For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கரகாட்டக் கலைஞர் மோகனாம்பாள் ஜாமீன் மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Bail plea of ‘Karagam’ dancers dismissed
சென்னை: செம்மரக்கட்டை கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதால் கரகாட்டக்கார பெண் கலைஞர்களான அக்காள், தங்கைக்கு ஜாமீன் வழங்கமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், வசந்தபுரத்தை சேர்ந்தவர் மோகனா என்ற மோகனம்மாள் (வயது 55). இவரது அக்காள் நிர்மலா (60). இவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவில் கூறியிருப்பதாவது:-

காட்பாடி போலீசார் கடந்த மே 25-ந் தேதி எங்கள் வீட்டில் நடத்திய சோதனையில், ரூ.4 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரத்து 500-யையும், 73 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். இதன்பின்னர், எங்கள் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, நாங்கள் நீதிமன்றத்தில் சரணடைந்தோம். எங்களை போலீசார் காவலில் எடுத்தும் விசாரித்துவிட்டனர். இதையடுத்து நாங்கள் ஜாமீன் கேட்டு வேலூர் மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த 1ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

எனவே, எங்களுக்கு ஜாமீன் வழங்கவேண்டும். எங்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகை ஆகியவைகளுக்கு உரிய கணக்கை தாக்கல் செய்ய தயாராக உள்ளோம். எனவே எங்களுக்கு ஜாமீன் வழங்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

போலீஸ் பதில் மனு

இந்த மனு நீதிபதி பி.தேவதாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீசார் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில்,

மனுதாரர் மோகனா குடியிருந்த வாடகை வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடிக்குமேல் ரொக்கப்பணமும், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், வைப்பு நிதி பத்திரங்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளோம். மனுதாரர் மோகனா, செம்மரக்கட்டை, சந்தனக்கட்டை கடத்தல் சம்பவத்திலும், அதிக வட்டிக்கு கடன் கொடுத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

தலைமறைவாக வாய்ப்பு

இவருக்கு கிரிமினல் குற்றவாளிகளுடன் தொடர்பு உள்ளது. பல ஆண்டுகளாக போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால், எங்காவது தப்பியோடி தலைமறைவாகி விடுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

நீதிபதி உத்தரவு

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ் தனது உத்தரவில், மனுதாரர்கள் மோகனா, நிர்மலா ஆகியோர் சகோதரிகள். இவர்கள் இருவரும் கரகாட்ட கலைஞர்களாக தொழில் செய்துள்ளனர். அவர்களுக்கு வயதாகிவிட்ட காரணத்தினால், கோவில் திருவிழா மற்றும் பிற விழாக்களுக்கு கரகாட்டம் கலைஞர்களை ஏற்பாடு செய்து நடன நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளனர்.

பணம், நகை பறிமுதல்

இதை வெளிப்படையாக அவர்கள் செய்தாலும், மறைமுகமாக பல குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மோகனா, காட்பாடியில் ஜமுனா என்பவர் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். அவரது வீட்டை போலீசார் சோதனை செய்தபோது, ரூ.4.4 கோடியும், 591 கிராம் தங்கம், 83 கிராம் வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

தலைமறைவு வாழ்க்கை

இதையடுத்து மோகனாவும், நிர்மலாவும் தலைமறைவாகிவிட்டனர். பின்னர், இருவரும் அடுத்தடுத்து கோர்ட்டில் சரணடைந்துள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலங்களையும் பெற்றுள்ளனர். அதன்படி, நிர்மலாவின் மகன் சரவணன், மோகனா, நிர்மலா ஆகியோர் பாபு மற்றும் சிலருடன் சேர்ந்து சந்தனகட்டை, செம்மரக்கட்டை கடத்தல், கந்துவட்டி போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

பணம் வந்தது எப்படி

பாபுவின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், செம்மரக்கட்டைகள், ரொக்கப்பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் அதிகாரிகள், மோகனா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜாமீன் மனு தள்ளுபடி

மேலும், மனுதாரர்கள் பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளது. குற்ற செயல்களில் ஈடுபடுவோருடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டுள்ளனர். இவர்கள் தலைமறைவாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இந்த சூழ்நிலையில், இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால், மனுதாரர்கள் தலைமறைவாகவும், போலீஸ் விசாரணைக்கு குந்தகம் ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. எனவே, மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கமுடியாது. அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

English summary
The Madras High Court on Monday dismissed the bail petition of Mohana alias Mohanambal, 55, and her sister, both professional ‘Karagam’ dancers of Vellore, in a sandalwood smuggling case registered by the Katpadi police this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X