திருப்பூர்: அரபி படிக்காத சிறுவனுக்கு சூடு; பள்ளி நிர்வாகி கைது!
திருப்பூர்: திருப்பூரில் அதிகாலை எழுந்து அரபி படிக்காத சிறுவனை அயன்பாக்சில் சூடு வைத்த பள்ளி நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருப்பூரை சேர்ந்த அப்துல் ஹக்கீம் என்பவர் தனது 6 வயது மகன் இப்ராஹீமை, அரபு மொழி கற்பதற்காக அக்ஹாரபுதூரில் உள்ள மதரசா பள்ளியில் சேர்த்துள்ளார். அப்துல் ஹக்கீம் தனது மகனை பார்க்க பள்ளிக்கு சென்றபோது பள்ளி நிர்வாகி முகமது ஷேக் பரீத், இப்ராஹீமை பார்க்க அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதில் சந்தேகமடைந்த அப்துல் ஹக்கீம், தனது மகனை பார்க்காமல் செல்ல முடியாது என்று சொல்லவே இப்ராஹீமை பார்க்க அனுமதித்துள்ளார் பள்ளி நிர்வாகி. அப்போது, இப்ராஹீம் உடம்பில் பல பகுதிகளில் தீ காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் அப்துல் ஹக்கீம்.
இதையடுத்து, தனது மகனை உடனடியாக அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளார். மேலும், இது குறித்து மங்கலம் காவல் நிலையத்தில் அப்துல் ஹக்கீம் புகார் அளித்திருக்கிறார். புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து மதரசா பள்ளி நிர்வாகி ஷேக் பரீத்திடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
போலீசாரின் விசாரணையில், ''சிறுவன் இப்ராஹீம் அதிகாலையில் எழுந்து படிக்கவில்லை என்பதாலும், குறும்பு செய்ததாலும் உடம்பில் அயன்பாக்ஸ் மூலம் சூடு வைத்ததாக ஷேக் பரீத்" கூறியிருக்கிறார். இதையடுத்து போலீசார் ஷேக் பரீத்தை கைது செய்து திருப்பூர் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ஷேக் பரீத்திடம் விசாரணை நடத்திய நீதிபதி, அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, பள்ளி நிர்வாகியை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications