேபோல் 12 லீக் போட்டிகளுக்கான அட்டவணையை உடனடியாக தயார் செய்துள்ள பிசிசிஐ, அவற்றை அணி நிர்வாகங்களுக்கு அளிக்க முடிவு எடுத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் சென்னை, பெங்களூர் மற்றும் ஐதராபாத் ஆகிய 3 மைதானங்களில் மட்டும் ஐபிஎல் தொடரை நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப ஹோட்டல்கள், விமான டிக்கெட் முன்பதிவுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு வீரர்களை உடனடியாக வரவழைக்கவும் அணி நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், பிளே ஆஃப் தொடரின் போது ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா வீரர்கள் பங்கேற்க வாய்ப்புகள் குறைவு என்று பார்க்கப்படுகிறது. இதனால் அதற்கேற்ப பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் 4 அணிகளும் திட்டமிட்டு கொள்ள வேண்டும் என்று பிசிசிஐ முன்கூட்டியே அறிவுறுத்தி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications