பாஜக கொடி தீ வைத்து எரிப்பு.. மர்ம நபர்கள் அட்டகாசம்.. தென்காசி அருகே பரபரப்பு.. போலீஸ் விசாரணை
தென்காசி: தென்காசி மாவட்டம் கடையம் அருகே வைக்கப்பட்டிருந்த பாஜக கொடியை மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து எரித்துவிட்டு தப்பி சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே செல்லபிள்ளையார் குளம் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த திமுக, அதிமுக, பாஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளின் சார்பில் கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்தந்த கட்சிகளின் சார்பில் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடக்கும் போது அங்கு கொடியேற்றப்பட்டு கொண்டாடப்படுவது வழக்கம். மற்ற நேரங்களில் கொடிகள் ஏற்றப்பட்டவாறே இருக்கும்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை செல்லப்பிள்ளையார்குளத்தில் உள்ள பாஜகவின் கொடிக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்த கொடி மட்டும் சற்று கீழே இறக்கப்பட்டு பறந்துகொண்டிருந்தது. மேலும் கொடிக்கம்பமும் கல்லால் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த இருவர் தான் மது போதையில் இதனை செய்தது தெரியவந்தது.

எனினும் பாஜகவை சேர்ந்தவர்கள் இதனை பெரிதுபடுத்தாமல் நேற்று மாலை அந்த கொடி மற்றும் கம்பத்தினை சீர் செய்து மீண்டும் கொடியை ஏற்றி வைத்து விட்டு சென்றனர். இதனால் நேற்று மாலை பாஜகவின் கொடிக்கம்பத்தில் பாஜக கொடி பறந்துகொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் பாஜக கொடியை கீழே இறக்கி அதில் தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதை காலையில் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிலரிடம் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற கட்சிகளின் கொடிகளும் அங்கு இருக்கையில் பாஜகவின் கொடி மட்டும் எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications