For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக அரசியலில் மறக்க முடியாத எழுத்தாளர் சோலை!- சில நினைவுகள்

By Shankar
Google Oneindia Tamil News

-மாதவன் சோலை

இன்றைய தமிழக அரசியல் சூழலில் வட்ட வார்டு கவுன்சிலர்கள் வானளாவிய அதிகாரம் படைத்தவர்களாக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். தமது உற்றார் உறவினர் மற்றும் குடும்ப உறுப்பினர்களையும் பக்க பலமாக வைத்துக்கொண்டு குவாலிஸ், சியாரா ஆகிய சொகுசு வண்டிகளில் வந்திறங்கி பட்டையைக் கிளப்புகிறார்கள்.

ஆனால் பெருந்தலைவர் காமராஜர் தொடங்கி ஜெயலலிதா வரை ஐந்து முதல்வர்களிடமும் நெருங்கிய தொடர்பு கொண்ட ஒரு பெரும் எழுத்தாளர், ஒருபோதும் தன் செல்வாக்கைப் பயன்படுத்தாமலேயே கடைசிவரை இருந்து, மறைந்தார்.

Late writer Solai's son remembers his father

அவர்.. சோலை, என் அப்பா!

இவரது சாணக்கியத்தனமான அரசியல் எழுத்து, அணுகுமுறை, ஆலோசனை பல்வேறு முதல்வர்களை உருவாக்க வழிவகுத்தது. இருந்தாலும் அரசியல் பாதை வேறு, குடும்பம் வேறு என்று தனித்தனியே பயணத்தை சீராக வழிநடத்தினார்.

திண்டுக்கல் மாவட்டம் மருதா நதியின் மடியிலே தவழும் அழகான மலை சூழ்ந்த அய்யம்பாளையம் என்கிற சிறு கிராமம்தான் சொந்த ஊர். தனது சிறு வயதில் பெற்றோரை இறைவன் அழைத்துக்கொள்ள, நம்பிக்கை என்கிற ஒரு அஸ்திரத்தை மட்டுமே கையில் எடுத்து எதிர்காலத்தை நோக்கி காலடி எடுத்து வைத்தவர்தான் சோலை.

அரசியல் வட்டாரத்தில் மிகப் பரிச்சயப்பட்ட பெயர் இது. ஐந்து முதலமைச்சர்களுடன் நட்பு பாராட்டி, அரசியல் ஆலோசகர் என தனக்கென தனி முத்திரையை பதித்தவர். தனது இறுதி மூச்சு வரை எழுத்துலக பயணத்தைத் தொடர்ந்த சோலையின் எழுதுகோல் மே மாதம் 29 ம் தேதி, 2012 எழுத்துலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி ஆழமான உறக்கத்திற்குச் சென்றது.

இதோ மற்றுமொரு கோணத்திலிருந்து அமரர் சோலை அவர்களின் சில நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

எம்ஜிஆருடன் அறிமுகம்

நிலம் பற்றிய சோலையின் கட்டுரை ஒன்று ஜீவானந்தம் அவர்களை வெகுவாக கவர்ந்தது. ஆரம்ப காலத்தில் கம்யூனிஸ்ட் கோட்பாடுகளின் ஈடுபாடினால் அமரர் ஜீவானந்தம் அவர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஜீவானந்தம் எளிமையானவர் என்பது ஊரறிந்த ஒன்று. அவருடன் பழைய தாம்பரத்தில் ஒரு ஓலை குடிசையில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த காலத்தில், ஒரு முறை அமரர் எம்.ஜி.ஆர்., ஜீவானந்தம் அவர்களைச் சந்திக்க வந்தபோது, சோலையை யாரென கேட்டறிந்தார்.

ஜீவானந்தம் மறைந்த பின், உதவியாளரை அனுப்பி சோலையை அழைத்து வரச் சொன்னார். திருசெந்தூர் தேர்தலுக்கு ஒரு வேனில் பயணிக்கும்பொழுது, எம்.ஜி.ஆர்., சோலையின் கையைப் பிடித்து, "கடைசி வரை என்னுடன் இருப்பாயா?" என கேட்டார். பல முறை அரசியலில் இக்கட்டான சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். அவர்களுக்கு முதலில் நினைவுக்கு வந்தவர் சோலைதான்.

எம்ஜிஆரின் பெருந்தன்மை

எம்.ஜி.ஆர். அவர்கள் அண்ணா பத்திரிகை ஆரம்பிக்க முடிவு செய்து, அண்ணா பத்திரிக்கை விளம்பரத்தில் ஆசிரியர் சோலை என வெளிவந்தது. விளம்பரத்தை எடுத்துக்கொண்டு நேராக எம்.ஜி.ஆர். அவர்களிடம் சென்று, ஆசிரியர் என உங்கள் பெயர் போடுவதுதானே சரி என கேட்டார் . அதற்கு எம்.ஜி.ஆர்.,"வாசகர்களுக்கு எம்.ஜி.ஆர்.ஐ விட சோலைதான் நம்பிக்கையான பத்திரிகையாளர்" என கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர். அவர்களின் கையில் இருந்த காகிதத்தை வாங்கி, ஆசிரியர் எம்.ஜி.ஆர்., துணை ஆசிரியர் சோலை என எழுதி கொடுத்துவிட்டு சென்றார். அனால் விளம்பரத்தில் துணை ஆசிரியருக்குப் பதில் இணையாசிரியர் சோலை என்றே போடச் சொன்னார் எம்ஜிஆர்.

வினோபா பாவேயின் சீடருக்காக

எண்பதுகளின் துவக்கத்தில், காந்தியவாதி வினோபா பாவே பூதான இயக்க தமிழக வாரிசு ஜெகநாதன் அவர்களின் குரல் நக்சல் இயக்கத்திற்கு ஆதரவானது என கருதி தருமபுரி மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டார். இதை கேள்விப்பட்ட எனது அப்பா, எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்திக்க ஆற்காடு முதலி சாலைக்குச் சென்றார். எப்பொழுது வேண்டுமானாலும் எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்கக்கூடிய நபராக இருந்தாலும் முன் அழைப்பு இல்லாமல் அதற்கு முன் வரை சென்றதில்லை. ‘‘அறவழியில் யாத்திரை சென்ற ஒரு காந்தியவாதி தாக்கப்பட்டிருக்கிறார். இந்த தாக்குதல் உங்கள் மீதும், உங்கள் ஆட்சியின் மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிகையை தகர்க்கும்,'' என தன் உள்ளக் குமுறலை வெளிபடுத்தினார்.

சோலையின் மற்றுமொரு முகத்தை கண்ட எம்.ஜி.ஆர். சாப்பிடக் கூட மனமின்றி அடுத்த நாளே தருமபுரியில் இருந்த அதிகாரிகள் அத்தனை பேரையும் வரவழைத்து காந்தியவாதி ஜெகநாதன் அவர்களை அழைத்து அடையாளம் காட்டச்சொன்னார். ஆனால் ஜெகநாதன் அவர்களோ, "நடவடிக்கை வேண்டாம், எச்சரிக்கை செய்து அனுப்பிவிடுங்கள்" என கூறியுள்ளார். ஏனெனில் அடித்த அதிகாரி, ஜெகநாதன் அவர்களின் உதவியால் படித்து முன்னுக்கு வந்தவர் என்ற தகவலையும் எம்.ஜி.ஆர். அவர்களிடம் பகிர்ந்து கொண்டார். அய்யா ஜெகநாதன் அவர்களின் துணைவியார் கிருஷ்ணம்மாள் அவர்களுக்கு சமீபத்தில் விஜய் தொலைகாட்சி "சிறந்த பெண்மணி" விருது கொடுத்து கௌரவித்தது.

எம்ஜிஆர் தந்த வீடு

ஒரு முறை எம்.ஜி.ஆர். எனது தந்தையை அழைத்து பெரியகுளம் தொகுதி தேர்தலில் நிற்கச் சொல்லி வற்புறுத்தியும் திட்டவட்டமாக மறுத்து, அவர் நண்பருக்கு அந்த தொகுதியைப் பரிந்துரை செய்ய, அந் நண்பரும் அத்தேர்தலில் வெற்றி கண்டார்.

அப்பாவுக்கு சொந்த ஊரில் வீடு இல்லை என அறிந்த எம்.ஜி.ஆர், பொருளுதவி செய்து, புதுமனை புகுவிழாவிற்கு தனது அமைச்சர்கள் புடை சூழ வந்து வாழ்த்தினார்.

எங்களது குடும்ப நபர்கள் சென்னையில் இருத்த சமயம் என்பதால், அந்த விழாவிற்கு, அவ்வூரிலிருந்த தனது தங்கையை தவிர யாருக்கும் தெரிவிக்க வில்லை. நானோ எனது உடன் பிறந்தவர்கள் யாரும் அந்த நிகழ்வில் பங்கேற்க வில்லை. எத்தனையோ அரசியல் பிரமுகர்கள் அவரைச் சந்திக்க வந்ததுண்டு , அனால் குடும்பதினர் யாரையும் எந்த ஒரு அரசியல் பிரமுகருக்கும் அறிமுகப்படுத்தியது இல்லை என் தந்தை. வார்டு கவுன்சிலர்கூட தனது அதிகார வட்டத்திற்கு அப்பாற்பட்டு அதிகாரத்தை பயன்படுத்தும் சூழ்நிலையில், தனது செல்வாக்கை தானும் பயன்படுத்தியதில்லை, தனது குடும்பத்தினரையும் பயன்படுத்த அனுமதித்ததில்லை.

காமராஜரின் பெருந்தன்மை

அப்பாவுடன், காமராஜர், பக்தவச்சலம் போன்ற அரசியல் தலைவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், அதையும் தாண்டி அவருடன் நட்பு பாரட்ட வைத்தது அவருடய நேர்மையான எழுத்துக்களே.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களை விமர்சித்து "உண்மை சுடும்" என கட்டுரை எழுதினார். அதன்பின், சோவியத் யூனியன் சென்று டெல்லி வந்தபொழுது, நண்பர் மூலம் தனது வீட்டில் வந்து தங்கிக் கொள்ள சொன்னார் காமராஜர். தன்னைப் பற்றி கடுமையாக விமரிசித்து எழுதிய ஒருவரை, தன் வீட்டிலேயே வந்து தங்கிக்கொள்ளச் சொன்ன பெருந்தன்மைக்கு சொந்தக்காரர் காமராஜர் என தன் நண்பர்களிடம் குறிப்பிடுகிறார்.

தனது கடைசி காலம் வரையில் கதர் ஆடைகளைத்தான் உடுத்தினார் சோலை. தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரிலிருந்து தினமும் நகரப் பேருந்தில்தான் பயணம் செய்வார். நான் அமெரிக்கா வந்த பிறகு எத்தனையோ முறை கார் வாங்கலாம் என கூறியும் கடைசி வரை மறுத்து விட்டார். தினமும் பணி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் லுங்கியை மடித்துக் கட்டி வீட்டைச் சுற்றி உள்ள தென்னை மரங்களுக்கிடையில் உள்ள களைகளை ப் பிடுங்க ஆரம்பிப்பார். ஆரம்ப காலங்களில் தனது எழுத்துலக பயணத்திற்கு அடுத்தபடியாக நேசித்தது தென்னை மரங்களைத்தான். அரசியல் வேறு, குடும்பம் வேறு என இரட்டை மாட்டு வண்டியை கடைசி வரை சீராக திறம்பட பயணிக்க வைத்தார்அப்பா.

English summary
Late writer Solai's son Madhavan Solai remembers his father and his impact in Tamil politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X