For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரையில் தீராத கோஷ்டி மோதல்: ஸ்டாலின் ஆதரவாளர்கள் மீது வழக்கு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் மு.க.ஸ்டாலின் ஆதரவாளரான முன்னாள் மேயர் குழந்தைவேலு உள்ளிட்ட 2 பேர் மீது மு.க.அழகிரி ஆதரவாளர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

மதுரையில் கடந்த சில ஆண்டுகளாகவே திமுகவில் தென் மண்டல அமைப்புச் செயலர் மு.க.அழகிரி ஆதரவாளர்களுக்கும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த மு.க.அழகிரி, கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினை ஏற்க முடியாது என மறைமுகமாக கூறினார். இந்த நிலையில், சமீபத்தில் கோஷ்டி மோதல் காரணமாக மு.க. அழகிரி ஆதரவாளர்களான முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்ட 5 பேர் கட்சியிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

பொங்கல் விழாவை முன்னிட்டு திமுக கொடியை அழகிரி குடியிருக்கும் பகுதியில் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஏற்ற முயன்றனர். இதனால் அழகிரி ஆதரவாளர்கள் கொடியேற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இத்தகைய சூழலில் பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த அழகிரி ஆதரவாளர் கண்ணன் சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் கடந்த 17-ம் தேதி புகார் அளித்துள்ளார். புகாரில், மு.க.அழகிரி பிறந்தநாளை முன்னிட்டு பழங்காநத்தம் பிரதான சாலையில் உள்ள கல்லறை சுவற்றில் விளம்பரம் எழுதியதாகவும், அப்போது காரில் வந்த முன்னாள் மேயர் பி. குழந்தைவேலு, திமுக பகுதிச் செயலர் எம்.ஜெயராமன் ஆகியோர் தன்னை மிரட்டி, சாதியைக் கூறி திட்டியதாகவும் கண்ணன் கூறியுள்ளார். இதையடுத்து, திமுக முன்னாள் மேயர் பி.குழந்தைவேலு, பகுதிச் செயலர் எம்.ஜெயராமன் ஆகியோர் மீது 294, 506 (1) மற்றும் தீண்டாமை தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்துள்ளதாக போலீஸார் கூறினர்.

மக்களவைத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என மு.க.அழகிரி கூறி வருகிறார். இதனால் அழகிரி மீது திமுக தலைவர் கருணாநிதி கோபமடைந்து, அதன் விளைவாகவே மு.க.அழகிரி ஆதரவாளர் கட்சியிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால், இரண்டுமுறை கருணாநிதியை மு.க.அழகிரி சமீபத்தில் சந்தித்துப் பேசினார். இதனால் கோஷ்டி மோதல் முடிவுக்கு வந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது போலீஸில் புகார் அளிக்கும் அளவுக்கு கோஷ்டி மோதல் அதிகரித்துள்ளது.

சகோதர யுத்தம் குடும்பத்தோடு நில்லாமல் கட்சியினரையும் பாதித்து வருவதால் திமுக தொண்டர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

English summary
A complaint has been lodged against former Mayor P. Kulandaivelu, and DMK functionary, M. Jeyaram, under the Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X