நல்லாயிருக்கீங்களா தாத்தா?... கருணாநிதிக்கு 3ஆம் வகுப்பு படிக்கும் மழலை கடிதம்!
சென்னை: நல்லாயிருக்கீங்களா தாத்தா என்று கேட்டு கருணாநிதிக்கு 3-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
கருணாநிதிக்கு கடந்த 24-ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அன்றைய தினம் இரவு அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்தது.
இதையடுத்து அவர் முதல் முறையாக காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார். இதனை அறிந்த தொண்டர்கள் மருத்துவமனைக்கு சென்றனர்.

எப்போது வெளியே வருவார்
தொண்டர்கள் மருத்துவமனைக்கு வெளியே உணவு அருந்தாமல் , கிடைக்கும் இடத்தில் சாலையிலேயே படுத்தி உறங்குகின்றனர். கருணாநிதியை வீட்டுக்கு டிஸ்சார்ஜ் செய்துவிட்டுதான் செல்வோம் என்று பிடிவாதத்துடன் உள்ளனர்.

இன்னும் சில நாட்கள்
தற்போது 5-ஆவது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார் கருணாநிதி. இவர் இன்னும் சில நாட்களுக்கு மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நாட்கள் கடந்து செல்வதை கண்டுகொள்ளாத தொண்டர்கள் தலைவரிடம் இருந்து "என் அன்பு உடன்பிறப்புகளே..." என்பதை எப்போது கேட்போம் என்ற ஆவல் அதிகரித்துள்ளது.

கடிதம்
திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டைச் சேர்ந்தவர் மிக்கலே மிராக்ளின். இவர் கார்மெல் பப்ளிக் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கருணாநிதியின் ரசிகை. இவர் அவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அது தற்போது வைரலாகியுள்ளது.

கவலை கொண்டேன்
அந்த கடிதத்தில், எனக்கு கருணாநிதி தாத்தாவை மிகவும் பிடிக்கும். தாத்தா நீங்கள் உடல்நலம் குன்றியிருப்பதால் நான் அழுதேன். அதுவும் எல்லாரும் தூங்கும் நேரத்தில் உங்கள் உடல்நலத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் நான் மிகவும் அழுதேன். உங்களுக்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன்.

மகிழ்ச்சி அடைந்தேன்
என் அம்மா என்னிடம் சொன்னார்கள்- நீ கருணாநிதி தாத்தாவுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்தாய் அல்லவா. அதனால் அவர் தற்போது நலமாக உள்ளார் என்று எனது அம்மா சொன்னதும் நான் மகிழ்ச்சியானேன். பள்ளிக்கும் மகிழ்ச்சியாக சென்று வந்தேன் என்று அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!