உலகுக்கே சோறு போடும் விவசாயிகளை நகரங்களின் அடிமையாக மாற்றுவதுதான் அரசின் திட்டமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த பத்தாண்டுகளாக ஒரு நாளைக்கு இரண்டாயிரம் பேர் வேளாண்மையை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள் என்பது தேசிய புள்ளி விபரக் கணக்கு. அதே போல ஒரு நாளைக்கு சராசரியாக வேளாண்மைக் கடன் தற்கொலைகள் மட்டும் ஐம்பதிற்கும் குறையாமல் இருக்கிறது.

முதலிடத்தில் மராட்டியம் அடுத்து குஜராத், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா என்று இந்தப்பட்டியல் செல்கிறது. கிட்டத்தட்ட 97% பாசன வசதியுள்ள பஞ்சாபில் நிகழும் வேளாண்மைத் தற்கொலைகள் நான்கு. ஹரியானாவில் விவசாயிகளின் மனைவிமார்களின் தற்கொலைகள் அதிகமாம்.

Are governments trying to create cheap labours by converting farmers

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விவசாயிகள் வேளாண்மையை விட்டு வெளியேறுங்கள் என்று விவசாயிகளுக்கு அறைகூவல் விடுத்தார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவோ, சட்டசபையிலே எவ்வளவு விவசாயிகளை வேளாண்மையை விட்டு வெளியேற்றுகிறோம் என்று பெருமை பொங்க சொல்கிறார்.

உங்களுக்கு என்ன தோன்றுகிறது? வேளாண்மையின் அடுத்த படிநிலையான தொழிற்சாலைகளுக்கு நகர வேண்டியது தானே? என்ன கேடு வந்தது என்றுதானே? ஆனால் வேளாண்மை பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் நகரங்களில் என்ன வேலைக்கு செல்ல முடியும்?

எழுபதுகளில் ஒரு மில் வேலைக்கு செல்ல முடியும். இப்போது கடைநிலை வேலைகளுக்குத்தான் செல்ல முடியும். பிற மாநிலத்தவர் இங்கு வந்து சாலை போடும் வேலைகள் அல்லது கட்டிட வேலைகள் செய்ய முடியும்.

ஆக தொழிற் துறையில் வேளாண் சார்ந்த மக்களுக்கு போக்கிடம் கூட சுத்தமாக கிடையாது. நகரங்களின் கழிவு வேலைகளே அவர்களுக்கு காத்திருக்கிறது என்பது தான் உண்மை. கடந்த இருபது ஆண்டுகளில் எத்தனை தொழிற்சாலைகள் எத்தனை உள்ளூர் உற்பத்தியாளர்கள் தாக்குப் பிடித்துள்ளார்கள் என்கிற உண்மையும் முகத்தில் அறையக் கூடியதே.

உண்மையாக வேளாண்மையை அழித்து பிற தொழில்களும் சிறக்கவில்லை என்பதே நிதர்சனம். ஒரு விவசாயி நகரத்திற்கு நகர்வது என்பது ஒரு தனி மனிதன் மட்டுமே நகர்வது அல்ல. அவருடைய குடும்பமும் சேர்ந்து நகர வேண்டும். அந்த நகர்தல் சார்ந்து பிறவற்றையும் யோசிக்க வேண்டும். நகரத்தில் வாழத் தேவையான வருமானம் ஈட்டுவது என்பது சாத்தியமில்லை.

நகர சீமான்களின் கழிவுகளை உண்டு வாழ அவர்களைத் தள்ளியிருக்கிறோம். இது தவிர மருத்துவம் கல்வி போன்ற தேவைகளுக்கு அவர்களால் சம்பாதிக்க முடியாது. அருகில் உள்ள நகரங்களுக்கு சென்று வரும் கிராம விவசாயியோ கூலியோ ரெயில் கட்டணத்தில் இரண்டு ரூபாய் கூடினால் கூட அவரால் தொடந்து வேலைக்கு செல்ல முடியாது.

அடுத்தபடியாக அதிகப் பேரை வேலை இழக்கச் செய்வதன் மூலம் பெஞ்சில் நிறையப் பேர் வேலையில்லாமல் இருப்பதன் மூலம் அலுவலகங்களில் பயம் தொடர்ச்சியாக இருக்கும். அந்தப் பயத்தைக் கொண்டே முதலாளித்துவ அரசுகள் வெற்றிகரமாக நடக்கும் என்று கார்ல் மார்க்ஸ் சொல்கிறார். விவசாயிகளின் தற்கொலைகளை எளிதாக கடந்து செல்லும் மக்கள் தங்கள் எதிர்காலம் குறித்த அச்சத்தில் வாழும் புழுக்கள் தான்.

ஒரு விவசாயி ஏன் வேலையில்லாமல் இருக்கிறான் என்று ஐஐடி புகழ் பாஜக அடிவருடிகளிடம் கேளுங்கள். அவன் தகுதியும் திறனும் இல்லாதவன் என்று சொல்வார்கள். ஏனென்றால் விளையாட்டின் விதிகளை தங்களுக்கு ஏற்றபடி மாற்றிக் கொண்டு நியாயம் பேச இவர்களுக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது.

Gentrification என்கிற சொல்லாடல் நகரங்களுக்கு மக்களைத் தள்ளி அவர்களை பண்படுத்துவதாக முதலாளித்துவம் சொல்லி வருகிறது.

இந்தத் தற்கொலைகள் ஒரு வகையில் சுயமரியாதை உள்ளவர்களின் முரட்டுத் துணிச்சல்தான். இந்தப் பின்னணியில்தான் நாம் இதை விவாதிக்க வேண்டி இருக்கிறது.

- இளங்கோ கல்லணை

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Are governments trying to create cheap labours by converting farmers? An analysis.
Please Wait while comments are loading...