For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெங்கு பற்றி கூடுதல் தகவல் தெரியணுமா? இந்த நம்பரில் கூப்பிடுங்க

டெங்கு காய்ச்சல் மக்கள் கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள தமிழக அரசு சார்பில் உதவி தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் கூடுதல் தகவல் பெற 104 என்ற எண்ணையும், 044-24350496 / 24334811 என்ற தொலைபேசி எண்களையும் 9444340496 / 9361482899 என்ற கைப்பேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

டெங்கு காய்ச்சல் மரணங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 02.10.2017 அன்று நடைபெற்ற டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் முழுவதும் வாரம்தோறும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு தடுப்பு தினமாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Call this number to know more about Dengue

இதனையடுத்து பள்ளிகளில் டெங்கு தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. நாளிதழ் விளம்பரங்கள், திரையரங்குகள், தொலைக்காட்சி சேனல்கள், மற்றும் குறும்படங்கள் மூலம் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அரசு அலுவலகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் எல்.ஈ.டி. திரை வாகனங்கள் மூலம் டெங்கு விழிப்புணர்வு வீடியோ படக்காட்சியினை ஒளிபரப்பு செய்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சுய உதவி குழுக்கள் மூலம் தமிழகம் முழுவதும் பேரணி போன்ற டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள், செவிலியர் கல்லூரி முதல்வர்கள், தமிழ்நாடு மருந்து கடை உரிமையாளர்கள், உணவு வணிகம் செய்பவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அவர்கள் மூலமாக அனைத்து பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள், நீலவேம்பு குடிநீர் வழங்குதல், சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தூய்மை செய்யப்படாத இடங்கள் மற்றும் டெங்கு புழுக்கள் உற்பத்தியாகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டால் பொது சுகாதார சட்டம், 1939 பிரிவுகள் 83, 84 சட்டப்பிரிவுகள் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 269-ன்படி, சட்டப்படி உரிமையாளர் மீது நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் காய்ச்சல் கண்டவுடன் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி தகுந்த சிகிச்சையை பெற வேண்டும். மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து கடைகளுக்கு சென்று தாமாகவே மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காய்ச்சல் கண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளும் உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படி சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல் குறைந்த பின்பும் நீர்ச்சத்துக் குறைவு மற்றும் இதர பிரச்சினைகளால் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் காய்ச்சல் நின்ற பின்பும் மூன்று நாட்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பசி எடுக்கவில்லை என்றாலோ சோர்வாக இருந்தாலோ மீண்டும் மருத்துவரை அணுக வேண்டும். போதிய நீர் மற்றும் திரவ உணவுகளை அருந்த வேண்டும். தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

உரிய மருந்து சீட்டு இல்லாமல் மருந்து கொடுக்கும் மருந்து கடைகள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுசுகாதாரம் மற்றம் நோய்த் தடுப்பு இயக்குநர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை வலுப்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் நிலைமையை கண்காணித்து வருகிறது.

பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் குறித்து கூடுதல் தகவல் பெற 104 என்ற எண்ணையும், 044-24350496 / 24334811 என்ற தொலைபேசி எண்களையும் 9444340496 / 9361482899 என்ற கைப்பேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம். கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணிகளை மக்கள் இயக்கமாக செயல்படுத்திடவும், தொடர்புடைய துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைப்பு பணிகளை தொய்வில்லாமல் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

தமிழக அரசு முழு முனைப்புடன் செயல்படுத்தி வரும் பன்முக தொடர் நடவடிக்கைகளில் அனைவரும் பங்கெடுத்து டெங்கு இல்லா தமிழகத்தை உருவாக்குவது அனைத்து மக்களின் சமூகக் கடமையாகும். இப்பணியில் அனைவரும் தமது பங்கினை உணர்ந்து செயல்பட்டால் இந்நோய்த்தடுப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக செயல்படுத்த இயலும். என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

English summary
TN govt has given a new Telephone numbers to know more about the Dengue menace.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X