For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அவமதித்த அதிகாரி

By Shankar
Google Oneindia Tamil News

அவமதித்த அதிகாரி

எனக்குத் திருமணம் முடிந்தவுடன், திருமணப் பதிவு சான்றிதழ் வாங்குவதற்கு கோவையில் உள்ள திருமண பதிவு அலுவலகம் சென்றோம். மண்டையை பிளக்கும் சுட்டெரிக்கும் வெய்யிலில் அலுவலக வாயிலில் காத்திருந்தபொழுது அலுவலக ஊழியர் ஒருவர் எனது தந்தையை கடிந்து ஓரமாய் சென்று அமரச் சொன்னார். எனது தந்தையும் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் சென்றார்.

அவர் நினைத்திருந்தால் ஒரே ஒரு தொலைபேசியில் பதிவாளரை திருமண மண்டபத்திற்கே வரவழைத்து இருக்கலாம். அப்பொழுது அதே துறையின் அமைச்சர் என் திருமணத்திற்கு வர முடியாத காரணத்தினால், எனது வீட்டிற்கு திருமண வாழ்த்துக் கூற வந்தார். மேற்படி நடந்த செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்டார்.

ஒரு முறை நான் விடுமுறைக்கு இந்தியா வந்த சமயம். உடனே கோவைக்கு பயணிக்க வேண்டிய சூழ்நிலை. பிரபல அரசியல் பிரமுகர் ஒருவர் எனது தந்தைக்கு அவர் லெட்டர் பேட் கொடுத்து, வேண்டும் பொழுது உபயோகித்து கொள்ளச் சொல்லி இருந்தார்.

அதிலிருந்து ஒரே ஒரு லெட்டர் கொடுத்திருந்தால் உடனே எனக்கு பயண சீட்டு கிடைத்திருக்கும். ஆனால் எனது தந்தையோ ‘இது எனது அவசர தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டு'மெனக் கூறி கடைசி வரை மறுத்து விட்டார்.

Late writer Solai's son remembers his father

சோலை எழுதி சேலை படிக்குது!

அவர் பணிபுரியாத நாளிதழ்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இன்றைய முதலமைச்சர் முதல் முதலில் அரசியலுக்கு வந்தபொழுது அவருடைய அனைத்து அரசியல் கூட்டத்திற்கும் எனது தந்தையின் எழுத்துக்களே பயன்பட்டன. ஒரு முறை பிரபல அரசியல் பிரமுகர், ஒரு அரசியல் கூட்டத்தில் "சோலை எழுதி சேலை படிக்குது" என கூறினார். அந்த அளவிற்கு அவர் எழுத்துகள் அரசியல் வட்டாரத்தில் பிரபலமாக இருந்தது.

பயணத்தைத் தொடர வைத்த கலைஞர்

எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பின் பிரபல பத்திரிகைகளிலிருந்து அழைப்புகள் வந்தபொழுதும் தனது சொந்த ஊருக்கே சென்று விடலாம் என முடிவு செய்திருந்த சமயத்தில்தான், கலைஞர் கருணாநிதி அவர்கள் ‘உன் எழுத்து பணி நிற்க கூடாது' என கூறி மற்றுமொரு அத்தியாயத்திற்கு வித்திட்டார்.

கலைஞர் கருணாநிதி அவர்கள் விழா ஒன்றில் பேசும் பொழுது, 1967 தேர்தலில் திமுக தான் ஆட்சியை கைப்பற்றும் என்று முன் கூட்டியே கணித்து கூறியவர் சோலை. பல அரசியல் நிகழ்வுகளை முன் கூடியே கனித்து கூறும் ஒரு அரசியில் ஜோதிடர் என கூறினார்.

அவர் வாழ்நாளின் கடைசி அத்தியாயத்தில் தளபதி ஸ்டாலின் அவர்களுடன் நெருக்கம் கொண்டிருந்தார். ‘மூத்த எழுத்தாளர் சோலையின் பார்வையில்' என ஸ்டாலின் அவர்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதினார். ஆனால் அந்தப் புத்தக வெளியீட்டு விழாவைக்கூட கலைஞர் தொலைகாட்சி மூலம் தான் எனது குடும்பத்தினர் தெரிந்து கொண்டார்கள். எந்த ஒரு அரசியல் நிகழ்வுகளையும் தனது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டதில்லை. புத்தக வெளியீடு அன்று அவருக்கு வாழ்த்துச் சொல்ல நான் அமெரிக்காவிலிருந்து அழைத்தபொழுது, விழாவிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

நான் அவரை கடிந்து கொண்டபோதும், சிரிப்பையே எனக்கு பதிலாகத் தந்தார். புத்தக வெளியீடு விழாவிற்கு அவருக்கென பல வி.ஐ.பி. நுழைவுச் சீட்டுகள் கொடுத்து குடும்பத்தினரை அழைத்து வரச் சொல்லி இருந்தும், அவரது பேரன் ஒருவரை மட்டும் துணைக்கு அழைத்துச் சென்றார். குடும்பத்தினர் தொலைக்காட்சியில் தான் புத்தக வெளியீட்டைக் கண்டனர்.

நோய்த் தாக்குதல்

அப்பா இறப்பதற்கு முன்பாக ஒரு வருட காலமாக கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட வலியை எங்களது குடும்ப நபர்கள் யாருக்கும் அவர் தெரியப்படுத்தவில்லை. கடைசி காலத்தில் அவருக்கு நெருங்கிய அரசியல் பிரமுகர் வழியாகவே நோய்வாய்ப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த வேளையில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியைக் கூற கடமைப்பட்டிருக்கிறேன். மு.க.ஸ்டாலின்தான் எனது அப்பாவை வற்புறுத்தி மியாட் மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்து தொடர்ந்து கண்காணித்துக் கொண்டும் இருந்தார். அவர் மூலமாகத்தான் அப்பாவை தாக்கிய நோய் பற்றிய விவரம் அறிந்தோம். அவருக்குரிய அயராத பணிகளுக்கிடையில் நோய்வாய்ப்பட்டதைக்கூட எங்களிடம் பக்குவமாகத் தெரியப்படுத்தினார் மு.க.ஸ்டாலின். மருத்துவமனையின் சிகிச்சையின்போதுகூட வார இதழுக்கு கொடுத்தனுப்ப வேண்டிய கட்டுரையை படுக்கையில் இருந்தபடியே எழுதி அனுப்பினார்.

கோமாவிற்கு முன்பாக இறுதியாக சிறிய காகிதத் துண்டில் இன்றைய கம்யூனிஸ்ட்களின் பலவீனமான நிலைகுறித்தான கட்டுரையை எழுதத்தொடங்கி முற்றுப்பெறாத கட்டுரையோடு தனது எழுத்துலகப் பயணத்திற்கு பிரியா விடை கொடுத்துவிட்டார்.

அவர் மறைந்த உடன் அனைத்து கட்சியினரும் அவர் பட திறப்புவிழா செய்து அவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என முடிவெடுத்து, கி வீரமணியைச் அவர்களைச் சந்திக்க சாதிக் அவர்களுடன் சென்றேன். சாதிக் என்னை அறிமுகம் செய்து வைத்தவுடன் வீரமணி கூறியது இன்னும் என் நினைவில் இருக்கிறது: "சோலை அண்ணனுக்கு இப்படி ஒரு குடும்பம் இருப்பதே தெரியாது!"

அப்பாவின் படத் திறப்பு விழாக் குழுவினர், அவ்விழாவிற்கு கருணாநிதி, முக ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்து அழைக்கச் சொன்னார்கள். எனக்குள் ஒரு தயக்கம், ‘நான் சென்றால் சந்திக்க விடுவார்களா?' என்று. சாதிக் அவர்களுடன் கோபாலபுரம் சென்றேன். நவீன துப்பாக்கி ஏந்திய காவலர்கள், மிரட்டும் தொனியில் ‘யார்?‘ என்று என்னை வினவிய உடன், எனது தந்தை பெயரைக் கூறினேன். உடனே உள்ளே அழைத்து சென்றார்கள். ஆனால், கலைஞர் அவர்களைச் சந்திக்க முடியவில்லை. ஒரு வித ஏமாற்றத்துடன் திரும்புகையில், கலைஞர் அவர்களின் உதவியாளர் அன்புடன் விசாரித்து, நான் கலைஞருக்குத் தெரிவித்து விடுகிறேன் என கூறி, பட திறப்பு விழாவிற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார்.

முக ஸ்டாலின் அழைப்பு

காலையில் இருந்து சுற்றிய களைப்பில் பெருங்களத்தூர் வந்து சேர்ந்தேன். வீடு வந்து சேர்ந்தவுடன், உடனே வந்து சந்திக்கும்படி தளபதி ஸ்டாலின் அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது. ஆதிமாறன் அவர்களுடன் தளபதி ஸ்டாலின் அவர்களைச் சந்திக்கச் சென்றேன். எனது தந்தையை பற்றி எனக்குத் தெரியாத பல நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். ஒடிசலான தோற்றம், எளிமையான உடை, அன்பான உபசரிப்பு - மொத்தத்தில் எனக்குள் இருந்த அரசியல்வாதிகளை பற்றிய தவறான எண்ணத்தை உடைத்து எறிந்தார் தளபதி.

அவரது இறுதிச் சடங்கில் முன்னாள் மற்றும் இந்நாள் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள். இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட ஒரு பிரபலம், "தான் இதுவரை அய்யா சோலையைச் சந்தித்ததே இல்லை எனவும், அவரின் எழுத்துகள் தன்னை கவர்ந்ததாகவும், தான் பேசும் அரசியல் கூட்டங்களின் பேச்சுக்களுக்கு அய்யா சோலை அவர்களின் எழுத்துகள் மிகவும் உதவியாக இருக்கும்" எனவும் கூறினார். சாதாரண கடை நிலை மனிதரும் புரிந்து கொள்ளும் படியாகவே இருந்தது அவரின் எழுத்துகள்.

புகழஞ்சலி...

"அமரர் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவு திட்டத்திற்கு அடித்தளமிட்டவர் சோலை", "அமரர் எம்.ஜி.ஆர். முன் கால் மேல் கால் போட்டு எழுதிய ஒரே எழுத்தாளர் சோலை", "கவிஞர் கண்ணதாசனுக்கும் சோலைக்கும் உள்ள நட்பு", "ஜெயகாந்தன், கண்னதாசன் மற்றும் சோலை மூன்று பேரும் ஒரே அறையில் தங்கியிருந்த அறை நண்பர்கள்" ஆகிய பலருக்கும் தெரியாத நிகழ்வுகளை படத் திறப்பு விழாவில் வீரமணி ஐயா மேடையில் பகிர்ந்து கொண்டார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில், எனது அப்பாவிற்கு அளித்த அம்பேத்கர் விருதின் பண முடிப்பை, தலித் மக்களுக்காக கட்டப்படும் திருமண மண்டபத்திற்கு கொடுக்குமாறு கூறியதை நினைவு கூர்ந்தார்.

தளபதி ஸ்டாலின் பேசுகையில் எனது அப்பாவின் எளிமையான வாழ்க்கையை நினைவு கூர்ந்து கண் கலங்கினார்.

நக்கீரன் கோபால் அவர்கள், "தான் முதன் முறை சந்தித்தபொழுது சோலை அவர்கள் நாற்காலியில் குத்தவைத்து எழுதிக் கொண்டிருந்ததாகவும், வயது வித்தியாசம் பாராமல் எல்லோரையும் ‘அண்ணே' என்றுதான் அழைப்பார்" எனவும் நினைவு கூர்ந்தார்.

விழா நடத்த இடம் அளித்த வீரமணி அவர்களுக்கும், அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்த அன்புராஜ், சாதிக் , விழாவினை தொகுத்து வழங்கிய லெனின் அவர்களுக்கும் மற்றும் படத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இந்த கட்டுரை வாயிலாக நன்றி தெரிவித்து கொள்கிறேன் .

பல முறை நானும், எனது குடும்பத்தில் பத்திரிக்கை துறையில் உள்ள ஒருவரும் எனது தந்தையிடம், "பல அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக இருந்துள்ளீர்கள் , பல முக்கிய அரசியல் நிகழ்வுகளுடன் உங்களுக்குத் தொடர்பு உண்டு. வெளி உலகிற்க்கு தெரியாத நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளலாமே" எனக் கேட்டோம்.

அதற்கு அவர், "அந்தந்த கால கட்டத்தில் நடக்க வேண்டிய, நடந்த நிகழ்வுகள் அவை. சிலர் அவற்றைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் , அந்த நிகழ்வுகளை தற்பொழுது கூறி என்னை முன்னிலைப்படுத்திக் காட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை," என கூறி மறுத்துவிட்டார்

சோலையின் ஆரம்ப கால முதல் கட்டுரையும் இடது சாரி கட்சியை சார்ந்ததே, தனது இறுதி மூச்சு நிற்கும் முன் அவர் எழுதி முடிக்கப்படாத கட்டுரையும் இடது சாரி கட்சியைச் சார்ந்ததே.. அவர் மறைந்தாலும் அவர் எழுத்துகள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன!

English summary
Late writer Solai's son Madhavan Solai remembers his father and his impact in Tamil politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X