For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

10 மாதங்களில் 100 கொலைகள்… ஜாதி கொலைகள் 25: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓடும் ரத்த ஆறுகள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருநெல்வேலி / தூத்துக்குடி: நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக அடுத்தடுத்து அரங்கேறிவரும் கொலைகளால் மக்கள் அதிர்ந்து போயுள்ளனர். பழிக்குப்பழி கொலைகள், ஜாதிய ரீதியான கொலைகள், அரசியல் கொலைகள், ஆதாயக் கொலைகள், காதல் கொலைகள் என அடுத்தடுத்து அரங்கேறிவரும் கொலைகளால் இந்த இரு மாவட்டங்களிலும் ரத்த ஆறு ஓடுகிறது. இதனால் ஏற்படும் பதற்றங்களினால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த இரு மாவட்டங்களிலும் கடந்த 6 மாதங்களில் மட்டும் 64 கொலைகள் அரங்கேறிய நிலையில் கடந்த 15 நாட்களில் 11 கொலைகள் நடைபெற்றுள்ளதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

Murder

இந்த இரண்டு மாவட்டங்களிலும் கடந்த 10 மாவட்டங்களில் மட்டும் 100 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 25 பேர் ஜாதி ரீதியாக கொல்லப்பட்டுள்ளனராம்.

அரசியல் கொலைகள்

கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஐயப்பன் வெட்டிக்கொல்லப்பட்டார். அதே நாளில் ஸ்ரீவைகுண்டத்தில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகி பாஸ்கரன் கொல்லப்பட்டார்.

கொலையால் பதற்றம்

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி புதுமனை தெற்கு தெருவைச் சேர்ந்த அதிமுக கிளை செயலாளரான பிச்சையா (57). என்பவரை செவ்வாய்கிழமையன்று ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் தெருக்களில் புகுந்து வீடுகளை சூறையாடி பொருட்களை அடித்து நொறுக்கினர். காமராஜர் சிலை உடைக்கப்பட்டது. 2வது நாளாக பதற்றம் நீடிப்பதால் வீடுகளை காலிசெய்துவிட்டு பலர் சென்றுவிட்டனர்.

24 மணி நேரத்தில் 3 கொலை

இதே போல நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 24 மணி நேரத்தில் 3 கொலைகள் நடைபெற்றன. நாங்குநேரி நம்பிநகர் பகுதியை சேர்ந்தவர் நல்லக்கண்ணு (வயது 30 ), இவரை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி சாய்த்தது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வல்லநாட்டில் ஒருவர் கொலை, ஏ.டி.எம். காவலாளிக்கு வெட்டு என அடுத்தடுத்து அதிரவைத்தது.

தூத்துக்குடியில் பதற்றம்

தமிழகத்தில் எங்கு கொலை நிகழ்ந்தாலும் அதில் ஈடுபட்டவர்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவரும் இருக்கிறார் என்ற அவப்பெயர் பல ஆண்டுகளாகவே நிலவுகிறது.

கொலைப்பட்டியல்

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2007-ம் ஆண்டில் 90 கொலைகள், 2008-ல் 89, 2009-ல் 95, 2010-ல் 83, 2011-ல் 97, 2012-ல் 93, 2013-ல் 98 கொலைகள் நடைபெற்றதாக காவல் துறை தெரிவிக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை கூலிப் படையினராலும், 25 சதவீத கொலைகள் ஜாதிய மோதல் பின்னணியிலும் நிகழ்ந்தவை.

ரவுடிகள் பட்டியல்

சில ஆண்டுகளுக்கு முன் தமிழக காவல் துறை சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் பராமரிக்கப்படும் ரவுடிகள் பட்டியலின்படி 16,502 ரவுடிகள் இருப்பதாக தெரிவிக்கப் பட்டிருந்தது.

சென்னை நம்பர் 1

இந்த பட்டியலில் சென்னைக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் 3,175 ரவுடிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2வது இடம் திருநெல்வேலி மாவட்டத்துக்கு. திருநெல்வேலி மாநகரில் மட்டும் 334 ரவுடிகளும், புறநகர் பகுதிகளில் 1,214 ரவுடிகளும் இருக்கின்றனராம்.

10 மாதங்களில் 100 கொலைகள்

கடந்த 10 மாதங்களில் திருநெல் வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 100 கொலைகள் நடைபெற்றுள்ளன. சொத்துத் தகராறு, குடும்பத் தகராறு, முறைகேடான உறவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 70 சதவீத கொலைகள் நடைபெற்றுள்ளன.

ஜாதி கொலைகள் அதிகம்

இந்த மாவட்டங்களில் ஜாதி மோதல் காரணமாக மட்டும் 2 மாதங்களாக தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் தொடர் கொலைகள் அரங்கேறி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி. ஜாதி மோதல்களை முளையிலேயே கிள்ளி எறியும் அளவுக்கு இந்த மாவட்டங்களில் உளவுப் பிரிவு போலீஸார் செயல்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரச்சினைக்கு காரணம்

`ஜாதி மோதல்களை தூண்டி விடும் அளவுக்கு முக்கிய ஜாதிகளை சேர்ந்த சாதாரண போலீஸார் முதல் உயர் அதிகாரிகள் வரை செயல்படுவதும் பிரச்சினைக்கு தூபம்போடுவதாக இருக்கிறது என்று உயர் போலீஸ் அதிகாரியே குற்றம் சாட்டியுள்ளார்.

கூலிப்படைகள்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை குறிவைக்கும் சமூகவிரோத கும்பல், அவர்களை கூலிப்படையாக பயன்படுத்துகிறது. அந்த கூலிப் படையினரை ஏவும் முக்கிய புள்ளிகளை கைது செய்ய போலீஸார் தயங்குவதாலேயே பிரச்சினை முடிவுறாமல் தொடர்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

போலீசுக்கு பொறுப்பு

குற்றவாளிகளையும், அதற்கு தூண்டுகோலாக இருப்பவர் களையும், அவர்களுக்கு அடைக்கலம் தருவோரையும் பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தும் பொறுப்பு போலீஸாருக்கு இருக்கிறது. ஆனால், அதிலிருந்து அவர்கள் விலகிச் சென்றுவிட்டதால் ஜாதி மோதல் கொலைகள் தொடர்கதையாகி வருகின்றன' என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆயுத வன்முறையாளர்கள் குறித்த கணக்கெடுப்பும், குற்றவாளிகளின் ஜாதி சார்ந்த கணக்கெடுப்பும், இளங்குற்றவாளிகள் குறித்த ஆய்வும் அவசியம். அதன் தொடர்ச்சியாக ரவுடிகள் ராஜ்யத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்பதும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

English summary
In Nellai Thoothukudi districts around 100 murders including 25 Dalits were murdered in inter-caste conflicts in these two southern districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X