சென்னை நீலாங்கரை அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம்: நால்வர் கைது; 8 பெண்கள் மீட்பு
சென்னை: சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் விபசாரம் செய்ததாக நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 8 பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பிவைத்தனர்.
சென்னை நீலாங்கரை, ஜாபர்கான்பேட்டை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து விபசாரம் செய்வதாக விபசார தடுப்பு போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்தன. இதன்பேரில், குறிப்பிட்ட 2 அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
நீலாங்கரை செங்கேணியம்மன் கோயில் தெருவில் உள்ள சாந்தகுமாரி (55), கஸ்தூரி (45) ஆகியோர் வீட்டை விபசார தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு விபசார தொழில் நடந்து வருவதை உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர்.
அதேபோல், ஜாபர்கான் பேட்டையில் சலீம் என்பவரும் வீட்டில் பாலியல் தொழில் நடத்தியதாக கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மீட்கப்பட்டார்.அம்பத்தூரில் நிர்மலா தேவி (39) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.
இதேபோல அம்பத்தூரில் உள்ள மசாஜ் சென்டரிலும் விபசார சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வேட்டையில் சிக்கி கைது செய்யப்பட்ட 4 புரோக்கர்களும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட 8 இளம் பெண்கள், மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.