• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

எழுத்தாளர் பெருமாள் முருகனின் "மாதொருபாகன்" சர்ச்சை என்ன?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: மாதொருபாகன் நூல் விவகாரத்தில் "எழுத்தாளர் பெருமாள் முருகனாகிய நான் இறந்துவிட்டேன்..இனி பெ. முருகன் மட்டும் உயிரோடு" என்று அதிர வைக்கும் அறிக்கை ஒன்றை எழுத்தாளர் பெருமாள் முருகன் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாதொருபாகன் என்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவல் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. இதில் திருச்செங்கோட்டில் முன்னர் நடைபெற்ற திருவிழா ஒன்றைப் பற்றி பதிவு செய்திருந்தார். அந்தத் திருவிழா காலத்தில் இரவு நேரத்தில் பெண்களும் ஆண்களும் விரும்பியவர்களோடெல்லாம் உடலுறவு கொண்டதாக எழுதியிருந்தார்.

'Author Perumal Murugan has died' , hounded by Hindutva groups author puts up poignant post

அந்தப் பதிவுக்கு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.கவினர் எதிர்ப்பு தெரிவித்து பெருமாள் முருகனிடம் பஞ்சாயத்து செய்ய கிளம்பியனர். இதற்கு ஆதரவாக திருச்செங்கோட்டில் கடை அடைப்பும் நடத்தப்பட்டது.

எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக எழுத்தாளர்களும் திரண்டனர். அத்துடன் பெருமாள் முருகனுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. பின்னர் பெருமாள் முருகன் மன்னிப்பும் கோரினார்.

ஆனால் ஒருசில கும்பல் அவரை விடுவதாக இல்லை என்று அடம்பிடித்த நிலையில் பெருமாள் முருகன் நேற்று ஒரு அறிக்கையை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அதில் எழுத்தாளர் பெருமாள் முருகன் இறந்துவிட்டதாகவும் இனி எழுதப் போவதில்லை என்றும் கூறியிருந்தார்.

அப்படி என்ன சர்ச்சை அந்த நூலில் என்கிறீர்களா? இதோ கடந்த 7-ந் தேதியன்று பெருமாள் முருகன் வெளியிட்ட அறிக்கையை படியுங்கள்..

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகச் சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை ஆகியவற்றை எழுதி வருகிறேன். என் நூல்கள் பல்வேறு விமர்சகர்களாலும் எழுத்தாளர்களாலும் வாசகர்களாலும் நல்லவிதமாக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றன. இலக்கியத்திற்கு என வழங்கப்படும் பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றிருக்கிறேன். கொங்குப் பகுதியில் வழங்கும் சொற்களைத் தனி ஒருவனாகத் தொகுத்துக் ‘கொங்கு வட்டாரச் சொல்லகராதி'யை வெளியிட்டிருக்கிறேன். இதற்குத் தமிழக அரசு சிறந்த நூலுக்கான பரிசை வழங்கிக் கௌரவித்துள்ளது. திருச்செங்கோட்டில் வாழ்ந்த அறிஞராகிய தி.அ.முத்துசாமிக் கோனாரின் ‘கொங்கு நாடு' என்னும் வரலாற்று நூலை என்னும் நூலைப் பதிப்பித்திருக்கிறேன். கொங்குச் சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறேன். இப்படி என் எழுத்துக்கள் வழியாகத் திருச்செங்கோட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.

என் சொந்த ஊர் திருச்செங்கோடு. அந்த ஊரில் பிறந்து வளர்ந்து வாழ்ந்தவன். சொந்த ஊரின் மீது பெரும் பற்றும் மதிப்பும் கொண்டிருப்பவன். ஒரு நாவலில் நம் ஊரைப் பயன்படுத்துவது ஊருக்குப் பெருமை சேர்க்கும் விஷயம் என்று நம்பியவன். இந்த ஊர் மக்களின் உழைப்பையும் ஆளுமையையும் வெளிப்படுத்துவனவாகவே என் படைப்புகளை உருவாக்கியுள்ளேன். அப்படித்தான் 2010ஆம் ஆண்டு ‘மாதொருபாகன்' என்னும் நாவலை எழுதினேன். அது நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையைப் பற்றியது. குழந்தைப் பேறில்லாத தம்பதியரின் துயரங்களைக் கூறுவதாகும்.

நாவல் என்பது வாழ்க்கையும் புனைவம்சமும் கற்பனையும் கூடிய படைப்புச் செயல்பாடு. நாவலில் இடம் பெறுபவை அனைத்தும் அப்படியே நடைமுறையில் இருப்பவை, நடப்பவை எனக் கருத முடியாது. அதில் நடப்பின் சதவீதம் குறைவாகவும் புனைவின் அதாவது கற்பனையின் அம்சம் கூடுதலாகவும் இருக்கும். மாதொருபாகன் நாவல் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது. அக்களத்தைக் கற்பனையில் உருவாக்கினேன்.

ஒவ்வொரு காலத்திலும் சந்ததியை வளர்ப்பதற்குக் குழந்தைப் பேறு வேண்டும் என்னும் எண்ணம் தீவிரமாக இருந்துள்ளது. இன்று செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் அங்கீகாரத்துடன் செயல்படுகின்றன. ஆனால் பழைய காலத்தில் இத்தகைய வசதிகள் இல்லை. ஆகவே கணவன் அல்லாத இன்னொரு ஆடவனுடன் கூடிக் குழந்தை பெறும் முறையைப் பலவிதமாகப் பின்பற்றியுள்ளனர். மகாபாரதத்தில் சந்ததியை உற்பத்தி செய்ய இத்தகைய நடைமுறையைப் பின்பற்றியமை பற்றிப் பல சான்றுகள் உள்ளன.

ஆயிரக் கணக்கானோர் கூடும் திருவிழாக்களைக் குழந்தைப் பேறுக்கான சந்தர்ப்பங்களாகப் பயன்படுத்தியுள்ளனர். இதற்கு நாட்டுப்புறவியல் துறையில் வாய்மொழித் தரவுகள் நிறையக் கிடைக்கின்றன. ஆ.சிவசுப்பிரமணியன், தியடோர் பாஸ்கரன், அ.கா.பெருமாள் உள்ளிட்ட பண்பாட்டு மானிடவியல் அறிஞர்கள் இத்தகைய செய்திகளைப் பதிவு செய்துள்ளனர். அப்படி அறிந்த ஒன்றைத் திருச்செங்கோடு திருவிழாவுக்குப் பொருத்தி எழுதப்பட்ட நாவல் ‘மாதொருபாகன்.'

திருவிழாவில் பிற ஆடவனோடு உறவு கொண்டு குழந்தைப் பேறு அடைவதை ஆதரிப்போருக்கும் எதிர்ப்போருக்கும் ஏற்படும் உறவு முரண்கள் நாவலில் பேசப்பட்டுள்ளன. அதில் வரும் விவரணைகள் எதுவும் இன்றைய காலத்தைக் குறிப்பதல்ல. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்ததாகவே காட்டப்பட்டுள்ளது.

இதில் வரும் திருச்செங்கோடு இன்றைய கால ஊரல்ல. பல்லாண்டுகளுக்கு முந்தைய ஒரு புனைவுவெளியாகவே, கற்பனையான ஊராகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு என்னும் பெயரை நீக்கிவிட்டால் அது எந்த ஊருக்கும் பொருந்தும். பெண்களின் மன உணர்வை வெளிப்படுத்தும் போக்கிலேயே நாவல் எழுதப்பட்டுள்ளது. குழந்தை இல்லாத பெண் படும் கஷ்டங்களைப் பேசுவதே நாவல். மற்றபடி எந்தப் பெண்ணையும் இழிவாகச் சித்திரிக்கவில்லை. பாத்திரங்கள் பேசும் உரையாடல் அவர்களின் கோணத்திலானது. அதை எழுத்தாளரின் கருத்தாகவோ பொதுக் கருத்தாகவோ எடுத்துக்கொள்ள இயலாது.

கடவுளையோ கோயிலையோ எள்ளளவும் கேவலப்படுத்துவதாக நாவல் எழுதப்படவில்லை. ஒவ்வொருவருக்குள்ளும் கடவுள் குடி கொண்டிருக்கிறான் என்னும் கருத்துப்படவே நாவல் எழுதப்பட்டுள்ளது. திருச்செங்கோட்டைக் கேவலப்படுத்தும் எண்ணம் எதுவும் இல்லை. குழந்தைப் பேறுக்கான பல்வேறு வேண்டுதல்களைக் கொண்ட ஊர் திருச்செங்கோடு என்பதாகவே காட்டப்பட்டுள்ளது.

நம் முன்னோர்களின் வாழ்க்கை மதிப்பீடுகள் இன்றைய கால வாழ்வின் மதிப்பீடுகளில் இருந்து மிகவும் வேறுபட்டவை. அவர்கள் வாழ்க்கையை இன்றைய வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்துக் கேவலம் எனக் கருத வேண்டியதில்லை. அவற்றை அங்கீகரித்துக் கொள்வதும் புரிந்துகொள்வதும் அவசியம். முன்னோர்களின் வாழ்வில் மகாபாரதம் தொடங்கி நாட்டுப்புறப் பண்பாடு வரை பரவிக் கிடக்கும் பல்வேறு மரபுகளில் இருந்து ஒரு சிறு கூறைப் புனைவாக, கற்பனையாக எழுதியுள்ளது இந்நாவல். மற்றபடி யார் மனத்தையும் புண்படச் செய்யும் நோக்கத்துடன் நாவல் எழுதப்படவில்லை என்பதை உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன்.

எனினும் அந்த நாவலை எரித்துப் போராட்டம் நடத்தியதோடு சில பக்கங்களை மட்டும் நகல் எடுத்துச் சிலர் ஆயிரக்கணக்கில் மக்களிடம் விநியோகித்துள்ளனர். இந்த நாவல் ஊரைக் கேவலப்படுத்துகிறது என்றும் பெண்களைக் கேவலப்படுத்துகிறது என்றும் அவர்கள் பிரச்சாரம் செய்துள்ளனர். அப்பக்கங்களை வாசித்தவர்களும் அவற்றை நம்பியுள்ளனர். நாவலை முழுதாக வாசிப்பவருக்கு நாவல் மிகவும் பிடிக்கும் என்பதே என் நம்பிக்கை. அவ்வாறு பிரச்சாரம் செய்தவர்கள் என்னிடம் இதுவரை விளக்கம் கேட்கவேயில்லை. அவர்களை அணுகிப் பேச முயன்றவர்களையும் மதிக்கவில்லை. பிரச்சினையை வளர்த்துக் கொண்டு செல்வதில்தான் விருப்பமாக இருந்துள்ளனர்.

என்றாலும் நாவலுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவர்களின் கருத்தால் திருச்செங்கோடு வாழ் பொதுமக்கள் பலர் நாவல் மீதும் என் மீதும் கோபம் கொண்டுள்ளனர் எனவும் உண்மையாகவே நாவல் ஊரை இழிவுபடுத்துகிறது என்று மனம் புண்படுவதாகவும் அறிகிறேன். திருச்செங்கோட்டையோ மக்களையோ மதத்தையோ சாதியையோ இழிவுபடுத்தும் நோக்கம் எனக்குச் சிறிதும் இல்லை. என்றாலும் திருச்செங்கோடு மக்களின் மன உணர்வைப் புரிந்துகொள்கிறேன். பொதுமக்களின் அன்றாட வாழ்வுக்கு இடையூறு நேரும் வகையில் கடையடைப்பு முதலிய போராட்டங்கள் நடக்கப் போவதாகவும் அறிகிறேன்.

என் எழுத்தால் திருச்செங்கோட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைவது எனக்குப் பெரும் வருத்தம் தருகிறது. ஒருமுறை வாரணாசியில் அப்போதைய வைஸ்ராய் பங்கேற்ற நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியடிகள் பேசினார். வைஸ்ராய் வருகைக்காகப் பொதுமக்களுக்கு இடையூறு நேரும் வகையில் செய்திருந்த ஏற்பாடுகளைக் கடுமையாகக் கண்டித்து அவர் பேசினார். ‘பொதுமக்களின் ஒருநாள் வாழ்க்கையைவிட வைஸ்ராயின் உயிர் ஒன்றும் பெரிதல்ல' என்னும் கருத்துப்பட அவர் பேச்சு அமைந்தது. காந்தியடிகளிடம் இருந்து நான் இந்தச் செய்தியை எடுத்துக்கொள்கிறேன். திருச்செங்கோடு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைவிட என் புத்தகம் ஒன்றும் பெரிதல்ல என்று கருதுகிறேன்.

ஆகவே நாவலில் திருச்செங்கோடு என்னும் ஊர்ப்பெயரையும் அதன் அடையாளங்களையும் பயன்படுத்தி எழுதியதைத் தங்கள் வாசிப்பின் வழி தவறு என உணரும் திருச்செங்கோடு பொதுமக்களிடம் அதற்காக மிகுந்த வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்து வெளியாகும் பதிப்பில் ஊர்ப்பெயரையும் அடையாளங்களையும் நீக்கித் திருச்செங்கோடு என்பதற்கான எந்தக் குறிப்பும் இல்லாமல் பதிப்பிக்க உள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே மக்களின் அன்றாட வாழ்வுக்கு இடையூறு நேரும் வகையில் யாரும் எந்த அமைப்பும் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் எனப் பொதுமக்களையும் அமைப்புக்களையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பெருமாள் முருகன் கூறியிருந்தார்.

பெருமாள் முருகனின் இந்த விளக்கத்தையும் ஏற்காமல் சில அமைப்புகள் பிடிவாதம் பிடித்த காரணத்தால் உச்சகட்டமாக தாம் இனி எழுதப் போவதில்லை.. பெருமாள் முருகன் என்பவர் இறந்துவிட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,.

English summary
His name was tipped for the year’s Sahitya Akademi award, a book he wrote in 2010 was translated and published to rave reviews last year - nothing could have gone wrong for Tamil author and literary chronicler Perumal Murugan who belongs to a tiny town in south Tamil Nadu, Tiruchengode. The author however, has been forced to flee from his hometown along with his family over the contents of his book Mathorubhagan which depicts the life of a childless couple a century ago based in Tiruchengode, a town which practiced “traditional free, consensual sex rituals” giving childless couples a one-chance opportunity at continuing their lineage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X