• search

இப்போதைய தேவை அகல்விளக்குகளே.. வாணவேடிக்கைகள் வேண்டாம்!

By Hema Vandana
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
   திராவிட அரசியல் செய்வதாக அறிவித்த கமல் கட்சி பெயரில் திராவிடத்தை காணவில்லை ஏன்? | Oneindia Tamil

   சென்னை: அரசியல் என்றாலே உயிர் உள்ளிட்ட அனைத்தையும் அர்ப்பணிக்க வேண்டிய அவசியமும் சூழலும் உருவாயிற்று. காந்தி, நேரு போன்றவர்கள் எல்லாம் தங்களுக்கு கைநிறைய காசுகளையும், வசதிகளையும் வாரிக்காடுத்த வழக்கறிஞர் தொழிலை கைவிட்டார்கள். நேதாஜி, அரவிந்தர் போன்றோர் ஐசிஎஸ் தேர்ச்சி பெற்று மாவட்ட கலெக்டர் என்ற மிகப்பெரிய அதிகாரத்தை உதறிவிட்டுத்தான் அரசியலுக்கு வந்தார்கள். பல தலைவர்கள் உடல் ரீதியான துன்பங்களையும், மனரீதியான அவமானங்களையும் அனுபவித்தார்கள். சில சமயம் தமது உயிரையே கூட அர்ப்பணித்தார்கள்.

   இந்தியாவிலேயே அதிகமாக படித்தவர்கள் கேரளத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் என்று ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. வெளிநாடுகளில், மருத்துவம், மென்பொருள் போன்ற பல்வேறு துறைகளில் தமிழர்கள்தான் சாதனை படைத்து வருகிறார்கள் என்று இன்னொரு புள்ளி விபரம் சொல்கிறது. ஆனால், ஆட்சி, அதிகாரம், அரசியல் அமைப்புகள் என்று பார்க்கிறபோது படித்தவர்களின் புள்ளிவிபர எண்ணிக்கை தமிழகத்தில் குறைவாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

   பணம், புகழ் போன்றவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு கட்சியை நடத்தும், அதை வைத்து ஆட்சியை பிடித்து விடலாம் என மனக்கோட்டை கட்டுவதும் மலிவாகிவிட்டது. மனிதநேயமும், நல்லெண்ணமும், பிரதிபலன் பாராத உதவிபுரியும் மனப்பான்மையும் எல்லாக்காலத்திலும் - இருந்துவரக்கூடிய குணாம்சங்களாகும்.., அவை திடீரென்று முளைக்கக் கூடியதல்ல. நடிகர்கள், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், கருணாஸ் போன்றோர் இத்தகைய சித்து விளையாட்டுகளில் இறங்கியவர்கள்தான்... இன்று ரஜினிகாந்த், கமஹாசன்... என பட்டியல் நீள்கிறது.

   கடைசியாக வரும் முகாம்

   கடைசியாக வரும் முகாம்

   இவர்கள் எல்லாரும் பல்லாண்டு காலம் சினிமாவில் நடித்தவர்கள். பல நூறு கோடிகளை சம்பாதித்தவர்கள். பத்திரிகை, தொலைக்காட்சி என்று பல ஊடகங்களில் பிரபலமானவர்கள். தங்களின் இளமைக்காலங்களை திரைப்படத்துறையில் வாய்ப்புகள் குறைகிறபோது - குவிந்துகொண்டிருக்கும் வருமானம் வற்றுகிறபோது - கைவசம் இருக்கிற பணத்தையும், மீதமிருக்கிற மலிவு விளம்பரத்தையும் முதலீடாக்கி மேலும் பணம் குவிக்க வழி தேடுகிறார்கள். அவ்வாறு அவர்கள் தேடி வரும் முகாம்தான் அரசியல்...

   இவர்கள் சொல்வதுதான் தத்துவம்

   இவர்கள் சொல்வதுதான் தத்துவம்


   ரசிகர்களை தொண்டர்களாக மாற்றி - தொண்டர்களை கட்சியின் பொறுப்பாளர்களாக உயர்த்தி - பாப்புலாரிட்டி மூலம் மக்களை திரட்டி இவர்கள் திருவாய் மலர்கிறார்கள். இவர்கள் வாயிலிருந்து வருவதுதான் அரசியல். இவர்கள் சொல்லுவதுதான் தத்துவம். இவர்கள் உதிர்க்கும் வார்த்தைகள்தான் வேதம்... தமிழக மக்களிடம் ஒரு பலவீனம் இருக்கிறது. விளம்பரமானவர்கள் யாராக இருந்தாலும் - அவர்கள் எதை உளறிக் கொட்டினாலும் - அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் ஏமாளித்தனம் உருவாகியிருக்கிறது.

   ஆனானப்பட்ட கலைவாணருக்கே அந்த நிலைமை

   ஆனானப்பட்ட கலைவாணருக்கே அந்த நிலைமை

   ஒருமுறை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனை சட்டமன்ற தேர்தலில் நிறுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக டில்லியில் கலைவாணரை சந்திக்க பிரதமர் நேரு நேரமும் ஒதுக்கியிருந்தார். இதைக்கேள்விபட்ட ஒரு அரசியல் பிரமுகர், கூத்தாடிகள் எல்லாம் சட்டசபைக்குள் வந்தால் அது உருப்படுமா? என்று கேள்வி எழுப்பினார். இதை அறிந்த கலைவாணர், பிரதமர் நேருவை சந்திக்காமலேயே தமிழகம் திரும்பிவிட்டார். சிரிப்பும், சிந்தனையும், பகுத்தறிவும், பக்குவமும், மனித நேயமும், மக்கள் பற்றுக்கொண்ட கலைவாணரையே அன்றைய தமிழகம் சட்டசபைக்குள் அனுமதிக்க மறுத்தது.. இன்றோ இவர்களைத் தவிர வேறு யாரும் ஆட்சியில் அமர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருசிலர் விளம்பரமாகிவிட்டால் போதும், எதை வேண்டுமானாலும் சாதித்து விடலாம் என்று கருதுகிறார்கள். விளம்பரமாகி விடுவதாலேயே மக்கள் அவர்களை அங்கீகத்து விட்டதாக அர்த்தமல்ல.

   யூதாஸும், கோட்சேவும் கூட பிரபலங்கள்தான்

   யூதாஸும், கோட்சேவும் கூட பிரபலங்கள்தான்

   ஏசுநாதர் எந்த அளவுக்கு விளம்பரனாரோ அந்த அளவிற்கு அவரைக் காட்டிக்காடுத்த யூதாஸும் விளம்பரமானான், காந்திஜி எந்த அளவிற்கு விளம்பரமானாரோ அந்த அளவிற்கு அவரை சுட்டுக்கொன்ற கோட்சேயும் விளம்பரமானான். இயேசுவின் பெயர் உள்ளவரை யூதாசின் பெயரும், காந்திஜி உள்ளவரை கோட்சேவின் பெயரும் இருக்கும். அதற்காக மக்கள் அனைவரும் இந்த கொலைக்காரர்களை ஏற்றுக் கொண்டதாகவோ நேசிப்பதாகவோ அர்த்தமல்ல.

   ஜெயகாந்தன் சொன்னது போல

   ஜெயகாந்தன் சொன்னது போல

   தேவரின் நல்ல நேரம் திரைப்படத்தில் வந்த யானையும், பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறையில் வந்த நாய்க் குட்டியும் கூட பிரபலமானவைதான். மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன், ஒருமுறை சொன்னதுபோல், பெருந்தலைவர் காமராஜரை ஒரு நாய் கடித்து விட்டால், அதுகூட பாப்புலராகிவிடும். ஆனால் சில பேர் தங்களை மக்களுக்கு தெரியும் என்பதாலும், நிறைய பேரால் அறியப்படுகிறோம் என்பதாலும், தாங்கள் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவோம் என்று நினைத்துக் கொண்டிருப்பது பரிதாபம் என்றார்.

   வீழும் கரித்துண்டுகள்

   வீழும் கரித்துண்டுகள்

   மாநாடுகளும், பேரணிகளும், கட் அவுட்களும், தோரணங்களும் இப்போதெல்லாம் சாதாரண விஷயங்களே. மக்களைக்கூட்டி பிரம்மாண்டத்தை நிரூபிப்பதன் மூலம் மனதை வென்றுவிட்டதாக பொருள் கொள்ள முடியாது. வாணவேடிக்கைகள் பிரகாசமானவைதான். வண்ண மயமானதுதான். கண்களைக் கொள்ளை கொள்ளும் கவர்ச்சிகரமானதுதான். ஆனால், வானத்தின் ஒரு எல்லைக்குப்பிறகு அது கண்காணாத இடத்தில் வெறும் கரித்துண்டாகத்தான் கரைந்து விழும். உள்ளத்தைக் கவர்ந்த ஒளிவெள்ளம் காணாமல் போகும். அகல்விளக்குகளோ - குத்துவிளக்குகளோ அப்படியல்ல. எண்ணெய் என்ற உதிரத்தோடும், வெண்திரி என்ற நரம்புகளோடும், நெருப்பு என்ற ஜீவனோடும் நின்று நிதானமாக நீண்டகாலத்திற்கு எரியும். இருளை விரட்டியடித்து வெளிச்சத்தை வழங்கும். நமக்கு இப்போது தேவை - அகல்விளக்குகளே.. வாணவேடிக்கைகள் வேண்டாம்...!

   பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   English summary
   Actors are launching new political parties in Tamil Nadu with various expectations and Kamal has joined this latest.

   நாள் முழுவதும் oneindia
   செய்திகளை உடனுக்குடன் பெற

   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more