For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒத்திவைப்பு- யாழ். பல்கலை. மாணவர் நாளை மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

யாழ்ப்பாணம்: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்கள் நாளை பிரமாண்ட பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு ஆதரவை அளித்துள்ளது.

ஜெனிவாவில் அடுத்த மாதம் கூடும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட இருந்தது. ஆனால் இலங்கையின் சூழ்ச்சியால் அந்த அறிக்கை தாக்கல் செய்யப்படுவது 6 மாத காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Jaffna students announce protest rejecting domestic Sri Lankan investigation into mass atrocities

இது உலகத் தமிழர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்திலேயே விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று பல்வேறு தமிழர் இயக்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் நாளை பிரமாண்ட பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

இறுதிப் போரிலே எம் இனத்தின் மீது இலங்கை அரசாங்கம், அதன் இராணுவ இயந்திரத்தைக் கொண்டு ஈவிரக்கமின்றி நிகழ்த்திய மனிதப் பேரவலங்களுக்கு, ஆறு வருடங்களை எட்டிய நிலையிலும் நீதி கிடைக்கவில்லை. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் நம்பிக்கை ஊட்டும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலில் இது தொடர்பான பிரேரணைகள் சர்வதேச நாடுகளின் பேராதரவுடன் நிறைவேற்றப்பட்டு வந்தன. ஆனால் அதற்கெல்லாம் கடுகளவும் அசையா நிலையிலேயே மஹிந்த தலைமையிலான இலங்கை அரசாங்கம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் இவ்வருட மார்ச் மாதமளவில் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை திட்டமிடப்பட்டபடி சமர்ப்பிக்கப்பட இருந்தது. எனினும் இலங்கையின் புதிய அரசாங்கம் விடுத்த வேண்டுகோளிற்கு இணங்க விசாரணை அறிக்கை செப்டெம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானம் ஆனது ஈழத்தமிழர்களாகிய எமக்கு வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவது போன்ற மிகப் பெரிய வேதனையுடனான ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் வடக்கு-கிழக்கு இராணுவ கட்டமைப்பில் எதுவித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. இராணுவத்தினரின் தலையீடுகள் தமிழர் பிரதேசம் எங்கும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அச்சுறுத்தல், பின்தொடர்வது, கண்காணிப்புக்கள் என இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கும் இச்சூழ்நிலையை சர்வதேசம் பராமுகப்படுத்துவதாகவே இவ் விசாரணை அறிக்கை பின்போடப்பட்டமையை நாம் நோக்குகிறோம்.

இந்நிலையில் தற்போதைய புதிய அரசாங்கத்தினால் கூறப்படுகின்ற உள்ளக விசாரணையானது குற்றவாளிகளை காப்பாற்ற முற்படுவதோடு, ஈழத் தமிழர்களாகிய எமக்கு அடிப்படை மனித உரிமை பிரச்சினைகளை நீர்த்துப் போகச் செய்வதற்கான முன்னேற்பாடுகளே அன்றி வேறல்ல. இலங்கையின் புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினது உள்ளக விசாரணையில் எமக்கு துளியளவேனும் நம்பிக்கை இல்லை.

இதனைக் கருத்தில் கொண்டு எமது வாழ்நிலைப் பிரச்சினைக்குரிய நீதி கிடைக்க இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேசம் போதிய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். இதன் மூலமாக தமிழருக்குரிய நிரந்தர அரசியல் தீர்வுக்கு வழி கிடைக்கும் என நாம் நம்புகிறோம். மேலும் ஈழத்தமிழருக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச தரத்திலான விசாரணை அறிக்கையை விரைவாக வெளியிட வேண்டும் என்றும் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலிடம் வலியுறுத்துகின்றோம்.

எனவே தமிழ் மக்களின் உரிமைக் குரலாக விளங்கும் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (நாளை) காலை 9.30 மணியளவில் எமது நீதிக்கான ஒருமித்த குரலை சர்வதேசத்திற்கு அமைதி வழியில் முரசறைய அன்றைய தினம் பல்கலை முன்றலில் ஆரம்பமாகும் பேராட்டத்தில் அனைவரும் அணிதிரளுமாறு கோரிக்கை விடுக்கிறோம்.

இவ்வாறு யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

த.தே.கூ. ஆதரவு

இந்தப் போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. அறிக்கை மார்ச்சில் சமர்ப்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐ.நா. பொதுச் செயலருக்கும், ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கும் ஏற்கனவே கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அதே கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழகச் சமூகம் முன்னெடுக்கும் இந்தப் பேரணிக்கும் ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளோம். தமிழ் மக்கள் அனைவரும் இப்பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் அமைதிவழியில் நடத்திய பல போராட்டங்கள் சிங்கள ராணுவத்துக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்நிலையில் மீண்டும் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் களத்தில் குதித்திருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The Jaffna University Students’ Union (JUSU) expressed its disappointment at the deferral of a UN inquiry into mass atrocities committed against Tamils and announced it will be staging a protest rejecting a domestic Sri Lankan investigation on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X