என்கிட்ட கேட்காதீங்க.. அவருகிட்ட போய் கேளுங்க.. அழகிரி பாய்ச்சல்!

மதுரை: திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் போய் கேளுங்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு திமுகவில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சரான அழகிரி நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கட்சியில் என்றாவது ஒரு நாள் நிச்சயம் சேர்க்கப்படுவோம் என நம்பியிருந்தார் அழகிரி.
ஆனால் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். 2 ஆண்டுகளுக்கும் மேலாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த மாதம் காலமானார்.

தலைவரான ஸ்டாலின்
இதைத்தொடர்ந்து மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவோம் என்று எதிர்பார்த்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அழகிரி ஆலோசனை
இதனால் ஆத்திரமடைந்த அழகிரி தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் கடந்த 5ஆம் தேதி சென்னையில் அமைதி பேரணி நடத்தினார். தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசித்து வருகிறார்.

புதிய அமைப்பு
கலைஞர் எழுச்சி பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பை மு.க அழகிரி தொடங்க இருப்பதாக அவரது ஆதரவாளர் இசக்கிமுத்து தெரிவித்தார். இதற்காக, மாவட்ட வாரியாக ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறியிருந்தார்.

சொந்த கருத்து
ஆனால் இந்த தகவலை மு.க. அழகிரி மறுத்துள்ளார். கருணாநிதி பெயரில் புதிய அமைப்பு தொடங்க நான் ஆலோசனை செய்து வருவதாக இசக்கிமுத்து தெரிவித்தது அவரது சொந்த கருத்து என அழகிரி தெரிவித்தார்.

என்னிடம் கேட்காதீர்கள்
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மு.க அழகிரியிடம் திமுகவில் மீண்டும் சேர்க்க மறுப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மு.க அழகிரி, திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என்று என்னிடம் கேட்காதீர்கள், அவர்களிடம் கேளுங்கள் என்று கூறிச்சென்றார்.