For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜிஎஸ்டி அதிகபட்ச வரியே 18% போதுமே.... மு.க.ஸ்டாலின் கோரிக்கை

அதிகபட்ச ஜிஎஸ்டி வரி 18% ஆக நிர்ணயிக்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அதிகபட்ச ஜிஎஸ்டி வரி 18% ஆக நிர்ணயிக்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். ஒவ்வொரு முறையும் கூட்டத்தை வட்டி குறைப்பு செய்வதற்கு பதில் 18% ஆக நிர்ணயிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

18% GST tax is enough, MK Stalin suggests

213 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி விகிதத்தை குறைத்து நேற்றைய தினம் மத்திய நிதியமைச்சர் மாண்புமிகு அருண் ஜேட்லி அவர்கள் தலைமையிலான ஜி.எஸ்.டி. கவுன்சில் அறிவித்திருக்கிறது.

சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் அவசரகதியில் அமல்படுத்தப்பட்டதால் மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், வணிகர்கள், சிறு மற்றும் குறு தொழில் செய்வோர் அனைவரும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பினர்.

அப்போதெல்லாம் அமைதி காத்தது மத்திய பா.ஜ.க அரசு. ஏன், தி.மு.க.,வின் சார்பில், "ஜி.எஸ்.டி. சட்டத்தை அமல்படுத்துவதை மூன்று மாதம் தள்ளி வைத்து, முறையாக திட்டமிட்டு பிறகு செயல்படுத்துங்கள்" என்று நான் மத்திய நிதியமைச்சருக்கு விடுத்த வேண்டுகோளையும் கூட ஏற்கவில்லை.

18% GST tax is enough, MK Stalin suggests

இங்குள்ள 'குதிரை பேர' அதிமுக அரசும் சட்டமன்றத்தில் தி.மு.க சுட்டிக்காட்டிய பாதிப்புகளையெல்லாம் கண்டுகொள்ளாமல் விரைந்து ஜி.எஸ்.டி சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்தது. அன்று மக்களின் பாதிப்புகளை கண்டுகொள்ள மறுத்த மத்திய பா.ஜ.க. அரசு, இன்று குஜராத் தேர்தல் நேரத்தில் இந்த வரிக்குறைப்பு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மனதில் வைத்து இந்த வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது என்பதை விட, குஜராத் தேர்தலை எண்ணி எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதுதான் 'அக்மார்க்' உண்மையாக இருக்கிறது.

ஜி.எஸ்.டி குளறுபடிகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும், வாழ்வாதார பாதிப்புகளுக்கும் இந்த மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். அரசியல் தேவைகளுக்காக செய்யப்படும் இதுபோன்ற மாற்றங்கள், மாநில வரி உரிமையை மத்திய அரசு கைப்பற்றிக் கொண்டது என்ற தி.மு.க.,வின் குற்றச்சாட்டை நிரூபிப்பதாக உள்ளது.

ஹோட்டல்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டபோது அதை திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்த்தது.

ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறிய முதலாளிகள், தொழிலாளிகள் உள்ளிட்ட அனைவரையும் பாதிக்கும் என்பதை எடுத்துரைத்தோம். ஆனாலும் பிடிவாதமாக ஹோட்டல்களுக்கு 18 சதவீத வரியை குறைக்க மறுத்து அந்த தொழிலையே ஐந்து மாதங்கள் முடக்கி வைத்ததார்கள். ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டு ஐந்து மாதங்கள் கழித்து ஹோட்டல்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான ஜனநாயகத்தில் எதிர்கட்சிகளின் ஆக்கபூர்வமான குரலை கேட்கவேண்டும் என்ற குறைந்தபட்ச அணுகுமுறையைகூட மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு கடைப்பிடிக்காமல் ஜி.எஸ்.டி சட்டத்தை எதேச்சதிகாரமான முறையில் அமல்படுத்தியது என்பது உண்மையிலேயே வேதனைக்குரியது.

18% GST tax is enough, MK Stalin suggests

ஜனநாயக நாட்டில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது என்பதற்கு ஒரு உதாரணமாக ஜி.எஸ்.டி. அமலாக்கமும், அதைத் தொடர்ந்து அடிக்கடி அறிவிக்கப்படும் வரி குறைப்புகளும் சாட்சியமாக திகழ்கின்றன.

இன்னும் சொல்வதென்றால் மத்திய அரசின் வருவாய் துறை செயலாளரே, "ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையை முற்றிலும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று அறிவித்திருப்பதும், மத்திய பிரதேசத்தில் உள்ள பா.ஜ.க. அமைச்சர் ஓம் பிரகாஷ் துர்வே, "ஜி.எஸ்.டி. வரி என்ன என்றே எனக்கு புரியவில்லை. ஏன், ஆடிட்டர்களுக்கும் கூட விளங்கவில்லை" என்று கூறியிருப்பதிலிருந்து சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் அவசரகதியில் அமல்படுத்தப்பட்டுவிட்டது என்பதை, மத்திய அரசில் கொள்கை முடிவுகளை எடுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் பா.ஜ.க.,வில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது புரிகிறது.

இதைவிட,உத்திர பிரதேச பா.ஜ.க. அமைச்சர் ராமாபதி சாஸ்திரி, "ஜி.எஸ்.டி பற்றி முழுவதும் படித்துப் பார்த்து விட்டு பதில் சொல்கிறேன்", என்று கூறிவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்திக்க மறுத்தது எல்லாம் செய்திகளாக வெளிவந்துள்ளன. இந்த நிகழ்வுகள் எல்லாம் ஜி.எஸ்.டி.யை செயல்படுத்தியதில் உள்ள சிக்கல்களை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

ஆகவே ஜி.எஸ்.டியின் கீழ் 213 பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது ஒரு துவக்கம் என்றாலும், இதுவே முடிவல்ல என்ற மனநிலையை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு பெற வேண்டும். ஏனென்றால் ஜி.எஸ்.டி. வரி அதிகபட்சமாக 18 சதவீதத்துக்கு மேல் போகக்கூடாது என்று எதிர்கட்சிகள் மட்டும் கூறவில்லை. மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் திரு அரவிந்த் சுப்பிரமணியனே கூறியிருக்கிறார் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்த ஐந்து மாத காலத்தில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பை கணக்கில் எடுத்துக் கொண்டு ஜி.எஸ்.டி.யில் உள்ள 28 சதவீத வரி விதிப்பை அடியோடு ரத்து செய்து விட்டு இனி அதிகபட்ச வரி 18 சதவீதம் மட்டுமே என்ற முடிவினை மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு எடுக்க உடனடியாக முன் வர வேண்டும்.

ஒவ்வொரு முறையும் ஜி.எஸ்.டி. கவுன்சிலை கூட்டி வரி குறைப்பு அறிவிப்புகளை வெளியிடுவதற்கு பதில், இனி 18 சதவீத வரியே அதிகபட்ச வரி என்ற நிலையை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய பா.ஜ.க. அரசு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

English summary
dmk working president MK Stalin has suggested the centre that 18% GST is enough, more than that not necessary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X