For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனியார் பள்ளிகளில் 25% இடங்களை நிரப்புவதில் முறைகேடு: ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் முறைகேடான மாணவர் சேர்க்கைக்கு சட்டரீதியான அங்கீகாரம் தரவே வருமான வரிச் சான்றிதழ் கோரவேண்டாம் என மெட்ரிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் படி, தமிழக தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கலுக்கும் 25 சதவீத இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது. ஆனால், மெட்ரிக் கல்வித்துறை இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் வருமான வரிச் சான்றிதழ் கேட்டு வற்புறுத்த வேண்டாம் என தனியார் பள்ளிகளுக்கு தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் இடஒதுக்கீட்டில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இந்த சுற்றறிக்கையை தமிழக அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

கடைசி தேதி...

கடைசி தேதி...

தமிழ்நாட்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் நலிவடைந்த, பின்தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 25 சதவீத இடங்களுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை இம்மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின் விண்ணப்பங்கள் ஆய்வுசெய்யப்படவுள்ள நிலையில் மெட்ரிக் கல்வித் துறை பிறப்பித்துள்ள ஆணை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வருமான வரிச் சான்றிதழ்...

வருமான வரிச் சான்றிதழ்...

கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி ஒவ்வொரு பள்ளியிலும் நலிவடைந்த (Weaker section) மற்றும் பின்தங்கிய (Disadvantaged section) பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் வருமானச் சான்றிதழ் வழங்கும்படி பள்ளி நிர்வாகங்கள் கோரக்கூடாது என்பது தான் மெட்ரிக் கல்வித்துறை பிறப்பித்துள்ள ஆணை ஆகும். இதற்கான சுற்றறிக்கையை அனைத்துப் பள்ளிகளுக்கும் மெட்ரிக் கல்வி இயக்குனர் அனுப்பி வைத்துள்ளார். இந்த ஆணையை மேலோட்டமாக பார்க்கும்போது ஏதோ சலுகை போன்று தோன்றும்; ஆனால், இது உண்மையில் கல்வி பெறும் உரிமையின் நோக்கத்தை அடியோடு தகர்க்கும் மோசமான நடவடிக்கை.

கல்வி உரிமைச் சட்ட விதிகள்...

கல்வி உரிமைச் சட்ட விதிகள்...

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி 25 விழுக்காடு இடங்கள் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டதன் நோக்கமே சமூகத்தின் அடித்தளத்தில் உள்ள மக்கள் கல்வி பெற பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது என்பது தான். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்களின் குழந்தைகள் நலிவடைந்த பிரிவினராகவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமிய, பட்டியலின, பழங்குடியின, அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளும், ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளும் பின்தங்கிய பிரிவினராகவும் கருதப்படுவர் என்றும் கல்வி உரிமைச் சட்ட விதிகள் தெரிவிக்கின்றன.

பொய் கணக்குக் காட்ட வாய்ப்பு...

பொய் கணக்குக் காட்ட வாய்ப்பு...

பின்தங்கிய பிரிவினருக்கு வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும் அப்பிரிவிலுள்ள பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த குழந்தைகளுக்குத் தான் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் இடம் வழங்கப்பட வேண்டும். உதாரணமாக, ஒருவர் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவராகவே இருந்தாலும் அவர் பொருளாதார அடிப்படையில் வலுவானவராக இருந்தால் இந்த ஒதுக்கீட்டின் கீழ் இடம் வழங்கக்கூடாது. இதற்கு 2 காரணங்கள் உள்ளன. ஒன்று இது முழுக்க முழுக்க ஏழைகளுக்கான ஒதுக்கீடு ஆகும். இன்னொன்று இட ஒதுக்கீட்டு விதிகளின் கீழ் பயனடையும் பிரிவினருக்கு மீதமுள்ள 75 சதவீத இடங்களில் உரிய இடஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பின்தங்கிய பிரிவினருக்கும் வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு அதனடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அவ்வாறு இருக்கும்போது பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களிடம் வருமானச் சான்றுகளைக் கோரக்கூடாது என்று அரசு ஆணையிட்டிருப்பதால், அப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், பெரும்தொகையை பெற்றுக் கொண்டு பணக்கார மாணவர்களைச் சேர்த்துவிட்டு, அவர்கள் அனைவரும் பின்தங்கிய பிரிவினர் என்று தனியார் பள்ளி நிர்வாகங்கள் பொய்யாக கணக்கு காட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

கட்டணக் கொள்ளை...

கட்டணக் கொள்ளை...

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு 20 நாட்களுக்கும் மேலாகிவிட்டன. 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களைச் சேர்க்க இப்போது தான் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன; அவர்களைச் சேர்க்கும் நடைமுறை அடுத்த மாதத்தில் தான் தொடங்கும் என ஏட்டளவில் கூறப்படும் போதிலும், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இந்த இடங்கள் பணக்கார மாணவர்களைக் கொண்டு நிரப்பப் பட்டுவிட்டன என்பது தான் உண்மை. இவ்வாறு முறைகேடாக செய்யப்பட்ட மாணவர் சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் தரவே இப்படி ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது. தனியார் பள்ளிகள் காலம்காலமாக கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டுவரும் போதிலும் அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதைப் பார்க்கும்போது இந்த ஐயம் வலுப்படுகிறது. எனவே, மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும்.

புதிய விண்ணப்பங்கள்...

புதிய விண்ணப்பங்கள்...

மேலும், 25 சதவீத இடங்கள் முறையாக நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். எனவே, முதல் கட்டமாக 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்காக இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரிகள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் பிரதிநிதிகளைக் கொண்டு ஆய்வு செய்து, ஒற்றைச் சாளர முறையில் தகுதியுள்ள மாணவர்கள் சேர்க்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை 25 விழுக்காடு இடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை என்றால், காலியாக உள்ள இடங்களுக்கு கல்விபெறும் உரிமைச் சட்டப்படி அடுத்த 6 மாதங்களுக்குள் புதிதாக விண்ணப்பங்களைப் பெற்று இதேமுறையில் தமிழக அரசு நிரப்ப வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

English summary
The PMK founder Ramadoss has insisted the Tamilnadu government to candidate its order on right to education act, which gives exemption for income proof.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X